பெண் இன்று

நட்சத்திர நிழல்கள் 28: தீர்த்தக்கரையின் செண்பக புஷ்பங்கள்

செய்திப்பிரிவு

செல்லப்பா

தைப்பொங்கல் (1980) திரைப்படத்தின் தமிழ்ச்செல்வி, செண்பகபுரம் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆனால், அங்கிருந்து வெளியேறத் துடிக்கிறாள். கிராம வாழ்க்கையும் அதன் மனிதர்களும் அவளுக்கு அந்நியமாகிப்போனார்கள். அவர்களுடைய குத்தல் பேச்சும் இளக்கார மொழியும் அவளை வாட்டியது. அந்த மனிதர்களிடமிருந்து விலகிச் சென்றுவிட வேண்டும் என்பதே அவளது விருப்பம். அதற்காகவே பட்டப்படிப்பு முடித்த பின்னர் தட்டச்சு கற்றுக்கொண்டாள். ஏதேனும் ஒரு வேலையை வாங்கிக்கொண்டு பட்டணத்தில் மக்கள் திரளோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என நினைத்தாள். இது தீர்வல்ல என்பது அவளுக்குப் புரியவில்லை.

செல்விக்கு இரண்டு வயதானபோது, தைப்பொங்கலன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அவளுடைய தந்தை இறந்துவிட்டார். அந்த மஞ்சு விரட்டு அவளது மகிழ்ச்சியை விரட்டியது. தந்தையற்ற சூழலில் அவளுடைய தாய் ஜானகிக்கு ஆதரவு தந்தவர் பெருங்குடிகாரரான வைரம். எஸ்டேட்டில் பணிசெய்யும் அவர், வார இறுதி நாட்களில் மட்டும் ஜானகி வீட்டுக்கு வருவார்.

செல்விக்கு அவர் வெறும் அங்கிள். அவரை அப்பா என அவள் சொல்வதேயில்லை. அவளுடைய அப்பா சதாசிவத்தின் இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க அவளுடைய மனம் ஒப்பவில்லை. மேலும், தன் தாயின் கழுத்தில் வைரம் தாலி கட்டாததால் ஊரில் இழிசொல்லுக்கு ஆளாவதாக ஆவலாதிப்படுகிறாள் அவள். தாலி என்பதைப் பெரிய வேலியாகக் கருதுகிறாள் அந்தப் பேதை.

அவன் கைவிட்டுப்போன காதலன்

ஜானகியைப் பொறுத்தவரை தாலிக்கயிறு தேவை என நினைக்கவில்லை; கணவன் அவசியம் என நினைக்கிறாள். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தன் குழந்தையை வளர்க்கவும் தன் வாழ்வை நடத்தவும் உதவியவன் என்ற வகையில் அவளுக்கு வைரத்தின் மீது மதிப்பும் அன்பும் உண்டு. தாலி அணியவில்லை என்பதை அவள் குறையாகக் கருதவில்லை. ஆனால், செல்விக்கு அது பெரிய குறையாகப்படுகிறது. அம்மாவின் வாழ்க்கை காரணமாகவே தன் வாழ்க்கை இன்னலுக்கு ஆளாகிறது என்று நம்புகிறாள். வைரம் தாலி என்னும் கயிற்றைக் கட்டவில்லையே தவிர, ஜானகியை மனைவியாகத்தான் நடத்துகிறான்.

தனக்குத் தட்டச்சு பயிற்று விக்கும் ஆசிரியர் சுதாகரை செல்வி காதலிக்கிறாள். சுதாகருக்கும் அவள்மீது காதலுண்டு. ஆனால், தன் தந்தையை எதிர்த்துப் பேச முடியாத கோழை அவன். ஊரின் பேச்சறிந்த சுதாகரின் தந்தைக்கு செல்விமீதோ அவளுடைய குடும்பத்தின் மீதோ நல்ல அபிப்ராயமில்லை. இதையெல்லாம் மீறி சுதாகரை ஒருவழியாகத் தேற்றி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டு அவனை அழைத்தும் சென்றுவிடுகிறாள் செல்வி. இருவரும் ஹோட்டலில் அறையெடுத்துத் தங்குகின்றனர். அன்றிரவு சுதாகர் கண்ட கனவில் தன்னுடைய தந்தையையும் செல்வியின் தந்தையையும் கண்டு பயந்துவிடுகிறான். செல்வியை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

