பெண் இன்று

போகிறபோக்கில்: ஆடைக்கேற்ற ஆபரணங்கள்

செய்திப்பிரிவு

அன்புதங்கம் விற்கிற விலைக்குத் தங்க நகைகளை எப்படி வாங்க முடியும் என்பது சிலரது கவலை என்றால், பெண்கள் எதற்குத் தங்க நகை அணிய வேண்டும் என்பது எதிர்தரப்பு வாதம்.

தங்க நகை இல்லையே என்ற கவலையைப் போக்குவதுடன் நாகரிகத் தோற்றத்தையும் தருகிற பட்டுநூல் நகைகளை அணியலாமே என்கிறார் சுபா ஜெயராம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கோவையைச் சேர்ந்த இவர், சில்க் த்ரெட் நகைகளைச் செய்து விற்பனை செய்துவருகிறார்.

வழிகாட்டிய வலைத்தளம்

பொதுவாகக் கவின் கலையில் ஆர்வமுள்ளவர்கள்தாம் இதுபோன்ற கலைநயம்மிக்க துறையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், கணினி அறிவியலில் முதுகலை படித்துள்ள சுபா எதேச்சையாகத்தான் இத்தொழிலைத் தொடங்கியுள்ளார். “சாதாரண மணிகளைக் கோத்து குழந்தைகளுக்கு அணிவிப்பேன். ஒரு நாள் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது சில்க் த்ரெட் பற்றிப் பேச்சு வந்தது. பார்க்க அழகாகவும் விலை குறைவாகவும் இருந்ததால் சில்க் த்ரெட் நகைகளைச் செய்ய ஆன்லைன் மூலம் கற்றுகொண்டேன்” என்கிறார் சுபா.

நகைகளைச் செய்யத் தேவையான பொருட்களை வாங்கி அவற்றைத் தன் கற்பனைக்கு ஏற்றவகையில் வடிவமைக்கிறார். ஆடையின் எஞ்சிய சிறிய அளவிலான துணிகளைக் கொடுத்தால் அதில் அட்டையை அடித்தளமாக வைத்து அதன்மேல் பட்டு நூலைச் சுற்றி ஆடைகளுக்கு ஏற்றவகையில் நகைகளை வடிவமைத்துத் தருகிறார்.

மீண்டெழ உதவிய கலை

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொழிலைத் தொடங்கிய சில மாதங்களிலேயே எதிர்பாராத விபத்தால் சுபாவின் வலது கை மூட்டுத் தசைகள் இறுக்கமாகிவிட்டன. வீட்டில் எந்த வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் கையைப் பழையபடி உயர்த்தவோ மடக்கவோ முடியவில்லை. அப்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட சுபாவிடம் ஓவியம் வரைவது போன்ற கலைகளில் ஈடுபடச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால், நம்பிக்கையுடன் மீண்டும் சில்க் த்ரெட் நகைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் சுபா.

“விபத்துக்குப் பிறகு வலது கை இருந்தும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஒரு பிடி சோற்றைக்கூட எடுத்துச் சாப்பிட முடியாது. பல நாட்கள் பிசியோதெரபி சிகிச்சைக்குப் பிறகுதான் கையை ஓரளவு அசைக்க முடிந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என்னால் முடிந்தவரை மறுபடியும் நகைகளைச் செய்யத் தொடங்கினேன். கை வலித்தால் ஓய்வெடுத்துக்கொள்வேன். சிறிது நேரம் கழித்துத் தொடர்வேன். அந்த நேரத்தில் என் கணவரும் தம்பியும்தான் என்னை உற்சாகப்படுத்தினார்கள்” என்கிறார் சுபா.

வலியில் இருந்து மீண்டெழுந்தவருக்கு முதல் ஆர்டர் பத்தாயிரம் ரூபாய்க்குக் கிடைத்தது. ஒரு நகையைச் செய்ய பத்து முதல் பதினைந்து நாட்கள் எடுத்துக் கொள்கிறார். சொந்தமாகக் கடை வைக்க முடியாததால் ‘JS Rainbow Creation’ என்ற ஆன்லைன் பக்கத்தை விற்பனைக்காகத் தொடங்கியுள்ளார்.

- அன்பு

SCROLL FOR NEXT