பெண் இன்று

நன்னம்பிக்கை முனை: அன்று கால்நடை வளர்த்தார்; இன்று கால்நடை மருத்துவர்!

செய்திப்பிரிவு

கி. பார்த்திபன்

சாதிக்க நினைக்கும் நம் நாட்டுப் பெண்களுக்குப் பெரும்பாலும் திருமணம் தடையாக இருப்பதுண்டு. ஆனால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனத்தில் இருந்தால் திருமணம், குழந்தை பிறப்புக்குப் பிறகும்கூடச் சாதிக்க முடியும் என்கிறார் கால்நடை மருத்துவர் ஆனந்தி.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள காளப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்திக்கு 2012-ம் ஆண்டு திருமணமானது. தற்போது இரண்டு குழந்தைகளின் தாயாக இருக்கிறார். ‘சிறந்த குடும்பத் தலைவி’, ‘நல்ல தாய்’ போன்ற அடையாளங்களைத் தவிர, தனக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்று கல்விக் களத்தில் இறங்கினார் ஆனந்தி.

அணையாத கல்வி தீ

“எங்கள் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்தோம். ஆடு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அப்பாவுடன் நானும் கால்நடை மருத்துவமனைக்குச் செல்வேன். அங்குள்ள கால்நடை மருத்துவர்களைப் பார்த்து நானும் கால்நடை மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, 2012-ம் ஆண்டு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. உடனே திருமணமும் நடந்துவிட்டது.

ஆனாலும் கால்நடை மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் மட்டும் என்னுள் தீயாக எரிந்துகொண்டிருந்தது. அதை யாரிடமாவது சொல்லும்போது, திருமணமாகிவிட்டால் படித்து மருத்துவராக முடியாது என்றார்கள். அவர்களின் கூற்றை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

என் விருப்பத்தைத் தயங்கியபடியே கணவரிடமும் மாமியார், மாமனாரிடமும் தெரிவித்தேன். அவர்கள் என்னைப் புரிந்துகொண்டு, படிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். அந்த மகிழ்ச்சியான கணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது” என்று சொல்லும்போதே ஆனந்தியின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.

முதல் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் 2013-ம் ஆண்டு கால்நடை மருத்துவக் கலந்தாய்வுக்குச் சென்றார் ஆனந்தி. தஞ்சை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம் கிடைத்து, படிக்கத் தொடங்கினார். “கைக்குழந்தை இருந்தாலும் படிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

தஞ்சையில் வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்குச் சென்றேன். குழந்தையை என் பெற்றோர் கவனித்துக்கொண்டார்கள். அதனால் எந்த இடையூறும் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. என்னுடைய ஈடுபாட்டைக் கவனித்த கல்லூரிப் பேராசிரியர்களும் முதல்வரும் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள். குடும்பமும் கல்லூரியும் கொடுத்த ஒத்துழைப்பில் நன்றாகத் தேர்வுகளை எழுதினேன்” என்கிறார் இவர்.

தங்கப் பதக்கங்கள்

ஆனந்தியின் கடின உழைப்புக்கு மகுடம் சூட்டும் விதமாக, கால்நடைப் பல்கலைக்கழகத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் கிடைத்தது. 17 தங்கப் பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்தார் ஆனந்தி! இந்தச் சாதனைக்காகச் சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் வழங்கப்படும் ‘சிறந்த மாணவிக்கான விருதும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும்’ தமிழக ஆளுனரால் ஆனந்திக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் என்பது தடைக்கல் அல்ல, அதைப் படிக்கல்லாக மாற்றிச் சாதிக்க முடியும் என்று கம்பீரமாகச் சொல்கிறார் ஆனந்தி.

SCROLL FOR NEXT