ஹோட்டலில் சோதனைக்கு வந்த காவலர்கள் அவளைப் பாலியல் தொழிலாளியாகக் கருதி அழைத்துச் செல்கின்றனர். அப்போது, செல்வியின் தோழி மேரியின் அண்ணன் சூசை அவளைக் காப்பாற்றி ஊருக்கு அழைத்து வருகிறான். கிராமத்தில் கடைவைத்து நடத்தும் சூசை செல்வியை மனதார விரும்புபவன். இப்போது செல்விக்கு ஓடிப்போனவள் என்ற அவப் பெயர் வேறு சேர்ந்துகொள்கிறது. ஆனால், அவளுடன் சென்ற சுதாகருக்கு அப்படியொரு பழி வரவேயில்லை. அவனுக்குப் பெண் தர எல்லோரும் தயாராக இருக்கிறார்கள்; ஆனால், செல்வியின் திருமணம்தான் கேள்விக்குறியாகிறது.

அவள் ஒரு குடும்பப் பெண்

தான் ஓடிப்போனாலும் கற்பைப் பாதுகாத்துக்கொண்டோம் என்பதில் அவளுக்கு அலாதிப் பெருமை. ஓடிப்போனவள்னு ஊர் பேசினால்கூட வேதனைப்படாத அவள், ஒரு கோழையோட போனதால் வெட்கப்படுகிறாள். ‘அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்திவிடக் கூடாது என்று கருதியே சொல்லாமல் சென்றதாக’ சுதாகர் கூறும்போதுகூட, ‘அப்படி ஏதாவது செய்திருந்தால் ஆம்பளை என்பதை நிரூபித்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்கிறாள் செல்வி. ஒருவன் ஆம்பளை என்பதை இப்படித்தானா நிரூபிக்க வேண்டும் செல்வி?
அதே கிராமத்தில் வாழ்பவள் சொர்ணா. அவள் படித்து முடித்து ‘அர்ச்சனா சிட்ஸ் ஃபண்ட்ஸ்’
என்னும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள். அவளுடைய சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது.

அவளுக்கு அம்மா இல்லை. அப்பாவும் சின்ன தம்பியும் மட்டுமே. அப்பா கல்யாணத் தரகர். பெண்ணின் சம்பாத்தியம் அவருக்கு வேண்டும். ஆனால், பெண் அலங்கரித்துக்கொண்டு வேலைக்குப் போகும் தன்மை அவருக்கு ஆகாது. சொர்ணா கடுகடுவென்று இருக்கிறாள்; எரிச்சலுடனே பேசுகிறாள். சொர்ணாவின் தந்தை செல்விக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சேகர் என்பவனை செல்வியைப் பெண் பார்க்க அழைத்துவந்தார். வந்த மாப்பிள்ளைக்கு செல்வியின் பின்புலம் காரணமாக அவளைப் பிடிக்கவில்லை. அவன் சொர்ணாவைப் பார்த்துவிட்டுப் பிடிச்சிருக்கு என்று சொல்லிச் செல்கிறான்.

‘பிடிச்சிருக்குன்னு அவர் சொன்னது என்னயில்லப்பா, என் உடம்ப. பிடிச்சிருந்தா பணத்தைக் கொடுத்துக் கூட்டிட்டுப்போகணுமே. பணத்த வாங்கிட்டுக் கூட்டிட்டுப் போறாங்களே அதுக்குப் பேருதான் கல்யாணமா?’ என்று கோபத்துடன் தன் தந்தையிடம் கேட்கிறாள். ‘ஒரு குடும்பப் பொண்ணு பேசுற பேச்சா’ என்று கேட்கிறார் தந்தை. ‘குடும்பப் பெண்ணா ஊர் வாழ விடணும்’ என்கிறாள். ‘அப்பா அடிக்கடி சொல்வியே ஒரு பொண்ணு எப்போதுமே காப்பாத்திக்கிட வேண்டியது கற்புன்னு.

