பெண் இன்று

நிகரெனக் கொள்வோம் 04: வினையாகும்  சாகச சவாரி

செய்திப்பிரிவு

ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய வயதுடைய மாணவன் அதிவேகமாக ஆக்டிவா வண்டியைத் தவறான பாதையில் ஓட்டி வருகிறான். எதிரில் வந்த வண்டியின் மீது வாகனம் மோதுகிறது. எதிர் வண்டியில் வந்தவர் 40 வயது மதிக்கத்தக்கப் பெண். இரு வண்டிகளும் கீழே விழுகின்றன. இருவரையும் இரண்டு வண்டிகளையும் தூக்கிவிடுகிறோம்.

வண்டியை ஓட்டிவந்த சிறுவனுக்குப் பெரிதாகக் காயமில்லை அல்லது அவன் காட்டிக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணுக்கு நல்ல அடி. அவரை நாங்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, அவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். எங்களுக்கோ அடக்க முடியாத கோபம். அடிபட்டவரின் கால்களைக் கவனிக்க முடியாத அளவுக்குக் கோபம். சற்று நேரத்தில் இன்னும் பலர் கூடினர். அடிபட்டவரின் வீட்டுக்குத் தகவல் தெரிவித்தோம்; அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் அனுப்பினோம். வந்து நின்ற எல்லோரும் கதையைக் கேட்டார்கள். ஆண் குழந்தைகள் என்ற பொது அடையாளத்தை முன்வைத்துக் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் திட்டித் தீர்த்தனர்.

அனுபவக் கதைகள்

திட்டியவர்களின் வீட்டிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் குழந்தை இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், அவர்கள் தங்கள் பிள்ளைகளின் அடங்காத தனம் பற்றி அதிகம் பேசினார்கள். இன்றைக்குக் காலம் கெட்டுப்போனதைப் பற்றி நேரம் போவதை மறந்து பேசினார்கள். ‘எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் மகன் பன்னிரண்டாம் வகுப்புப் பரீட்சை எழுதுவதற்காக பைக் வாங்கிக்கொடுத்தார்கள். எட்டாம் வகுப்பு மாணவன் வண்டியோட்டிச் சென்றபோது விபத்தில் இறந்தான்’ என்பது போன்ற கதைகளைப் பேசினார்கள்.

புதுச்சேரியில் 12-ம் வகுப்புத் தேர்வெழுதும் மாணவர்கள் கடைசி நாளன்று பைக்கில் சென்று இறுதித் தேர்வு முடிந்ததைக் கொண்டாடும் பழக்கம் வழக்கமாகியிருக்கிறது. காவல் துறை அதைத் தவிர்க்க பல வழிமுறைகளை மேற்கொண்டுவருகிறது. வாகனங்களைப் பிடிப்பது, கடுமையான அபராதம் விதிப்பது, பெற்றோரை வரவழைத்துப் பேசுவது எனப் பல வழிகளில் அவர்கள் செயல்படுகின்றனர். ஆனாலும், எதுவும் குறைந்த மாதிரி தெரியவில்லை.

பெற்றோரின் சமாதானம்

தன் மகன் இந்தச் சமூகத்துக்குப் பொறுப்பாகச் செயல்பட வேண்டியவன் என்பது பற்றிய புரிதல் இல்லாதவர்களாகவே பல பெற்றோர் இருக்க விரும்புகின்றனர். அவர்களது பண்பாட்டுப் பழக்கமான ஆண்மையச் சிந்தனையின் அடிப்படையில் ஆண் குழந்தையை வளர்க்கின்றனர். அதனால்தான் அவன் தறிகெட்டு வாகனம் ஓட்டுவதை, ஆபத்தாகக் கருதாமல் ஆண் பிள்ளைகளில் அடையாளமாகக் கருதுகிறார்கள். ஆனால், இதுதான் ஆண் குழந்தைகளின் பல்வேறு தகாத செயல்பாடுகளுக்கான அடித்தளமாக இருக்கிறது. அது வாகனத்தில் செல்பவர்களை முந்திச்செல்வது, மூன்று நான்கு பேராகச் சேர்ந்து பயணிப்பது, தேவையில்லாத ஒலி- ஒளிகளை எழுப்பிச் செல்வது, கைகளை விட்டுவிட்டு ஓட்டுவது, குறிப்பிட்ட பெண் பிள்ளைகளைக் கவர்வதற்காக சாகசமாக வண்டியை இயக்குவது, வண்டியில் செல்வதற்காக இடங்களைத் தேர்ந்தெடுப்பது என வளர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால், அதையும் பெரும்பாலான பெற்றோர் வியந்துதான் பேசுகின்றனர். சிலர் தங்கள் மகனின் விபரீதமான வண்டியோட்டும் திறமை குறித்துத் தங்களையே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர்.

