ச.தமிழ்ச்செல்வன்
குழந்தை இல்லாத கணவனும் மனைவியும் பிள்ளை வரம் வேண்டி ராமேசுவரத்துக்கு நடந்தே வந்தார்களாம். அந்தக் காலத்தில்தான் பஸ் இல்லையே. பொம்மக்கோட்டைக்கு அருகே காட்டு வழியில் வரும்போது, கணவனுக்குத் தாகம் எடுத்ததாம். உடனே, ஒரு மர நிழலில் உட்கார்ந்து, “எனக்குத் தாகமாக இருக்கு. நடக்க முடியலே” என்று மனைவியிடம் சொன்னாராம். மனைவியும், “இங்கியே இருங்க. நான் ஊருக்குள்ளே போய் தண்ணி வாங்கிட்டு வாரேன்” என்று போனாராம்.
மனைவி போய் ரொம்ப நேரமாக வரவில்லை. நடந்து போய் வாங்கி வர நேரம் ஆகத்தானே செய்யும்? வெயிலில் நடந்து வந்ததற்கும் தாகத்துக்கும் மரத்து நிழலிலும் அவருக்கு மயக்கமாக வந்தது. கணவன் அப்படியே கிறங்கிப்படுத்துவிட்டாராம். ஓணான்கள் அவரைக் கடித்துவிட்டன. ஆனால், அவருக்கு எந்த உணர்வும் இல்லை. அவரிடமிருந்து எதிர்ப்பு ஏதும் இல்லாததால், நிறைய ஓணான்கள் கூட்டமாக வந்து அவரைக் கடித்துப் போட்டுவிட்டனவாம்.
மனைவிக்கு இது எதுவும் தெரியாது பாவம். கையில் பாத்திரம் ஏதும் இல்லாததால், ஒரு வீட்டில் உலைமூடியை (பானையை மூடும் மண் பாத்திரம்) வாங்கி அதில் தண்ணீரைப் பிடித்துக்கொண்டு, தாகமாக இருப்பாரே என்கிற பதைப்புடன் வேகவேகமாக வந்தாராம். வந்து பார்த்தால் கணவர் இறந்து கிடக்கிறார். மனைவிக்கு எப்படி இருக்கும்? ‘அய்யோ தெய்வமே’ என்று கணவர் மீது விழுந்து கதறி அழுகிறார். எவ்வளவு நேரம்தான் அழுதாரோ அது அவருக்கே தெரியாது. தன்னந்தனிக் காட்டுக்குள்ளே பிணமாகக் கிடக்கும் கணவரை நல்லடக்கம் செய்யணும் என்கிற உணர்வு வருகிறது. மறுபடியும் ஊருக்குள் போகிறார். கணவரது சடலத்தை எரிக்க நெருப்புக் கேட்கிறாள். பொம்மக்கோட்டையில் ஒருவரும் நெருப்பு தரவில்லையாம். அடுப்பு நெருப்பைப் பிணத்தை எரிக்க எப்படிக் கொடுப்பார்கள்? பின்னர் பக்கத்து ஊரான ரெட்டியபட்டிக்குப் போயிருக்கிறார். அங்கே, துவரைமாரு வைத்து எரித்த கங்கை அள்ளிக் கொடுக்கிறார்கள். அதை வாங்கி வந்து கணவர் இறந்து கிடந்த இடத்தில் விறகு பொறுக்கி அடுக்கிவைத்து, கொண்டு வந்த கங்குகளைப் போட்டுத் தீ மூட்டி, கணவரை அதில் வைத்து அதே தீயில் தானும் விழுந்து இறந்துவிட்டாராம். செய்தி பரவி, பொம்மக்கோட்டையிலிருந்து மக்கள் காட்டுக்குள் வந்து சேருவதற்குள் எல்லாம் முடிந்துபோயிருந்தது.
பிறகு, ஊர் மக்களின் கனவில் வந்து அவர் சொல்லி அழுகிறாள். “என் கணவரின் உடலை எரிக்கக்கூட நெருப்பு தராத பாவிகளே… உங்கள் ஊரில் பால் உள்ள மரங்கள் இனி முளைக்காது” என்று சபிக்கிறாள். பயந்துபோன ஊர்க்காரர்கள் அவர் எரிந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டித் தெய்வமாகக் கும்பிட ஆரம்பித்தார்களாம். அரச மரம், ஆல மரம், பப்பாளி மரம் போன்ற பால் வடிக்கும் மரங்கள் பொம்மக்கோட்டையில் முளைக்காதாம். இப்போதும் அப்படித்தான் என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
குற்ற உணர்வின் வெளிப்பாடு
குழந்தை இல்லாமல் குழந்தை வரத்துக்குப் போனதாலும் அவரது பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாததாலும் ‘மலட்டம்மா’ என்று பேர் வைத்துக் கும்பிடுகிறார்களாம். அநேகமாக முக்கால்வாசி நாட்டுப்புறத் தெய்வங்கள் கனவில் வந்து ‘எனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுங்க’ என்று சொன்னதாகவோ அல்லது சாபம் இட்டுச் சென்றதாகவோதான் மக்கள் சொல்வார்கள். உண்மையில் அது ஊர் மக்களின் குற்றஉணர்வுதான். நெருப்பு கேட்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று கதறி அழுதாளே அந்தப் பரிதவிப்பு உண்டாக்கிய குற்ற உணர்வுதான் மக்களைத் தூங்கவிடாமல் செய்கிறது.
