குடும்பமும் நட்பும் உறவுகளும் துணையாக இருந்தால் திருநங்கைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட மகிழ்ச்சி நிலைக்கும், எவ்வளவு நல்ல விஷயங்களில் திருநங்கைச் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களும் உதவ முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் பிரகதி.
தன்னைத் திருநங்கையாக உணர்ந்த பிரகதிக்கு அவருடைய குடும்பமே துணை நின்றது. “பிரகதி யார் என்று என் குடும்பத்துக்குத் தெரியும்” எனப் பெருமையுடன் சொல்கிறார். 13 வயதில் திருநங்கையாக உணர்ந்தாலும், எம்.எஃப்.ஏ. முடித்தபோதுதான் முழுமையாகத் தன்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
இலவசப் பயிற்சி
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகதி. இவர் சென்னை எழும்பூர் அரசு நுண்கலை கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 2014-ல் முதுகலையை முடித்ததும் தன் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தைத் தன் சொந்த முயற்சியால் தொடங்கினார்.
‘தி ஆரோ சாரிட்டபிள்’ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் தன்னைப் போன்ற திருநங்கைகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக் கும் கல்வி உதவிபெற உதவுகிறார். உணர்வுப் போராட்டத்தில் தவித்து, திருநங்கையாய் வெளிப்பட்டு, ஆதரவற்றிருக்கும் திருநங்கைகளுக்குக் கலையின் வழியாகச் சேவை செய்துவருகிறார்.
“எங்கள் அகாடமியில் 26 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் திருநங்கையர்களுக்கு இவற்றை இலவசமாகக் கற்றுத்தருகிறோம். என்னுடைய குறைந்த வருமானத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்.
யாரிடமும் நான் உதவி கேட்பதில்லை. உதவும் நோக்குடன் மட்டுமே செயல்படும் என்னையும் இந்தச் சமூகம் தவறாகப் பேசும். எனவே, நான் செய்யும் உதவி எதுவாக இருந்தாலும் அது எனக்கு மட்டும் தெரிந்தால்போதும்; அதை மற்றவருக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை” என்கிறார் பிரகதி.
சிறு தொழிலுக்கும் உதவி
ஓவியம் வரைவதிலும் படிப்பிலும் நாட்டமில்லாத திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்காகக் கோழிப் பண்ணை அமைப்பதற்கான பயிற்சியளித்து, பண்ணை அமைப்பதற்கான உதவிகளையும் செய்கிறார். அழகுக் கலை நிபுணராக இருப்பதால் திருநங்கைகளுக்கு அழகுக் கலைப் பயிற்சியையும் வழங்குகிறார். பல்வேறு விதமான நுண்கலைப் பொருட்களைச் செய்துவரும் பிரகதி, சுடுமண் கலை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்திவருகிறார்.
பல மாவட்டங்களுக்குச் சென்று திருநங்கையர் களுக்கு நுண்கலையில் பயிற்சி அளிப்பதுடன் கல்வியின் தேவை குறித்த பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திவருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்புக் குடில்களை ஆலயங்களிலும் வீடுகளிலும் அமைத்துத்தருகிறார். “நேர்மையான முறையில் சம்பாதிப்பதே என்னுடைய நோக்கம்” என்கிறார் ஓவியமொன்றை வரைந்துகொண்டே. அவரது நோக்கத்தைப் போலவே ஒளிர்ந்தது அவர் வரைந்த நம்பிக்கை வானவில்!
- வினாலின் ஸ்வீட்டி