இல்லப்பா... எப்படியாவது சேர்த்துவைக்க வேண்டியது காசுப்பா, காசு. கற்பை வித்தாவது காசு சேர்த்துவச்சுட்டா அந்தக் காசுக்காக எச்சில் இலையில் சாப்பிடக்கூடத் தயாரா இருக்கானுங்க’ என்று வெறுப்புடன் சொல்கிறாள். இப்படியெல்லாம் சொன்னாலும் மாப்பிள்ளை வீட்டார் அவளுக்காகக் கேட்ட பத்தாயிரம் ரூபாய் வரதட்சணைக்காக அவள் கம்பெனியில் போட்ட சீட்டுப் பணத்தை வாங்கித் தருவதாகச் சொல்கிறாள். அவனையே மணந்துகொள்கிறாள்.

அது ஒரு பத்தாம்பசலித்தனம்

தனக்குத் திருமணம் ஆகும் எனும் நம்பிக்கையையே செல்வி இழந்துவிடுகிறாள். தன் தாய் கழுத்தில் ஒரு தாலி இல்லாததால்தான் தனக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று ஆணித்தரமாக நம்புகிறாள். இதை அறிந்த ஜானகி, தனக்குத் தாலி கட்டி தைப்பொங்கலன்று திருவிழாவுக்குக் கூட்டிச் செல்லும்படி வைரத்தை நிர்ப்பந்திக்கிறாள்.

செல்வி தன்னை அப்பாவாக ஏற்றுக்கொள்ளவில்லையே என்கிறான் அவன். அந்த நேரத்தில் செல்வி ‘அப்பா’ என்று கத்துகிறாள். செல்வி தன்னை ஏற்றுக்கொண்டதாகக் கருதி வைரம், ஜானகிக்குத் தாலி கட்டச் சம்மதிக்கிறான். ஜானகி மகிழ்ச்சியாகக் கோயிலுக்குச் செல்கிறாள்.

வீட்டில் அமர்ந்து குடிக்கத் தொடங்கும் வைரம் குடிபோதையில் வரம்பு மீறுகிறான். அவள் அப்பா என்று அழைக்காதபோதெல்லாம் கண்ணியம் காத்தவன் இப்போது கட்டுப்பாட்டை இழக்கிறான். வீட்டுக்குத் திரும்பிய ஜானகி தனது ராமனைத் தானே அடித்துக்கொன்று, தன் மகளைக் காப்பாற்றுகிறாள். அவள் கழுத்தில் கயிறு ஏறவில்லை; கைகளில் விலங்கு பூட்டப்படுகிறது.

தாயும் இல்லாத சூழலில் இறுதியில் செல்வி சூசையைக் கரம் பற்றுகிறாள். பெண்களுக்குத் திருமணம் பாதுகாப்பு; கணவன் அவசியம் என்னும் புரிதல் சமூகத்தின் பண்படாத தன்மையையே வெளிப்படுத்துகிறது. தனியே இருக்கும் பெண்ணுக்குப் பெரும்பாலான ஆபத்து ஆணால் ஏற்படுகிறது. ஆண்கள் திருந்தாதவரை பெண்ணுக்குத் திருமணமே பாதுகாப்பு எனும் பத்தாம்பசலித்தனமே தொடரும்.

பாடலாசிரியராகப் புகழ்பெற்ற எம்.ஜி.வல்லபன் எழுதி இயக்கிய படம் இது. ஃபிலிமாலயா என்னும் திரைப்பட இதழை நடத்தியவர் இவர். இந்தப் படத்தில் செல்வி கதாபாத்திரத்தில் ராதிகாவும் சொர்ணா கதாபாத்திரத்தில் சரிதாவும் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ஜென்சி பாடிய ‘தீர்த்தக்கரையினிலே செண்பக புஷ்பங்களே’ பாடல் பிரபலமானது.

(நிழல்கள் வளரும்) கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள:
chellappa.n@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT