‘சாய் சகோதரிகள்’ என்ற அடையாளத்துடன் இசை உலகில் அறிமுகமாகியிருப்பவர்கள் சாய்கிரண், சாய் நிவேதிதா. டாக்டர் சி.எம். வெங்கடாசலம், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணா ஆகியோரிடம் கர்னாடக இசைப் பயற்சியை எடுத்துக்கொண்டிருப்பவர்கள். கர்னாடக இசைப் பாடகி காயத்ரி வெங்கட்ராகவனிடமும் இசைப் பயிற்சியைத் தொடர்ந்துவருகின்றனர். இந்தியாவின் முக்கிய சபாக்களிலும் அமெரிக்காவிலும் சென்னை இசை விழாக்களிலும் பரவலாக இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். 2015-ல் அமெரிக்காவில் நடந்த போட்டியில் ‘சங்கீத் சாம்ராட்’ விருதைப் பெற்றிருக்கும் இளம் கலைஞர்கள் இவர்கள். கிளீவ்லேண்டில் நடைபெறும் தியாகராஜ ஆராதனையில் பங்கேற்று சிறந்த பல்லவி பாடுபவர்களுக்கான விருதைப் பெற்றிருக்கின்றனர். ஹரிஹரன் வெங்கட்ராமன் இசையில் இவர்கள் பாடியிருக்கும் சாய்பஜன் பாடல்களின் இசைக் குறுந்தகடுகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு.
பாரம்பரிய இந்தியக் கலைகளோடு சில தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் மேற்கத்திய இசையிலும் ஜொலிப்பவர் ஷில்வி ஷாரன். மேற்குலகின் பிரபல பாப், ப்ளூஸ், ராக், மேற்குலகச் செவ்வியல் பாணி இசையில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ், தரண், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோரின் இசையில் பாடியிருக்கிறார். இளையராஜா இசையில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் இசை வெளியீட்டின்போது, புகழ்பெற்ற சிம்பொனி இசைக் குழுக்களில் ஒன்றான புடாபெஸ்ட் இசைக் குழுவினருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் ஷில்வி. ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் பாடகி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வியன்னா பல்கலைக்கழக இசைக் குழுவில் பங்கெடுத்துப் பாடியிருக்கும் இவர், அடையாறு எம்ஓடி இசைப் பள்ளியில் இசைப் பணியையும் செய்துவருகிறார். தமிழில் ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் முத்திரைப் பாடலில் ஒலிக்கும் குரல் இவருடையதுதான். மேற்குலக இசையையும் இந்திய இசையையும் ஒரே புள்ளியில் சங்கமிக்க வைக்கும் இவருடைய பாணிக்கு யூடியூபில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
நடந்து முடிந்த இசை நாட்டிய விழாவில் பல இளம் கலைஞர்கள் சுடர்விட்டுப் பிரகாசித்தனர். ஸ்வாதி ரங்கநாத்துக்கு அவருடைய பெற்றோர் டாக்டர் கே.என்.ரங்கநாத்தும் மோகனாவுமே இசை குருக்கள். தமிழகம், கேரளத்தின் முக்கிய சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கும் இவர், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிசிஆர்டி-யின் உதவித்தொகையைப் பெற்றிருப்பவர். தற்போது மியூசிக் அகாடமியில் சிறப்பு இசைப் பயிற்சியைப் பெற்றுவருகிறார். இசையுடன் நடனப் பயிற்சியிலும் தன்னை மெருகேற்றிவருகிறார். டாக்டர் பால நந்தகுமாரிடம் பரதநாட்டியம் கற்று நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். அண்மையில் மியூசிக் அகாடமியில் டாக்டர் எஸ்.சௌமியாவின் இயக்கத்தில் மாணவிகள் அரங்கேற்றிய கோபாலகிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் சரித்திரம்’ நாடகத்தில் நடராஜராகத் தன் நாட்டிய திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.