பேரன், பேத்தி எடுத்து ஓய்ந்து உட்காருகிற வயதில் சுறுசுறுப்புடன் கைவினைக் கலைகளைக் கற்றுக்கொள்வதுடன் அவற்றைப் பிறருக்கும் கற்றுத்தருகிறார் ரமணி. புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த ரமணிக்கு, சமையல் கலையும் அத்துப்படி. கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி சீசனில் இவர் தயாரிக்கும் அதிரசம், பொரிவிளங்கா உருண்டை, நெய்யுருண்டை, ரவா லட்டு ஆகியவற்றுக்கு வரவேற்பு அதிகம். பெரிய ஆர்டராக இருந்தாலும் தனி ஆளாகச் சமாளித்துவிடும் ரமணிக்கு 60 வயது! இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால் சமையலை ஓரம்கட்டிவிட்டு, கைவினைக் கலையைக் கையில் எடுத்துவிட்டார்.
“எனக்குக் கல்யாணமாகி 40 வருஷமாகுது. இரண்டு பையன், ஒரு பொண்ணு. மூணு பேருக்கும் கல்யாணமாகிடுச்சு. நான் கத்துக்கிட்ட கலை, என் தனிமையைப் போக்கறதோட வருமானத்துக்கும் வழி ஏற்படுத்தித்தருது” என்கிறார் ரமணி.
ரமணிக்குச் சிறு வயதிலேயே எம்ப்ராய்டரி, துணிகளில் பூ வேலைப்பாடு ஆகியவற்றில் ஆர்வம் இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் கைவினைக் கலைகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டுவருகிறார். பழைய காட்டன் துணிகளில் மிதியடி தைத்து விற்பனை செய்வதன் மூலம் தொழில்முனைவோராகவும் தடம்பதிக்கிறார். சாவிக்கொத்து வளையம், க்ரோஷே மற்றும் மேக்ரமி இழையில் பலவிதமான பொருட்கள், செல்போன் பைகள், கைப்பைகள், ஃபேஷன் நகைகள் என்று சகலத்தையும் கலை நுணுக்கத்துடன் செய்கிறார். கிறிஸ்டல் நகைகளை மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மூலப்பொருட்கள் வாங்கி செய்திருக்கிறார். அவற்றை சென்னையில் ஸ்டால்கள் போட்டு விற்பனை செய்திருக்கிறார்.
“நான் ஒவ்வொரு கலையையும் சென்னைக்குப் போய் கத்துக்கிட்டேன். இங்கே பயிற்சி வகுப்பெடுக்க இடம் கிடைக்காததால, யாராவது பயிற்சி வேணும்னு கேட்டா அவங்க வீட்டுக்கே போய் சொல்லித் தருவேன். புதுச்சேரில மட்டுமில்லாம சென்னை, கடலூர்னு வெளியூருக்குப் போயும் பயிற்சி தர்றேன்” என்று சொல்கிற ரமணிக்கு, தான் நிறைய கலைகளைக் கற்றுவைத்திருந்தாலும் அவற்றைச் செயல்படுத்தவோ, பயிற்சி தரவோ போதுமான இட வசதி இல்லை என்கிற கவலை உண்டு.
“எனக்கு சானிட்டரி நாப்கின் தயாரிக்கிற செயல்முறை தெரியும். ஆனா அதுக்குத் தேவையான மூலப்பொருள் இங்கே கிடைக்கறதில்லை. அதனால அதை விட்டுட்டேன். டெக்ஸ்டைல் பிரிண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங் செய்ய எனக்கு சரியான இடம் கிடைக்கலை. இப்போ டெரகோட்டா நகைகள் செய்யக் கத்துக்கிட்டேன். அடுத்து பாலிமர் களிமண் நகைகள்தான்” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ரமணி.
படங்கள்: எம். சாம்ராஜ்