பெண் இன்று

நன்னம்பிக்கை முனை: தொண்ணூறில் தொடங்கிய வாழ்க்கை

செய்திப்பிரிவு

அன்பு

பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சார்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை 91 வயதில் சுயதொழில் தொடங்கியதன்மூலம் நிரூபித்துள்ளார் ஹர்பஜன் கவுர்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வருபவர் ஹர்பஜன் கவுர். இவருடைய மகள் ரவீனா. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர். ரவீனா தன் அம்மாவிடம், “வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறி விட்டதா?” எனக் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த ஹர்பஜன் கவுர், “என் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், என்னால் சுயமாக ஒரு ரூபாயைக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

கையில் ஏந்திய முதல் வருமானம்

அந்த உரையாடலின் விளைவாக ரவீனாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. வாழ்நாளின் பெரும்பாலான நேரத்தைச் சமையல் அறையில் கழித்தவர் ஹர்பஜன் கவுர். சிறந்த சமையல் கலைஞரான அவர் இனிப்பு வகைகள், சர்பத்துகள், ஊறுகாய் எனப் பலவற்றைச் செய்வதில் திறமை வாய்ந்தவர். வீட்டில் நடைபெறும் எல்லா விசேஷங்களுக்கும் அவர் செய்யும் கடலை பர்பி, பலரது விருப்பத் தேர்வு. அதையே தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்கான ஆரம்பப் புள்ளியாகத் தேர்ந்தெடுத்தார் ரவீனா. அம்மாவுக்காகச் சந்தையில் சிறு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தார். அங்கே கடலைமாவு பர்பிகளைச் செய்து விற்பனை செய்யத் தொடங்கினார் ஹர்பஜன் கவுர்.

ஹர்பஜன் கவுர் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்லவே தயங்குவார். ஆனால், மகள் தனக்கு அமைத்துக்கொடுத்த கடையில் தைரியமாக அமர்ந்து முதல் நாள் விற்பனையைத் தொடங்கினார். வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசியபடி பர்பி, பலவிதமான ஊறுகாய்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பினார் ஹர்பஜன் கவுர். வாடிக்கையாளர்களின் பாராட்டு ஹர்பஜ னுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. “அம்மாவின் சமையல் அருமையாக இருந்தாலும் வீட்டில் யாரும் பாராட்ட மாட்டார்கள். வாடிக்கையாளர்களின் பாராட்டு அம்மாவுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது” என்கிறார் ரவீனா. முதல் நாள் விற்பனை முடிந்து ஹர்பஜன் கவுர் வீடு திரும்பியபோது அவருடைய கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. தன்னுடைய உழைப்பால் அவர் சம்பாதித்த முதல் தொகை அது. அந்தப் பணத்தை மகளிடம் காட்டியபோது அவரின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

தற்போது 94 வயதாகும் ஹர்பஜன் கவுர், சிறந்த தொழில்முனைவோராகப் போற்றப்படுகிறார். சண்டிகர் பகுதியில் இவருடைய இனிப்பு வகைகளுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. வாரத்தில் ஐந்து முதல் பத்து கிலோ வரை பர்பிகளைச் செய்கிறார். அவருக்கு உதவியாகப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தன் திருமண அழைப்பிதழுடன் பாட்டி செய்த பர்பியை வைத்துக் கொடுத்துள்ளார் ஹர்பஜன் கவுரின் பேத்தி. இதற்காக ஐந்நூறு கிலோ பர்பிகளை அவர் செய்தார். வாழ்க்கை அறுபதுகளிலேயே முடிந்துவிட்டதாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், ஹர்பஜன் கவுர் போன்றவர்களுக்குத் தொண்ணூறுகளில்தான் வாழ்க்கை இனிப்புடன் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT