புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். எந்தப் பதிப்பகம் என்பதையும் குறிப்பிடுங்கள்.
இறுதிவரை பார்வை வேண்டும்
என் பாட்டி சொன்ன மகாபாரதக் கதைகள், தமிழ் படிக்கத் தொடங்கியவுடன் என்னைக் கதை படிக்கத் தூண்டின. ‘ஒரு குருவியின் சாபம்’ என்ற ஒரு அணா குட்டிப் புத்தகத்தில் என் வாசிப்பு பழக்கம் தொடங்கியது. குக்கிராமப் பள்ளியில் குட்டிக்கதை புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அலமாரியைத் திறந்தவுடன் எழும் வாசம் என் எழுபதாம் அகவையிலும் நெஞ்சில் நிற்கிறது.
திண்ணையில் தவம்
அந்தக் காலத்தில் தபால்காரர் கொண்டுவரும் வார இதழ்களைப் படிக்க, கிராம பிரசிடெண்ட் வீட்டுத் திண்ணையில் காத்துக்கொண்டிருப்பேன். பள்ளிக் காலத்தில் மகாகவி பாரதி என் மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். எங்கள் காலத்தில் பள்ளி நூலகர் ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து மாணவர்களுக்குப் புத்தகங்களை வழங்குவார். அவை பெரும்பாலும் தலைவர்களின் சுயசரிதைப் புத்தகங்களாகவே இருக்கும். அதைப் படித்துவிட்டு அவற்றின் சுருக்கத்தை எழுதித் தரவேண்டும். அப்படித்தான் என்னுள் பாரதி நுழைந்தார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதைகள் சாமானியர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துகாட்டின. ‘யுக சந்தியில்’ விதவை பிராமணப் பெண்ணைத் தூக்கிப்பிடித்திருப்பார். ‘புது செருப்பு கடிக்கும்’ கதையில் பாலியல் தொழிலாளியின் பேசாத மொழிகளைப் பேசியிருப்பார். பெரும்பாலும் பெண்களின் உணர்வுகளைக் கதைகளாக்கும் தி.ஜானகிராமன், பட்டாளிகளின் கதைகூறும் சு. சமுத்திரம் ஆகியோர் மனிதர்களின் விவரிக்க முடியாத வாழ்க்கையை வார்த்தைகளால் வடிக்கும் திறன்படைத்தவர்கள்.
வாசிப்பே துணை
மனம் சோர்வுற்ற நிலையில் வாசிப்பு என்னை உயர்த்திப்பிடித்தது. என்னுடைய நாட்கள் வாசிப்பின்றிக் கழிந்ததில்லை. கட்டுரை, விமர்சனம், ஆய்வுக் கட்டுரை என எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய பேரக் குழந்தைகளுக்குக் கதை சொல்லவும் நான் படித்த புத்தகங்கள் உதவுகின்றன.
உறக்கம் வராத இரவுகளில் எனக்குத் துணையாய் இருப்பவை புத்தகங்களே. இறுதிமூச்சுவரை எனக்குப் பார்வை வேண்டும் என்பதுதான் என் வேண்டுதல். அப்போதுதான் கடைசி மணித்துளிகளின்போதும் வாசிப்புடன் கழியும் என் வாழ்க்கை.
- விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஆசிரியர், சென்னை.
அடம்பிடித்து வாங்கிய புத்தகம்
என் அம்மா அய்யம்மாள் காளிமுத்துவிடம் இருந்துதான் வாசிப்புப் பழக்கத் வளர்த்துக்கொண்டேன். என் அம்மா லட்சுமி மில்லில் வேலை பார்த்தவர். வார விடுமுறை நாட்களில் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பொழுதுபோக்கில் வாசிப்புதான் முக்கியப் பங்கு வகிக்கும். தொண்ணுறு வயதைக் கடந்தும் புத்தகங்களைப் படித்துவருகிறார். என் அம்மாவின் தொடர் வாசிப்புதான் என்னை வாசிப்பு உலகத்துக்கு அழைத்துச் சென்றது.
நான் படித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜினி பாண்டியன், கல்வியில் மட்டுமின்றி மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியவர். அவரும் எனக்கு வாழிகாட்டியே. மதிய உணவு இடைவேளையின்போது வார இதழ்கள், அம்புலிமாமா தொடர்களைப் படிப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன். அப்போது தொடங்கியதுதான் வாசிப்பின் மீதான நேசம். இதனால், வீட்டுக்குச் சென்ற பிறகும் ஓய்வு நேரங்களிலும் புத்தகங்களைப் படிப்பதிலேயே நேரம் சென்றது.
