தொகுப்பு: க்ருஷ்ணி
பெண்கள், குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் சில நேரம் அத்தி பூத்தாற்போல நல்லவையும் நடந்துவிடுவதுண்டு. அவை எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் தொடர்ந்து முன்னேறிச்செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கத் தவறுவதில்லை. 2019-ல் நம்பிக்கையை விதைத்த நிகழ்வுகள் இவை.
மாதவிடாய்க் குப்பிகள்
2018-ல் கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது சானிட்டரி நாப்கின்களைக் கையாள்வதில் சிரமம் இருந்ததால், முகாம்களில் தங்கியிருந்த பெண்களுக்கு மாதவிடாய்க் குப்பிகள் வழங்கப்பட்டன. அதற்குப் பெண்களிடம் வரவேற்பு கிடைத்ததையடுத்து 2019 ஜூன் மாதம் கேரளத்தில் ஐந்தாயிரம் பெண்களுக்கு மாதவிடாய்க் குப்பிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டன. சூழலுக்கு உகந்த வகையிலும் பயன்படுத்த எளிதாகவும் இருப்பதால் இந்தத் திட்டத்துக்குப் பெண்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. திருமணமாகாத பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இவற்றைப் பயன்படுத்தலாம்.
முத்தலாக் முறைக்குத் தடை
முஸ்லிம் ஆண்கள், மூன்று முறை ‘தலாக்’ சொல்லித் தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்குத் தடைவிதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
மாதவிடாய் விடுப்பு
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார். மகப்பேறு, மாதவிடாய் போன்ற உடலியல் நிகழ்வுகளையொட்டி பெண்களுக்கு வழங்கப்படும் விடுப்பு, அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால், அவற்றைப் பெண்களுக்கு அளிக்கப்படும் சலுகையாகவே பலரும் பார்க்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, சில நிறுவனங்கள் பெண்களைப் பணிக்கு அமர்த்தவும் உயர் பதவிகளை வழங்கவும் யோசிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மாதவிடாய் விடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.
ஆஸ்கர் அங்கீகாரம்
மாதவிடாய் குறித்து இந்தியக் கிராமங்களில் நிலவும் மூடநம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற ஆவணப் படத்துக்கு 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா தயாரிப்பில் ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் இயக்குநர் ராய்க்கா லெஸ்ட்டாப்சி (25) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். மலிவு விலை நாப்கினைத் தயாரித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தமும் உத்தரப் பிரதேச மாநிலம் கதிகெரா கிராமத்தைச் சேர்ந்த சினேகா என்பவரும் இதில் தோன்றியுள்ளனர்.
அம்மா ரோந்து வாகனம்
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு எனப் பிரத்யேகமாக ‘அம்மா பேட்ரோல்’ என்னும் ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
நதியை உயிர்ப்பித்த நங்கையர்
வேலூர் மக்களின் நீர் ஆதாரமாக இருந்த நாக நதி நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணாமல்போனது. நதியை நம்பியிருந்த கிராமங்கள் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு ஆளாயின. நீராதாரத்தை மீட்டெடுக்க நினைத்த உள்ளூர்த் தன்னார்வலர்களும் மகளிர் குழுக்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பெண்களும் சேர்ந்து நான்கு ஆண்டுகளாகப் பாடுபட்டு நாகநதியின் தடத்தைச் சீர்படுத்தினர். இவர்களின் கடும் முயற்சியால் 3,500 கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன.
பெண்களுக்கு இலவசம்
அரசுப் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிமுகப்படுத்தினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது. இதை ஊக்குவிக்கும் வகையிலும் பொதுப் போக்குவரத்தில் பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக ஒன்றரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
பெண்களின் ராஜ்ஜியம்
2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 66 பெண்களே வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றனர். ஆனால், 2019-ல் நடந்த தேர்தலில் 78 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
பெண்களுக்குத் தடையில்லை
பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, திரையரங்கம் செல்ல அனுமதி ஆகியவற்றைத் தொடர்ந்து பெண்கள் தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதித்துள்ளது. இவை தவிர, விளையாட்டு மைதானங்களுக்குச் செல்லவும் பாதுகாப்புப் படையில் சேரவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.