பெண்களுக்குக் கருவில் தொடங்கும் போராட்டம், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. அந்த வகையில் 2019-ல் உலகம் முழுவதும் பெண்கள் முன்னெடுத்த போராட்டங்களில் சில இவை.
கவனம் ஈர்த்த ‘வனிதா மதில்’
பெண்கள் இப்போதும் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுவதைக் கண்டித்து பெண்ணும் ஆணும் சமம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து ஜனவரி மாதத்தில் கேரளப் பெண்கள் அமைத்த ‘வனிதா மதில்’ நாட்டின் கவனத்தைத் திருப்பியது. பெண்களுக்கு ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் உரிமை உண்டு என்பதையும் தங்கள் முழக்கத்தின் ஒரு பகுதியாக முன்வைத்த அவர்கள் கேரள மாநிலத்தின் காசர்கோடு பகுதியிலிருந்து திருவனந்தபுரம் வரை 620 கி.மீ. தொலைவுக்குக் கைகோத்து நின்றனர்.
உரிமைக் குரல்
அமெரிக்காவில் பல மாகாணங்களில் கருக்கலைப்புக் குத் தடை இருக்கும் நிலையில் அலபாமா மாகாணமும் கருக்கலைப்புக்கு ஜூன் மாதம் தடை விதித்தது. இதை எதிர்த்துப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அலபாமா மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் பெண்களாக இருக்கும் நிலையிலும் அதன் செனட் சபையில் 35 பேரில் நால்வர் மட்டுமே பெண்கள். பெண்களிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் அவர்களுடைய உரிமையில் தலையிடுவதை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர்.
குடிக்கு எதிராக ஆரத்தி
சென்னை ஆவடியில் அடுத்தடுத்துச் செயல்படும் இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நூதன முறையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். மதுக்கடைக்கு வந்தவர்களுக்கும் டாஸ்மாக் கடைக்கும் அவர்கள் ஆரத்தி எடுத்தனர்.
சம உரிமை சம ஊதியம்
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சம ஊதியம் கேட்டு 1991 ஜூன் 14 அன்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பெண்கள் போராடினர். இது நடந்து 30 ஆண்டுகள் முடிந்தும் சம ஊதியம் என்பது கனவாகவே இருக்கிறது. அதனால் ‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் மாதம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அங்குள்ள தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன.
பணி நீக்கத்துக்கு எதிரான போராட்டம்
தெலங்கானா அரசு 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததைத் கண்டித்து ஊழியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, நிறுத்திவைக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்குவது, ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடினார்கள்.
மதுவுக்கு எதிரான மங்கையர்
கர்நாடகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் ஜனவரி 19-ல் நடைபயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின் போது வாகனம் மோதி 55 வயது ரேணுகாம்மா என்பவர் இறந்தபோது, அந்தச் சோகத்தையும் மீறி மற்றவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அமைதி வேண்டும்
புல்வாமா தாக்குதலையொட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்த நிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அமைதிப் பிரச்சாரத்தைக் கையில் எடுத்தனர். ‘வுமன் டு வுமன் அக்ராஸ் பார்டர், வுமர் ஃபார் பீஸ், ஸே நோ டு வார்’ போன்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் அவர்கள் டிரெண்டாக்கினர்.
மருத்துவர்களின் வேலைப் பளு
தமிழகத்தில் மருத்துவ உயர்கல்விப் படிப்பில் அரசுப் பணியில் இருப்போருக்கென 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்துவது, நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை, மருத்துவக் கருவிகள் போன்றவற்றைச் சீராக்குவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மருத்துவர்கள் அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொகுப்பு: க்ருஷ்ணி