ரேணுகா
குடிசைப் பகுதிகள் குறித்த பொதுச் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்துக்குத் தன் ஒளிப்படங்கள் மூலமாகப் பதிலளித்துள்ளார் யாழினி.
சென்னை கவின்கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு ஓவியம் படித்துவரும் யாழினிக்கு, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வம் பத்து வயதிலேயே தொடங்கிவிட்டது.
அண்மையில் சென்னை லலித் கலா அகாடமியில் ‘அம்பேத்கர் நகர் – கக்கன் பாலம்’ என்ற தலைப்பில் ஒளிப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார். குடிசைப் பகுதி மக்களின் தற்காலச் சமூக - அரசியல் - பொருளாதார நிலையைப் பிரதிபலிப்பதுதான் தன்னுடைய கண்காட்சியின் முக்கிய நோக்கம் என்கிறார் யாழினி.
வாழ்விடமே பொதுவெளிதான்
“என் வீடு அமைந்திருக்கும் இடம் அம்பேத்கர் நகர் அருகேதான் உள்ளது. ஆனால், பள்ளியில் படித்தபோது அந்தப் பகுதிக்கு நான் ஒருமுறைகூடச் சென்றதில்லை. ஏன் அம்பேத்கர் நகருக்குச் செல்லக் கூடாது எனக் கேட்டால் அங்கிருப்பவர்கள் மோசமானவர்கள் என்பார்கள். அவர்களுடைய இந்தப் பதில்தான் குடிசைப் பகுதி மக்களின் வாழ்க் கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற உந்துதலை அளித்தது.
ஆறு மாதங்கள் அம்பேத்கர் நகரில்தான் என் பொழுதுகள் விடிந்தன. குடிசைப் பகுதிகள் குறித்த பொதுச் சமூகத்தின் பார்வை, அப்பகுதி மக்களைப் புரிந்துகொள்ளும்போதுதான் மாறும். குடிசைகள் குடிசையாக இருப் பதற்கான காரணங்களும் விளங்கும். பத்துக்குப் பத்து என இருக்கும் வீடுகளில் அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை எப்படிச் செய்ய முடியும்? அதனால்தான் திறந்தவெளிக்கு வருகிறார்கள்.
படிப்பது, விளையாடுவது, குளிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து பேசுவது என எல்லாமே பொது வெளியில்தான் நடக்கும். முந்தைய தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்குமான இடைப்பட்ட வாழ்க்கை முறையில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. இதைப் பதிவுசெய்வது சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைருடைய கடமை” என்கிறார் யாழினி.