புத்தகக் கடன்
அப்போதெல்லாம் சிலரது வீட்டில்தான் வார இதழ்களை வாங்குவார்கள். நானும் என் உறவினர் வீட்டுக்குச் சென்று புத்தகங்களைக் கடன் வாங்கிப் படித்துவந்தேன். ஒருமுறை அவர்கள் புத்தகம் வாங்கவில்லை எனச் சொல்லிவிட்டார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என் அப்பாவிடம் அழுது அடம்பிடித்து வார இதழ்களை வீட்டுக்கு வரவழைத்துப் படிக்கத் தொடங்கியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக உள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகிய நாவல்கள் என் மனத்துக்கு நெருக்கமானவை. தற்போதும் தஞ்சை, காஞ்சிபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும்போது வந்தியதேவன் பயணித்த இடங்களில் பயணிப்பதுபோலவே இருக்கும். ரமணிசந்திரனின் நாவல்களை அதிகம் விரும்பிப் படிப்பேன். சிவசங்கரி, இந்துமதி, ஜெயகாந்தன், அனுராதா ரமணன், விமலா ரமணி ஆகியோரின் கதைகளையும் விருப்பத்துடன் படிப்பேன்.
பள்ளிக் காலத்தில் படித்த புத்தகங்கள் யாவும் என்னைத் தனித்துவம் மிக்க பெண்ணாக மாற்றியிருக்கின்றன. உள்ளுக்குள் இருந்த பயம் பறந்தோடியது. எழுத்தாளர்களின் நேர்மறை எண்ணத்தில் எழுதிய கதைகள் யாவும் இன்றும் என் எண்ணத்தில் நிலைத்து நிற்கின்றன. ஷேக்ஸ்பியரின் நாடகக் காப்பியங்கள் என்னை ஆங்கிலக் கதைப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டின. பணிக்கு ஓய்வு கிடைத்த பின்பும் எனது புத்தக வாசிப்புக்கு ஓய்வில்லை.
- கா.வேலுமணி ரவீந்திரன், சென்னை.
வாசத்தால் தொடங்கிய வாசிப்பு
புத்தகத்திலிருந்து வரும் வாசனைக்காகத்தான் வார இதழ்களைப் படிக்கத் தொடங்கினேன். அதிலும் சிரிப்புத் துணுக்கு மட்டும்தான் படிப்பேன். திருமணத்துக்குப் பிறகுதான் ஆழ்ந்த வாசிப்பு தொடங்கியது. சிவசங்கரியின் ‘ஒரு மணிதனின் கதை’, ‘பாலங்கள்’, இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’, ‘மணல் வீடுகள்’ வாசந்தியின் ‘அம்மணி’, ‘யாதுமாகி’, சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘நைலான் கயிறு’, ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ உள்ளிட்டவை என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, ‘கோமதியின் காதலன்’ போன்ற நூல்கள் அருமையானவை. பாக்கியம் ராமசாமியின் ‘சீதாபாட்டி - அப்புசாமி’ நகைச்சுவைக் கதைகள் பிரமிக்க வைக்கும். இன்றும் நூலகத்துக்குப் போனால் இவர்களுடைய புத்தகங்களைத்தான் தேடித் தேடிப் படிப்பேன். என்றும் இளமையுடன் வைத்திருப்பவை புத்தகங்களே.
- பி. ஜான்சிராணி, திருவண்ணாமலை.
மகனுக்காக!
என் துன்பத்தை துடைப்பது வாசிப்புதான். எனக்கு ஒரு மகள், இரண்டு ஊனமுற்ற மகன்கள். பெரியவன் மூளைவளர்ச்சி குன்றியவன், இளையவன் பார்வையற்றவன். அவனுக்கு நான்கு வயதிலிருந்து படிப்பில் ஆர்வம் அதிகம். அதனால், அவனுடைய பள்ளிப் பாடங்களைப் படித்துக் காண்பிப்பது என் வழக்கம். வாசிப்பு என் மனத்துயரத்தைக் குறைத்துக்கொள்ள உதவியது. நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள் போன்றவற்றை படிப்பதும் படித்ததை பதிவுசெய்வதும் என் வழக்கம். இப்போதெல்லாம் நான் படிக்கும் விஷயங்களை கனிணியில் பதிவு செய்துவருகிறேன். இதை என் மகன் போன்ற மாற்றுத்திறனாளிகளும் ஆடியோவாகக் கேட்க முடியும்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் புத்தகங்கள் பற்றி வரும் விமர்சனங்களைத் தொடர்ந்து படிப்பேன். அதில்வரும் முக்கியப் புத்தகங்களை வரவழைத்துப் படிப்பேன். கவலைகளை மறக்கவைக்கும் அருமருந்து வாசிப்பு.
என் கணவர் மறைந்து ஓராண்டுதான் ஆகிறது. இதுபோன்ற இக்காட்டான காலகட்டத்தில் எழுத்தாளர் சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’, சைலபதியின் ‘பெயல்’, கண்ணதாசனின் ‘ஏசு காவியம்’ உள்ளிட்ட பல புத்தகங்களைப் படித்து ஆடியோவாகப் பதிவு செய்து வருகிறேன். படிக்க வேண்டும் என்றால் அதற்குப் பார்வை அவசியம். ஆனால், என் மகன் போன்றவர்களுக்கு வாசிப்பை ஆடியோவாக வழங்கலாமே. படிக்க பார்வை தேவையில்லை; பாதையே தேவை.
- பி.கமலா, கிருஷ்ணகிரி.வாசிப்பை நேசிப்போம்