பெண் இன்று

நாயகி 04: வருவான் ஒரு ராஜகுமாரன்

செய்திப்பிரிவு

படிப்பும் பொருளீட்டலும் பெண்ணுக்குச் சிறகுகள் பூட்டத்தானே? ஆனால், சில நேரம் அதுவே விலங்காகி விடுகிறதோ என நம்மை யோசிக்க வைக்கிறாள் எழுத்தாளர் அமரந்த்தாவின் ‘வருவான் ஒரு ராஜகுமாரன்’ கதையின் நாயகி. பொருளாதாரச் சுரண்டலும் ஒருவகை விலங்குதானே? மறைமுகமாகப் பெண்கள் எதிர்கொள்ளும் வஞ்சகம்தானே?

பதினெட்டு வயது முதல் குடும்பத்துக்காகப் பத்து வருடங்களுக்கும் மேலாக வேலைக்கு ஓடிக்கொண்டிருப்பவள் அவள். பள்ளி செல்லும் தம்பி, தங்கைகள், அப்பாவி அம்மா, பொறுப்பில்லாத அப்பா என்று குடும்பத்திலுள்ள எட்டுப் பேருக்குமான பொறுப்புகளையும் தாங்கும் சுமைதாங்கி யாய்த் தான் மாறிய கதையை நாயகியே நமக்குச் சொல்கிறாள்.

தம்பி வேலைக்குப் போக ஆரம்பித்ததும் வாழ்க்கை ஓரளவு மாறிவிடும் என நம்பி ஆசுவாசம் கொள்கிறாள். 28-ம் வயதில் ஓடிக் களைத்த ஒரு தினத்தில் அவளுக்குத் தன் சுமைகளை இறக்கிவைக்க வேண்டும் என்கிற ஆசை பிறக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக மரத்துப் போயிருந்த உணர்வுகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன. வறண்டு போயிருந்த அவள் மனத்தில் சுரேஷின் இயல்பான குணம் நெகிழ்வை உண்டாக்குகிறது.

கலைந்துபோன கனவு

சுரேஷுக்குத் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை. இனி முதுகை ஒடித்துக்கொள்ள வேண்டியிருக்காது என நிம்மதி கொள்கிறாள். கல்யாணமானதும் வேலையை விடும் யோசனை பற்றி அவனிடம் பேசிவிட நினைக்கிறாள். சரியான உறக்கம்கூட இல்லாமல் காலை ஏழு மணிக்கெல்லாம் பழையதைத் தின்றுவிட்டு, கொதிக்கும் டிபன் பாக்ஸைத் தூக்கிக்கொண்டு ஓடும் கொடுமையிலிருந்து தனக்கு இனி விடுதலை என்று மகிழ்வில் திளைக்கிறாள். ஆனால், அவளது ஆசை எனும் பலூன் பட்டென்று உடைந்து போகிறது.

“எனக்கு முகப்பேர்ல ஒரு மனை இருக்கு. கல்யாணம் ஆன உடனே உன் பேருக்கு மாத்தி ரெஜிஸ்தர் பண்ணிடறேன். நீ ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் போட்டுடு. ஆறே மாதத்தில் கட்டிடலாம்” என்று சொல்லி அவள் கனவைக் கலைக்கிறான் சுரேஷ். உணர்வு புரிதல் இல்லாத இடத்தில் காதல் ஏது? அவ்வளவு போராட்டங்களுக்கு நடுவிலும், தன் புன்னகையை மீட்டெடுக்க வரும் ராஜகுமாரனாக அல்லவா அவனை நினைத்திருந்தாள். அந்த நிலைமையில், ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் மன ஓட்டம் அதுவாகத்தானே இருக்க முடியும்? ஆனால், அவனும் கையில் ஒரு சுமையோடு வந்து நிற்கிறான் தன் தலையில் திணிப்பதற்கு என்பதை உணர்ந்த பின் நிராசையோடு வீடு திரும்புகிறாள் நாயகி.

கணவனின் சொந்த வீட்டு ஆசைக்காக முதுகை ஒடித்துக் கொள்வதைவிடவும், தம்பி தங்கைகளைக் கரைசேர்க்க முதுகை ஒடித்துக்கொள்வதொன்றும் கடினமானதல்ல என்று நினைக்கிறாள். பிள்ளை பெறும் இயந்திரமாய்ப் பல காலமாய்ப் பெண்ணைப் பார்த்து வந்த ஆணாதிக்கச் சிந்தனை, இன்றைய நவீன காலத்தில் பெண்ணைப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய்ப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. மாற்றம் ஒவ்வொரு பெண்ணிலிருந்தும் தொடங்க வேண்டும். ஏனெனில், துயரங்களை அனுபவிப்பவர்கள் பெண்கள்தானே?

ஆனால், பெண்ணியம் என்பது ஒரு போதும் ஆணுக்கு எதிரானதல்ல. பெண்ணின் மகத்துவத்தை ஆணாதிக்கச் சமுதாயத்துக்கு உணரவைப்பது. சுரேஷுக்குத் தன் எண்ணத்தைத் தெரிவிக்கிறாள் நாயகி. அதே நேரம் அவள் ஒரு தொடர்கதையாக விரும்பவில்லை. ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் போடச்சொல்லாத தங்க மனசுக்கார ராஜகுமாரன் வருவான் எனக் காத்திருக்கிறாள்.

SCROLL FOR NEXT