பெண் இன்று

வாழ்வு இனிது: நீல நிறப் பிரம்மாண்டம்

செய்திப்பிரிவு

காட்சிக் கவிதை

கி.ச.திலீபன்

தற்செயலாகத் தேர்ந்தெடுத்த துறையே சண்முகராஜாவின் அடையாளமாகி விட்டது. திருமண ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கியவர், பயணங்களால் ஆட்கொள்ளப் பட்டார். வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து விடுபடும் உணர்வைக் கொடுக்கும் பயணங்களுக்காகவே பெரும்பாலான நாட்களைச் செலவிடும் சண்முகராஜா, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர். புதுப்புது நிலப்பகுதிகள், அங்கு வசிக்கும் மக்கள் என வானத்துக்குக் கீழிருக்கும் அற்புதங்களைப் படமெடுப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர்.

ஆரம்பத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் எனப் பக்கத்தில் இருக்கிற மாநிலங்களுக்குச் சென்றவருக்குத் தன் நீண்ட நாள் கனவான லடாக் பயணமும் ஒரு நாள் வாய்த்தது. “லடாக்கைப் பனிப் பாலைவனம்னு சொல்வாங்க.

கடல் மட்டத்திலிருந்து 15 ஆயிரம் அடி உயரத்தைத் தாண்டியபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உடல்ரீதியான சில பிரச்சினைகள் ஏற்பட்டன. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும்தான் சாப்பிட முடியுங்கிற சூழல். மற்ற நேரத்தில் பிஸ்கட், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளைத்தான் சாப்பிடணும்.

பனிக்கட்டி உருகி வர்ற தண்ணீரால் லடாக் போற வழி முழுவதும் சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். ஜிஸ்பாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம். ராணுவ வேன், டிரக் மாதிரியான பெரிய வாகனங்கள் மாட்டிக்கிச்சுன்னா போக்குவரத்து நெரிசல் சரியாக ஒரு நாள்கூட ஆகும். களிமண்ணாலேயே கட்டப்பட்ட ஷே பேலஸ்ஸையும் அப்பகுதியில் வாழும் மக்களையும் படம் எடுத்தேன்.

லடாக்ல இருந்து பாங்காங் ஏரிக்குப் போக ஒரு நாள் ஆச்சு. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சொந்தமான ஏரி அது. நீல நிறத்தில் பரந்து விரிந்திருக்கும் அந்த ஏரி பிரம்மாண்டமாக இருக்கும். அது கேமராவுக்குத் தனி விருந்து. கர்துங்லாதான் உலகிலேயே உயரமான போக்குவரத்துக்குப் பயன்படும் சாலை. ஆனா அங்க போறதுக்கான நேரமும் சூழலும் வாய்க்கலை” என்கிறார் சண்முகராஜா.

பாவனைகளும் உணர்ச்சிகளும்

இந்தியாவின் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நிலப்பகுதிகள், அங்கு வாழும் மக்கள், அவர்களின் பண்பாட்டைக் காட்சிகளாக சண்முகராஜா கவர்ந்துவருகிறார். இந்தியாவின் பன்முகத்தைக் காட்சிப்படுத்த விழையும் முயற்சியாகவும் இவரது ஒளிப்படங்களைக் கருதலாம்.

“திருச்சூர் மாவட்டத்துல மச்சாடு மாமாங்கம்ங்கிற திருவிழா பிரசித்திபெற்றது. துணி, வைக்கோலை வெச்சு செய்யப்பட்ட குதிரையை, உடல் முழுவதும் சாயம் பூசிக்கிட்டுத் தூக்கிட்டு ஓடுவாங்க. அந்த நிகழ்வு முழுவதையும் படமெடுத்திருக்கேன். மக்களோட மக்களா கலக்கும்போதுதான் அவர்கள் வெளிப்படுத்துற உணர்வுகளையும் கேமராவில் பதிவு பண்ண முடியும். அதில் எப்பவும் கவனமா இருக்கேன்” என்கிறார் சண்முகராஜா.சண்முகராஜா

SCROLL FOR NEXT