பெண் இன்று

பெண்கள் 360: மருத்துவர்கள் ஏன் போராடுகிறார்கள்?

செய்திப்பிரிவு

தொகுப்பு: ரேணுகா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மருத்துவ உயர்கல்விப் படிப்புகளில் அரசுப் பணியில் உள்ளோருக்கென 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இந்த இடஒதுக்கீடு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கைவிடப்பட்டது. இதனால் ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களின் நிலை கேள்விக்குறியாகி யுள்ளது. 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை, மருத்துவ உபகரணங்கள் போன்ற அடிப்படை வசதிகளை அரசு மருத்துவமனைகளில் பின்பற்ற வேண்டும் என்பவை இவர்களுடைய முக்கியக் கோரிக்கைகள்.

தவிர, முதுகலை மருத்துவம் படித்து அரசுப் பணியில் சேரும் மருத்துவர்களுக்கு 20 ஆண்டுகள் கழித்துத்தான் அரசின் முழு ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்குள் ஒரு மருத்துவர் ஐம்பது வயதை எட்டிவிடுகிறார். தமிழக அரசு இந்த விதிமுறையைத் தளர்த்தி மத்திய அரசு போல் 13 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவருக்கு அரசுப் பணியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும் போராடினார்கள். மருத்துவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என 2018 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியது.

ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு தங்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களின் கோரிக்கை. மருத்துவர்கள் போராட்டத்தில் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் பிரிவுகளில் பணியாற்றிவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி மருத்துவர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

யோகா நானம்மாள் மறைவு

கோவை அத்திப்பாளைத்தைச் சேர்ந்த 99 வயதான நானம்மாள், எட்டு வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை செய்துவந்தார். இவரிடம் பத்து லட்சம் பேர் யோகாசனப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

600-க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கியுள்ளார். நானம்மாளின் இந்தச் செயலைக் கௌரவிக்கும் விதமாக 2018-ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே செல்லாத அவர் தினமும் யோகா செய்வதைக் கடமையாகக் கொண்டவர்.

இந்நிலையில் கடந்த வாரம் கட்டிலில் இருந்து தவறி விழுந்த அவர், உடல்நலக் குறைவால் அக்டோபர் 26 அன்று காலமானார்.

மீசையை மழிக்கத் தேவையில்லை

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள் சிலருக்கு மீசை வளர்வதுண்டு. இதற்காக அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால், முகத்தில் மீசை உள்ள பெண்கள் இனி அதை மறைக்கவும் மழிக்கவும் வேண்டியதில்லை என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பெண்களுக்காக ஷேவிங் பொருட்களை விற்பனை செய்யும் Billie நிறுவனம். இளைஞர்களின் இறப்பைத் தடுப்பதற்காகச் செயல்பட்டுவரும் ‘Movember’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், நீண்ட மீசையுள்ள ஆண்களுக்கான போட்டிகளை நவம்பர் மாதத்தில் நடத்துவது வழக்கம்.

அதில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு இளைஞர்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக ‘Movember’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மீசை உள்ள பெண்களையும் இணைக்கும் விதமாக Billie நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ‘பெண்களுக்கும் மீசை உண்டு’ என உரக்கச் செல்லும் இந்த விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

பெண்களுக்கு இலவசப் பயணம்

டெல்லி அரசுப் பேருந்துகளில் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது. இதை ஊக்குவிக்கும் வகையிலும் பொதுப் போக்குவரத்தில் பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிற சிறப்புப் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. போக்குவரத்துக்கு ஆகும் பயணச் செலவை அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என வேலைக்குச் செல்லும் பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் வகையில் 13 ஆயிரம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணிநீக்கத்தால் நேர்ந்த துயரம்

தெலங்கானா மாநில அரசு சமீபத்தில் 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதைக் கண்டித்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் நடத்துநர் நீரஜா, தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் சித்திப்பேட்டையைச் சேர்ந்த லதா மகேஸ்வரி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, நிறுத்திவைக்கப்பட்டுள்ள செப்டம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவது, ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் மாதம் 5-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வரவில்லை.

இதனால் பணிநீக்க அறிவிப்புக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்வரை ஊழியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT