பெண் இன்று

நட்சத்திர நிழல்கள் 36: ராதா மூன்றாம் பிறைப் பெண்

செய்திப்பிரிவு

செல்லப்பா

பெண்களுக்குக் காதல், கல்யாணம், கர்ப்பம் இந்த மூன்றும்தாம் மிகப் பெரிய சிக்கல்களாக இருக்கும். இந்த மூன்றிலுமே ஆண்களின் பங்கு உண்டு. இந்த வரிசையும் மாறாமல் இருக்க வேண்டும் எனச் சமூகம் விரும்பும். கல்யாணமும் காதலும்கூட இடம் மாறலாம். ஆனால், கர்ப்பம் இந்த வரிசையில் இறுதியாகத்தான் இருக்க வேண்டும். அது முதலில் அமைந்துவிட்டால் அவ்வளவுதான் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கத் தொடங்கிவிடும். அதுவரை இரவில் தூங்கியவர்கள் பகலில் தூங்கத் தொடங்கிவிடுவார்கள். எல்லாமே தலைகீழாகிவிடும். இப்படியெல்லாம் சமூகம் அநாவசியத்துக்குப் பயந்துபோய்க் கிடக்கிறது.

உண்மையில் அப்படியெல்லாம் இந்த வரிசை மாறாமலில்லை. பலர் வாழ்வில் இந்த வரிசை மாறி, பிறருடைய வாரிசைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் பெண்கள். பெண் கர்ப்பம் தரிப்பது இயல்பான அறிவியல் செயல்பாடு. கழுத்தில் தாலி இருக்கிறதா, காலில் மெட்டி இருக்கிறதா என்றெல்லாம் உயிரணுக்கள் பார்ப்பதில்லை. ஆண், பெண் இருவரின் உயிரணுக்களும் வலுவுடன் இருந்தால் மூன்றாம் உயிர் ஜனித்துவிடும். இதில், ஆணும் பெண்ணும் தன்னுணர்வுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. ராதா வாழ்வில் அப்படித்தான் நேர்ந்தது. அதிலும் அவள் யாருடைய வாரிசைச் சுமந்திருந்தாளோ அந்த மனிதருக்கே அது தெரியாது. ராதா மட்டுமே அறிந்த ரகசியமாக அது இருந்தது.

அவள் வாடகை மனைவி

ராதா பிறந்தது ஓரிடம், வளர்ந்தது வேறிடம். வாடகை மாளிகைக்கு வருபவரை ஆடிப் பாடி மகிழ்வித்துவந்தாள். வந்துசெல்பவர்களுக்கு அவளது வாளிப்பான உடல் தெரிந்த அளவு அவளது வாடிய உள்ளம் தெரியவில்லை. அவள் வளர்ந்த சூழல் மாசுபட்டதே தவிர, அவள் மாசுபடாதவள். அப்படித்தானே இருக்க வேண்டும்; பெண் கறந்த பாலைவிடச் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மாசுபட்ட சமூகம் நினைக்கத்தானே செய்கிறது. அந்த மாளிகைக்கு ஒருநாள் பெரியவர் பட்டவராயர் வருகிறார். அவ்வளவு பெரியவர் இந்த இடத்துக்கு வந்திருக்கிறாரே என ராதாவும் அவளுடைய தாயாரும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகப் பார்க்கிறார்கள்.

பெரியவர் தான் வந்த காரணத்தைச் சொல்கிறார். அதைக் கேட்டதும் இருவரும் முதலில் திடுக்கிட்டார்கள். பின்னர் ராதா பெரியவரின் சூழலை உத்தேசித்து அதற்குச் சம்மதித்தாள். ஒரு விபத்தில் பெரியவருடைய மகன் குணசேகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. இளமையும் அழகும் நிறைந்த பெண் அவனுக்கு மனைவியானால் அவன் குணமாகக்கூடும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். அதற்காக ராதாவை வாடகை மனைவியாக ஒப்பந்தம் செய்யவே அவர் வந்திருந்தார். தினுசு தினுசான மனிதர்களைத் தினம் சந்திக்கும் சூழலைவிட இது மேலானதாக ராதாவுக்குப் பட்டது. எனவே, அவள் பட்டவராயருடன் சென்றாள்.

ராதா வந்துசேர்ந்த மாளிகை, வசித்த மாளிகையைவிட வசதியாகத்தான் இருந்தது. ஆனால், அவளது வருகை அந்த வீட்டில் எவருக்குமே பிடிக்கவில்லை. அதிலும், பெரியவரின் மூத்த மகன் தனசேகரன், ராதாவை மிகவும் இழிவாக எண்ணினான். அப்படியொரு பெண் தங்கள் வீட்டில் இருப்பதையே அவமானமாகக் கருதினான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளை இழிவுபடுத்தினான். மாதந்தோறும் கிடைக்கும் 2000 ரூபாய் பணத்துக்காக எல்லாவற்றையும் அவள் பொறுத்துக்கொண்டாள். குணசேகரன் சில நேரம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். என்றாலும் ராதா முகங்கோணாமல் அவனைப் பார்த்துக்கொண்டாள்.

காதல் ராகம் பாடியவள்

கவிஞனான குணசேகரன் காதலித்த கவிதாவை அவனது பக்கத்துவீட்டுக்காரனான சுகுமார் தந்திரமாகத் திருமணம் செய்துகொள்கிறான். சுகுமார் குடிகாரன், பெண்பித்தன், மோசடிப் பேர்வழி. திருமணத்தன்று இரவில் கவிதா, குணசேகரன் கண்ணெதிரே மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாள். இதைப் பார்த்த அதிர்ச்சியில் குணசேகரனுக்குச் சித்தம் கலங்கிவிடுகிறது. ராதா ஒன்றும் மனோதத்துவ நிபுணர் அல்ல. என்றபோதும் குணசேகரனைப் பரிவுடன் கவனித்துக்கொண்டாள். அந்தப் பரிவும் அன்பும் அவனது நிலையில் சிறிது சிறிதான முன்னேற்றத்தை அளித்தன.

குணசேகரன் கதையைக் கேட்ட பிறகு ராதாவுக்கு அவன் மீது இரக்கம் அதிகரித்தது. ஆனால், வீட்டிலுள்ளோர் அவளை அப்படியொன்றும் பிரியமாக நடத்தவில்லை. குடும்பத்தின் நல்லதுகெட்டதுகளில் கலந்துகொள்ள குணசேகரன் கீழிறங்கி வரும்போது ராதாவும் வருவாள். அப்போதுகூட அவளைக் காயப்படுத்தும் வசைமொழிகளையே தனசேகரன் வாரியிறைத்தான். குணசேகரனுடைய தம்பியான பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் சங்கருக்கு மட்டும் ராதாவைப் பார்த்ததுமே பிடித்துப்போனது. அவன் அவளை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டான். ஒருநாள் யாருமற்ற நேரத்தில் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த நினைத்தபோதுதான் ராதா அந்தச் சம்பவத்தை விவரித்தாள்.

ஒரு மழைநாளில் குணசேகரன் தன் மீது மோகங்கொண்டு தன்னை அவன் வயப்படுத்திக்கொண்ட சம்பவத்தை ராதா கூறினாள். அதனால் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினாள். இதைக் கேட்டதுமே அதிர்ந்தான் சங்கர். தான் அவளைத் தவறாக எண்ணியதை நினைத்து வருந்தினான். விடுமுறையைக் கழிக்க வந்தவன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டான். குணசேகரனின் தங்கை மோகனாவிடம் சுகுமார் வாலாட்டத் தொடங்கினான். சுகுமார் பற்றிய அறியாத மோகனா மகுடி நாதம் கேட்ட நாகமாக சுகுமாரிடம் மதிமயங்கி நின்றாள். சுகுமாரின் சுயரூபம் அறிந்த ராதா, அவளை எச்சரித்தாள். என்றாலும், மோகனா அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பெரிய குடும்பத்து மருமகள்