“அவனுக்கு எவ்வளவு அறிவு! இதெல்லாம் சொல்லிக்கொடுக்காமலே வருகிறது”

“ஆம்பளப் புள்ளன்னா இப்படியெல்லாம் இருக்கும்தான. சட்டம் சொல்றதையெல்லாம் செய்ய முடியுமா என்ன?”
“என்னைப் போலத்தானே என் பிள்ளையும் இருப்பான்”
“என் புள்ள மட்டுமா இப்படி இருக்கான். ஊரே அப்படித்தான் இருக்கு”
“மற்ற பெற்றோர் அனுமதிப்பதால்தான் என் பிள்ளையும் சேர்ந்து கெட்டுப்போகிறான்”

- இதுபோன்ற சமாதானங்களும் விளக்கங் களும் எதனால் ஏற்படுகின்றன?

பெற்றோர்கள் தங்கள் மகன்களின் தேவையைப் பூர்த்திசெய்வதைப் பெருமையாகப் பார்ப்பதன் விளைவுதான் இது. அல்லது பல்வேறு நிர்ப்பந்தங்களால் ஆண்பிள்ளைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். விபத்து, அதனால் ஏற்படும் உடலுறுப்பு இழப்பு, மரணங்கள் போன்றவற்றை எங்கோ நடக்கும் ஒன்றாக எண்ணித் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். உண்மையில் அவர்கள் கையறு நிலையில் தவிக்கின்றனர். ஆனால், அதைச் சமாளிக்க சில உத்திகளை ஆயுதங்களாக எடுக்கின்றனர்.

மற்றவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இப்படியான சாகச சவாரியை மாணவர்களும் இளைஞர்களும் தங்களின் மதிப்புமிக்க திறனாகக் கருதுவதில் வாகன விளம்பரங்களுக்கும் பொழுதுபோக்குத் திரைப்படங்களின் உச்ச நட்சத்திரங்களுக்கும் பெரும்பங்குண்டு.

என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர் தாங்கள் வாழ விரும்பும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இளைஞர்களின் இந்த சாகச சவாரி இருக்கிறது. இதனால், தங்கள் குழந்தைக்கு எது தேவை, எது தேவையில்லை என யோசிக்கவும் முடிவெடுக்கவும் முடியாதவர்களாக, செம்மறியாடுபோல் மற்றவர்களைப் பெற்றோர் பின்தொடர்கின்றனர். தங்கள் குழந்தையோடு உரையாடுவது, மற்ற பல விஷயங்களில் முன்மாதிரியாக இருப்பது போன்றவற்றைச் செய்வதில்லை. ஆனால், பிறர் வீட்டில் வண்டி வாங்கித் தந்துவிட்டால் தங்கள் மகனுக்கும் வாங்கித் தந்துவிடுகின்றனர்.

மோட்டார் வாகன விதிகள், சட்டங்கள் தெரியாத எவரும் (பெற்றோர்கள்) வாகனங்கள் வைத்திருப்பதில்லை. காரணம் வாகன விற்பனை, ஓட்டுநர் உரிமம் சார்ந்த விஷயங்கள் அந்த அளவுக்கு உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆனால், விதிகளைத் தெரிந்து வைத்திருக்கும் நாம் அவ்விதிகளைப் பின்பற்றுகிறோமா? பின்பற்றினால் 18 வயது நிரம்பாத மகனுக்கு வண்டி வாங்கித் தருவோமா?
அரசாங்கம், கல்வி, ஊடகங்கள், வியாபாரம், விளம்பரம் எனப் பலர் கூடித் தேர் இழுக்கும் விஷயமாகத்தான் சாகச சவாரி இருக்கிறது. பெற்றோராகவும் சமூகத்தின் அங்கத்தினராகவும் நம் வளரும் குழந்தைகளைப் பலிகடாவாக்கும் இந்த வாகன சவாரி விஷயத்தைப் பள்ளிச் செயல்பாடுகளுள் ஒன்றாகவும்தான் நாம் பார்க்க வேண்டும்.

அதேநேரம் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தங்கள் ஆண் குழந்தைகளுக்கான சிறப்புச் செயல்பாடுகள், புரிதல்கள், ஆண் மகன் என்பதற்கான அர்த்தமுள்ள விளக்கம் ஆகியவற்றைக் கொடுத்து வளர்க்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் அதிகமாக வாகனங்களை ஓட்டத் தொடங்கிய பின்பு, பெண் குழந்தைகள் வண்டி ஓட்டும்போது கொடுக்கும் அறிவுரைகளையும் பாதுகாப்பு ஆலோசனைகளையும் ஆண் பிள்ளைகளுக்கும் தர வேண்டும். கீழே விழுந்தால் அடி பெண்ணுக்குப் படுவது போலவே ஆணுக்கும் படும்.

(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.

தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

SCROLL FOR NEXT