பரிதவித்துச் செத்தவர்கள் மீது உண்டாகும் பரிவும், அதற்கு நாமே காரணமாகிவிட்டோமே என்கிற தன்னுணர்வும் சேர்ந்து கோயில் கட்டிக் கும்பிட வைக்கிறது. பாலையே அவளுக்குப் படையலாகப் பொழிந்து அவள் கோபத்தைத் தணித்துவிட முயல்கிறது. அதன் மூலம் தங்கள் குற்ற மனத்தையும் சமப்படுத்திக்கொள்ள முடிகிறது.
கோபம் கொண்டு மலைமீது ஏறி நிற்கும் முருகப்பெருமானைச் சமாதானப்படுத்த காவடி எடுக்கும் மக்கள் அந்தக் காவடியில் குளிர்ச்சியான பொருட்களை மலைக்கு எடுத்துச் செல்வார்கள். பூக்காவடி, புஷ்பக்காவடி, பால்காவடி, பழக்காவடி, பன்னீர்க்காவடி என்று குளிர்விக்கும் பொருட்களாலேயே காவடிகள் அமையும். பெருதெய்வ வழிபாட்டிலும் அபிஷேகங்கள் இருக்கின்றன. இப்படி ஆற்றுப்படுத்தும் மரபு நம் மக்களிடம் இருப்பதை இங்கே இணைத்துப்பார்க்கலாம்.
பெண்ணை இழிவுபடுத்தும் சொல்
அதைவிடவும் கூடுதலாக, மலட்டம்மாவின் கதை நமக்கு வேறு சில முக்கியமான சேதிகளையும் சொல்கின்றன. பெண் என்றால் அவள் கண்டிப்பாகத் தாய் ஆகணும். பிள்ளைப் பேறுதான் அவளது அடையாளம். பிள்ளை பெறாதவள் ‘மலடி’ என்கிற அவச்சொல்லுக்கு ஆளாகணும். அதைத் துடைத்தழிக்க அவள் போகாத கோயிலுக்கெல்லாம் போயாக வேண்டும். ‘மாதொரு பாகன்’ நாவலில் எழுத்தாளர் பெருமாள் முருகன், பிள்ளை இல்லாத தம்பதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மலைக்கோயிலைச் சுற்றி வரும் காட்சியை உணர்வுக் கொந்தளிப்புடன் வர்ணித்திருப்பார். கணவன் இறந்துவிட்டால் மனைவியும் செத்துத்தான் ஆக வேண்டும் என்கிற பழைய பண்பாட்டுக்கூறுதான் மலட்டம்மாவை உடன்கட்டை ஏறவைக்கிறது. கணவன் இறந்தாலும் மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்று சந்தோசமாக வாழ வாய்ப்பிருக்கிறது என்கிற வாசலை அவள் அறிந்திருக்கவில்லை. கணவன் இறந்துவிட்டால் வாழ்வின் எல்லா வாசல்களும் அடைபட்டுவிட்டதாக உணரும் பேதைப்பெண்ணாகவே அவளை நாம் பார்க்க முடியும். இன்றைக்கும்கூட மறுமணம் பற்றி யோசிக்காமல் கைம்பொண் கோலத்துடன் வாழும் பெண்கள் எத்தனை கோடி?
மனைவி இறந்துபோய், அவள் சிதையில் தானும் விழுந்து மரித்துப்போன ஆண் தெய்வம் ஒன்றைக்கூட இந்தியத் திருநாட்டில் நாம் பார்க்க முடியாது. சமூகத்தின் இருப்புதான் சாமிகளின் தோற்றத்துக்கும் தன்மைக்கும் அடித்தளம் என்பதைச் சொல்லியாக வேண்டும். மலடி என்கிற சொல் பெண்ணை இழிவுபடுத்துகிறது. அச்சொல்லுடன் அம்மா என்கிற சொல்லைச் சேர்த்தவுடன் புனிதப்பட்டுவிடுகிறது. ‘மலடி’, மலட்டம்மா ஆனவுடன் வழிபடும் நிலைக்கு உயர்ந்துவிடுவது நகை முரண்தானே. திரிந்துபோனதை எல்லாம் புனிதப்படுத்தும் புண்ணிய தீர்த்தம் போல் ‘அம்மா’ என்கிற சொல்லை வைத்திருக்கிறோம். அம்மா என்று கும்பிடவும் வேண்டாம். மலடி என்று அவமதிக்கவும் வேண்டாம். ஆளை விடுங்கப்பா என்று ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் கதறினாலும், கூடி நின்று முழங்கினாலும் அதைச் செவிமடுக்காமல் ‘இல்லை இல்லை நீ தெய்வம்தான்’ என்று சாத்திவைப்பது தொடர்கிறது. மலட்டம்மா மட்டுமில்லை; இன்னும் எத்தனை அம்மாக்கள்? எத்தனை அம்மன்கள்?
(‘மலட்டம்மா’ கதையைச் சொன்னவர் ரெஜினா மேரி, நார்த்தாம்பட்டி. கேட்டு எழுதியவர் டி.கனகவள்ளி)
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com