கோபால்
2019 ஆகஸ்ட் 5-அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு மத்திய ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்குச் சில நாட்களுக்கு முன்பாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி அவர்களில் ஒருவர். மெஹபூபாவின் மகளான இல்திஜா முஃப்தி, தன் தாயின் குரலாகவும் ஒலிக்கிறார்.
ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தன் தாயின் நிலைமையையும் நிலைப் பாடுகளையும் மட்டுமல்லாமல், சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிந்தைய அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் வெளி உலகுக்குக் கொண்டுசெல்கிறார்.
ஆகஸ்ட் தொடக்கத்தில் முடக்கப்பட்ட இணைய, தொலைத்தொடர்பு சேவைகள் தற்போதுதான் படிப்படியாக வழங்கப்பட்டுவருகின்றன. இதனால் வெளியுலகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் மக்களின் குரலாகவும் ஒலிக்கிறார் இல்திஜா.
தாத்தாவின் பரிசு!
மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்பாகவே மெஹபூபா முஃப்தியின் ட்வீட்டுகள் பலவற்றை எழுதுபவர் இல்திஜாதான் என்று வதந்திகள் வந்தன. இப்போது அதுவே உண்மையாகியிருக்கிறது. வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கும் முஃப்தியின் ட்விட்டர் கணக்கை டெல்லியிலிருந்துகொண்டு இல்திஜாதான் கையாள்கிறார். இவருடைய தந்தை இக்பால் ஷா வணிகர், விலங்குகள் நலச் செயற்பாட்டாளர்.
மனைவியைப் பிரிந்ததோடு, முஃப்தி குடும்பத்தின் முதன்மை அரசியல் போட்டியாளரான தேசிய மாநாட்டுக் கட்சியில் சில காலம் உறுப்பினராக இருந்தார். தாயால் வளர்க்கப்பட்ட இல்திஜா தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் வெளிப்படுத்தும் மொழி ஆளுமையும் சொல்வளமும்கூட அவர் மீதான கவனத்தை அதிகரித்திருக்கின்றன. அவை தன் தாய்வழித் தாத்தாவான முஃப்தி முகமது சயீதிடமிருந்து பெற்ற கொடை என்கிறார். அவரே தன்னை நிறைய வாசிக்கவும் எழுதவும் பயணம் செய்யவும் ஊக்குவித்ததாகச் சொல்கிறார்.
தாய் மெஹபூபாவுடனான இல்திஜாவின் உறவு அன்பையும் நெருக்கத்தையும் மட்டுமல்லாமல் கருத்து முரண்பாடுகளையும் ஆரோக்கியமான விவாதங்களையும் உள்ளடக்கியது. “அவரை நான் எப்போதும் பாதுகாப்பேன். எந்தத் தருணத்திலும் அவருக்குத் துணையாக நிற்பேன். அதேநேரம் எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடக்கும். என் தாய்தான் எனக்கு நெருங்கிய தோழியாகவும் இருக்கிறார்” என்று தன் தாயுடனான உறவை வர்ணிக்கிறார் இல்திஜா.
கடிதத்தில் வெளிப்பட்ட அறச் சீற்றம்
370-ம் பிரிவு நீக்கத்தையும் காஷ்மீர் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் கடுமையாகவும் சீற்றத்துடன் எதிர்க்க இல்திஜா தயங்குவதில்லை. அரசு உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் இதே துணிவையும் சீற்றத்தையும் வெளிப்படுத்துகிறார். ஸ்ரீநகர் விருந்தினர் விடுதியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்க்க டெல்லியிலிருந்து நகருக்குப் போவதும் வருவதுமாக இருக்கிறார் இல்திஜா. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறை ஸ்ரீநகருக்குச் சென்ற இல்திஜா, அங்கிருந்து வெளியற அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார்.
“குரல்வளை நெறிக்கப்பட்ட காஷ்மீரி மக்களுக்காகக் குரலெழுப்புவதற்காக நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்று புரியவில்லை. நாங்கள் எதிர்கொண்டிருக்கும் வலியையும் வேதனையையும் கண்ணியக்குறைவாக நடத்தப்படும் நிலையையும் சொற்களில் வெளிப்படுத்துவது குற்றமாகுமா? இதற்காக என் இயக்கத்தை ஏன் முடக்க வேண்டும்?” என்ற கேள்விகளைத் தாங்கிய அந்தக் கடிதம் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் வசிக்கும் பகுதியைச் சென்றடைந்த சில நாட்களில், நகருக்கு வெளியே பயணிக்கும் இல்திஜாவின் உரிமை திரும்ப அளிக்கப்பட்டது.
நவம்பரில் கடுங்குளிரால் தன் தாயின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டு ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு அவர் கடிதம் எழுதிய பிறகே சூடேற்றும் கருவி இருக்கும் விடுதி அறைக்கு மெஹபூபா மாற்றப்பட்டார். சி.என்.என், பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களில் இல்திஜாவின் பேட்டி ஒளிபரப்பான பிறகு, அவர் மெஹபூபாவைச் சந்திப்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜனவரியில் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள இல்திஜாவின் தாத்தா முஃப்தி முகமது சயீதின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதற்கும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தக் குரல் ஓயாது
32 வயதாகும் இல்திஜா கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என்றோ தேசிய ஊடகங்களால் கவனிக்கப்படுவோம் என்றோ நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். வானியலாளராக விரும்பிய இல்திஜா, இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் பட்டம் பெற்றவர்.
தற்போதைய செயல்பாடுகளுக்காக, ‘காஷ்மீரின் புதிய குரல்’ என்று அறியப்பட்டாலும், தன் குடும்பத்தினரின் வழியில் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று சொல்லும் இல்திஜா, காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை என்றும் உறுதிபடக் கூறுகிறார்.
(ஸ்ரீநகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரியாஸ் வானி எழுதி ‘தி இந்து’ பிஸினஸ் லைனின்
பி-லிங்க் இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் தழுவல்).