பெண் இன்று

அறிவோம் தெளிவோம்: சைபர் பாதுகாப்பு சாத்தியமே

செய்திப்பிரிவு

இணைய உலகம் ஆண்களைவிடப் பெண்களுக்குக் கூடுதல் ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் பெண்கள் ஏமாறுவது நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக ‘சைபர்சேஃப் கேர்ள்’ என்ற தளம் இயங்கிவருகிறது. சைபர் பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ஜி. ஆனந்த் பிரபுவின் முயற்சியால் கடந்த ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்தத் தளத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் வழிகாட்டிவருகிறார்கள்.

பெண்களின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இந்தத் தளம் 25 தகவல்டூன்களை (Infotoons) மின்நூலாக அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த ‘சைபர்சேஃப் கேர்ள்’ இலவச மின்நூலை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

எப்படி ஏமாற்றப்படுகிறோம்?

இந்த மின்நூல் அனைவரும் புரிந்துகொள்ளும்படி எளிமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆன்லைனில் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெரும்பாலும் பெண்கள் மோசடிக்குள்ளாகிறார்கள் என்பது தனித் தனிப் படக்கதைகளுடன் இந்த மின்நூலில் விளக்கப்பட்டுள்ளது. 25 விதமான ஆன்லைன் மோசடி பற்றிய அறிமுகக் குறிப்புகள், ஆன்லைன் மோசடி, குற்றத்தை விளக்கும் படக்கதைகள் போன்றவை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையை எப்படித் தவிர்க்கலாம் என்பதற்கான விளக்கமும் படக்கதையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மொபைல் ரீசார்ஜ் கடை, டெபிட் அட்டை படியெடுப்பு, எஸ்.எம்.எஸ். மோசடி, சைபர் பின்தொடர்தல், பணி அழைப்புக் கடிதம், டேட்டிங் இணையதளம், சமூக ஊடக ட்ராலிங், மொபைல் பழுதுநீக்கும் கடை, செயலிப் பொறிகள், கேமரா ஹேக்கிங், வைஃபை ஹேக்கிங், போலி மதிப்பீடுகள், திருமணத்தளங்களில் போலி சுயவிவரம், ஆன்லைன் விளையாட்டுகள், போலி முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் இந்தப் புத்தகத்தில் படக்கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தப் படக்கதைகள் குறிப்பிட்ட சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்படுவதற்கான அடிப்படைகள் ஆணித்தரமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் படிப்பு

இந்தத் தளத்தில் சைபர் பாதுகாப்புத் தொடர்பாக இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சைபர் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்தச் சான்றிதழ் படிப்பில் பதிவுசெய்து படிக்கலாம். சைபர் குற்றங்கள் பற்றிய நுணுக்கங்களை இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்பின்மூலம் தெரிந்துகொள்ளலாம். 24 உரைகளுடன் ஐந்து மணி நேர உள்ளடக்கத்துடன் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்தபிறகு, 30 நிமிட ஆன்லைன் தேர்வில் வெற்றிபெற்றால், இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

உங்கள் மின்னஞ்சல், கைபேசி எண்ணைப் பதிவுசெய்து, ‘சைபர்சேஃப் கேர்ள்’ மின்நூலை இந்த cybersafegirl.com/download/ இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சான்றிதழ் படிப்பு பற்றிய விவரங்களுக்கு: https://bit.ly/2KmM94R

- என்.கௌரி

SCROLL FOR NEXT