பெண் இன்று

முகங்கள்: நேரம் தவறாமையே வெற்றி

செய்திப்பிரிவு

சு.கோமதிவிநாயகம்

ஒன்பதாம் வகுப்புப் படித்துவிட்டு வீடு மட்டுமே உலகமாக இருந்த தெய்வஜோதிக்கு, இன்று கோவில்பட்டி தொடங்கி திருச்சி வரையுள்ள ஊர்கள் அனைத்தும் அத்துப்படி. குறுகலான சாலைகளுக்குள்கூட மிக லாவகமாக காரைச் செலுத்தும் திறமைக்காகவே பெண்கள் பலரும் இவரது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் தெய்வஜோதி. இவரும் இவருடைய கணவர் கணேசனும் கார் டிரைவர்கள். மகன் சந்தோஷ் பாலாஜி 4-ம் வகுப்பும் கவிபிரியா 1-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். தான் காரோட்டக் காரணம் தன் கணவர்தான் என்கிறார் தெய்வஜோதி.

முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

இவர்களுக்குத் திருமணமானபோது தீப்பெட்டி ஆலை, ஆயத்த ஆடை நிறுவனம் என ஏதாவது ஒன்றில் வேலைக்குச் செல்வதாகக் கணவனிடம் சொல்லியிருக்கிறார் தெய்வஜோதி. அதற்கு அவரோ, “இட்லிக் கடைகூட வைத்துக்கொள். ஆனால், அடுத்தவரிடம் வேலைக்குச் செல்ல வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். எழுந்தால் சுயம்புவாகத்தான் இருக்க வேண்டும். அடுத்தவரின் கையை நம்பி இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால், தெய்வஜோதி தையல் கற்றுக்கொண்டு வீட்டில் இருந்தபடியே தைத்துவந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணேசன் ஊர் திரும்பியவுடன் ஆட்டோ ஓட்ட விரும்பியுள்ளார். அதற்கு மாமனார் வீட்டில் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும், தன் முடிவில் உறுதியுடன் நின்று ஆட்டோ வாங்கி ஓட்டினார் கணேசன். அப்போது அவர் இல்லாத நேரத்தில், ஆட்டோவை எடுத்து ஓரமாக விடுவது தெய்வஜோதியின் வேலை. அதுதான் அவரது டிரைவர் ஆசைக்கு வித்திட்டுள்ளது.

மனைவியின் ஆர்வத்தைப் பார்த்த கணேசன், ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொடுத்ததோடு ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தந்துள்ளார். 2016-ல் கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார் தெய்வஜோதி. கோவில்பட்டி நகரப்பகுதியில் முதன்முதலில் ஆட்டோ ஓட்டிய பெருமைக்கும் அவரே சொந்தக்காரர் ஆனார்.

பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்வது, அருகே உள்ளவர்கனின் அவசரத் தேவைகளுக்கு மருத்துவமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றுக்கு அழைத்துச் செல்வதுதான் தெய்வஜோதியின் முதல் பணியாக இருந்தது. பிறகு அவரது கவனம் கார் மீது திரும்பியது. தனது ஆசையைக் கணவரிடம் தெரிவித்தார். “எப்போதுமே சுயதொழில்தான் மனிதனைத் தன்னம்பிக்கையுடன் வாழ வைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார். அதனால், அடுத்த நாளே கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்” என்று சொல்லும் தெய்வஜோதி, அதன் பிறகு வாடகை கார் ஓட்ட பேட்ஜ் உரிமம் பெற்றார். 2017-ல் இருந்து கணவன், மனைவி இருவருமே ஆட்டோ, கார் என மாறி மாறி ஓட்டினர்.

மனைவியால் நிறைவடைந்த வாழ்க்கை

“நான் கார் ஓட்டுவதைப் பார்த்த வேலைக்குச் செல்லும் பெண்கள் என் நிரந்தர வாடிக்கையாளர்களாக ஆனார்கள். நேரம் தவறாமையும் நேர்மையும்தான் வெற்றியைத் தேடித் தந்துள்ளன” என்கிறார் தெய்வஜோதி.

“நான் கற்றுக்கொடுத்தேன் என்பதைவிட அவரது ஆர்வம் அவரை ஆட்டோ, கார் என அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. இப்போது மாநகரங்களில் பெண்கள் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றை ஓட்டுவது சகஜம்தான். ஆனால், இவர் திருச்சி, மதுரை, செங்கோட்டை, குற்றாலம், நாகர்கோவில், கன்னியாகுமரி என கோவில்பட்டியில் இருந்து 300 கி.மீ. வரையான தொலைவுக்கு வாடகை கார் ஓட்டுகிறார். மனதுக்குப் பிடித்த வேலை, போதுமான வருமானம் என நாங்கள் நிறைவாக வாழ்கிறோம். தெய்வஜோதி என் வாழ்க்கையை நிறைவாக ஆக்கியிருக்கிறார்” எனப் பெருமிதப்படுகிறார் கணேசன்.

இருவரும் கார் ஓட்டுவதைப் பார்த்த, தெய்வஜோதியின் பாட்டி கடந்த ஆண்டு ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால்,
தற்போது கணவன், மனைவி இருவரும் கார் ஓட்டி வருகின்றனர். “டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” என்று உறுதியான குரலில் சொல்கிறார் தெய்வஜோதி.

படம்: சு.கோமதிவிநாயகம்

SCROLL FOR NEXT