ஒருநாள் மோகனாவைப் பார்க்க சுகுமார் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது வசமாக மாட்டிக்கொண்டான். ராதாவைப் பார்க்க வந்ததாக சுகுமார் சொன்ன பொய்யை மறுக்காமல் தலைகுனிந்து நின்றாள் அவள். மோகனாவைக் காப்பாற்றுவதற்காகப் பழியை ராதாவே ஏற்றுக்கொண்டாள். மீண்டுமொரு நாள் ராதாவிடம் தவறாக நடக்க சுகுமார் முயன்றபோது, குணசேகரன் அதைப் பார்த்து சுகுமாரைத் தாக்கத் தொடங்கினான். அப்போது தப்பிப்பதற்காக மாடியின் சுவரில் ஏறிய சுகுமார் தடுமாறிக் கீழே விழுந்து இறந்தான். இதைப் பார்த்தபோது குணசேகரனுக்கு நினைவு திரும்பியது.

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி. ராதாவுக்கோ சொல்ல முடியாத ஆச்சரியம். எல்லோரையும் அறிமுகப்படுத்திவைத்த ராதாவை யார் என்று குணசேகரன் கேட்டபோதுதான் அவளுக்கு உண்மை உறைத்தது. தான் யாரென்பதே குணசேகரனுக்குத் தெரியாவிட்டால் தான் அவனுடைய வாரிசைத் தாங்கியிருப்பது எப்படித் தெரியும் எனத் துன்பப்பட்டாள். புராணப் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். பூமியில் பெண்கள் கணவன் மூலமாகத்தானே அதை நிகழ்த்த வேண்டும். அதுதானே நமது பண்பாடு. அவள் சொன்ன உண்மையை நம்ப யாரும் தயாராக இல்லை. அவளைத் தூற்றினார்கள். ஆனால், குணசேகரன் அவளை நம்பினான். காரணம் அவன் கதாநாயகன். அவன், அவளுக்கும் அவளுடைய குழந்தைக்கும் வாழ்க்கை தரத் தயாராக இருப்பதாகப் பெருமைபொங்கத் தெரிவித்தான்.

உண்மையில் ராதாதான் அவனுக்கே வாழ்க்கை தந்தவள் என்பதை அவள் யாரிடம் சொல்வாள்? பெரிய மனிதரான பட்டவராயர்கூட அவளது பூர்விகம் கருதி அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்போது அவள் அந்தக் குடும்பத்துப் பெண்தான் என்ற கதை சொல்லப்படுகிறது. பெரிய குடும்பத்துப் பெண் என்ற உடன் பெரியவரும் சம்மதித்துவிடுகிறார். ஒரு பெண்ணுக்கு அவள் பெண் என்பதால் கிடைக்க வேண்டிய மரியாதை அவள் இருந்த, பிறந்த இடத்தைப் பொறுத்துத்தான் தரப்படுகிறது என்பது சமூகத்தில் அநீதிதானே? ‘எங்கிருந்தோ வந்தாள்’ (1970) திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிவிட்டன. ராதாவாக நடித்த ஜெயலலிதா முதல்வராகவே ஆகி மறைந்துவிட்டார். எனினும், இன்னும் பெண்களின் நிலையில் பெரிய மாற்றம் வந்துவிடவில்லையே?

A.C. திருலோகசந்தர் இயக்கிய இந்தப் படம் ‘புனர்ஜென்மா’ என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம். இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த இந்தப் படம் ஜெயலலிதாவின் நடிப்புக்குச் சான்றான படங்களில் ஒன்று. முத்துராமனின் நடிப்பும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. 1970-ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இது. ‘ஒரே பாடல்’, ‘நான் உன்னை அழைக்கவில்லை’ உள்ளிட்ட சிறந்த பாடல்கள் இடம்பெற்ற திரைப்படமும் கூட.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: chellappa.n@hindutamil.co.in

SCROLL FOR NEXT