பெண் இன்று

360: தடைகளைத் தாண்டிய தாய்

செய்திப்பிரிவு

தொகுப்பு: ஆசாத்

தடைகளைத் தாண்டிய தாய்

கத்தார் தலைநகர் தோஹாவில் சர்வதேசத் தடகளப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பெண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி ஆன் ஃப்ரேசர் பிரைஸ் தங்கம் வென்றார்.
பெண்கள் பிரிவில் 100 மீ. ஓட்டத்தை அதிவிரைவாகக் (10.71 விநாடிகளில்) கடந்த முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் ஷெல்லி. குழந்தைப்பேற்றுக்கு பிறகு அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதால் உலகமே வியந்து கொண்டாடுகிறது. இந்தப் போட்டியில் வென்றதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷெல்லிக்கு உறுதுணையாக இருந்தது அவரது கால்கள் மட்டுமே. ஓட்டப் பந்தயம்தான் அவரது எதிர்காலத்தின் கதவுகளைத் திறந்தது. தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு இணையாகப் போற்றப்படுபவர் ஷெல்லி. குழந்தை பிறந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. உடனே ‘ஷெல்லியின் ஓட்டம் நின்றுவிட்டது’, ‘அவருக்கு இனி, குழந்தையைப் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும்’ என்றெல்லாம் சிலர் பேசத் தொடங்கினர். ஆனால், இவை எதுவும் ஷெல்லியை நெருங்கக்கூடவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பான இடைப்பட்ட காலத்தில் கடும் பயிற்சியை அவர் மேற்கொண்டார்.

பார்வையாளர்கள் வரிசையில் ஷெல்லியின் மகன் உட்கார்ந்திருக்க, களத்தில் நின்றிருந்தார் ஷெல்லி. கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனையைப் பின்னுக்குத் தள்ளி, நிறைவுக்கோட்டை ஷெல்லி நெருங்கியபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. ‘‘எனக்கு 32 வயதாகிறது. இரண்டு வயதுக் குழந்தைக்குத் தாய். ஆனால், இவை எதுவும் என் ஓட்டத்தை நிறுத்தாது.

குழந்தைப்பேறு என்னை முடக்கவில்லை. முன்பைவிட முந்திச் செல்லவே செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் தாய்மை என்பது தடைல்ல; வெற்றியின் மற்றொரு பெயர். நம் இலக்கு எது என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். அவதூறான பேச்சுகளுக்கு வெற்றிதான் சிறந்த பதில். என்னுடைய இந்த வெற்றி இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்” என, போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் தன் மகனை உற்சாகத்துடன் அணைத்துக்கொண்டு பேசினார் ஷெல்லி.

நம்பிக்கை நடை

பாரீஸில் கடந்த வாரம் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் இரண்டு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட இங்கிலாந்துச் சிறுமி டெய்சி மே டெமிட்ரே, வீர நடைபோட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தார். ஐந்தாம் வகுப்பு படித்துவரும் ஒன்பது வயது டெய்சி, எலும்பு வளர்ச்சித் தேய்மான நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இரண்டு கால்களையும் இழந்தார்.

ஆனால், அவரது தன்னம்பிக்கையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. கடந்த மாதம் நடந்த ‘நியூயார்க் ஃபேஷன் வாக்’ நிகழ்ச்சியில்தான் டெய்சி அறிமுகமானார். தற்போது பாரீஸ் ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்று, பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். கணிதம், ஆங்கிலப் பாடங்களை விரும்பிப் படிக்கும் டெய்சி, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. இரண்டு செயற்கைக் கால்களுடன் ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ராம்ப் வாக் மேடையில் நடந்துகொண்டே ஜிம்னாஸ்டிக் செய்து அசத்துவது டெய்சியின் தனிச்சிறப்பு.

வரலாற்றை மீட்டெடுக்க உதவிய வழக்கறிஞர்

2,600 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த தமிழர்களின் நாகரிக நகரமான கீழடி ஆய்வறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் வழக்கறிஞர் கனிமொழி மதியும் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடவும், கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்கே கிடைத்த தொல்பொருள்களை அங்கேயே வைத்துப் பாதுகாக்கவும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார் வழக்கறிஞர் கனிமொழி மதி.

இந்த வழக்கு கீழடி அகழாய்வில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிடவும், அகழாய்வுப் பணியில் தமிழக அரசு இணைந்து செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

“ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் ஆவணப்படுத்தாமல் போனதுபோல் கீழடியிலும் நடக்கக் கூடாது என்ற எண்ணம்தான் பொதுநல வழக்குத் தொடரக் காரணமாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார் கனிமொழி மதி. தமிழர்களின் நாகரிகத்தை உலக நாடுகள் திரும்பிப் பார்க்க முக்கியக் காரணமாக இருப்பவை கீழடி அகழாய்வு முடிவுகள். அந்த முடிவுகள் வெளிச்சத்துக்கு வர வழக்கறிஞர் கனிமொழி மதியும் காரணம்.

இப்படிச் சொன்னாங்க: தாய்மை என்பதே வாழ்க்கையல்ல

“விளையாட்டுத் துறையில் உள்ள பெண் குழந்தைகளிடம், இப்படியே விளையாடிக்கொண்டிருந்தால் உன்னை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். நான் சிறுமியாக இருந்தபோது என்னைச் சுற்றியிருந்த உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரும் திறந்தவெளி விளையாட்டால் உடல் கறுத்துவிடும் எனவும் என்னை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டர்கள் எனவும் சொல்வார்கள். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இதே அறிவுரையைத் தற்போது விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களும் எதிர்கொள்கிறார்கள்.

பெண்கள் சிவப்பழகுடன் இருக்க வேண்டும் என்ற கருத்து நம் கலாச்சாரத்தில் ஆழமாகப் பொதிந்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் என்னுடன் படம் எடுத்துக்கொண்ட ஒருவர், “தாய்மை ஒளிரும் உங்கள் முகம் அழகாக உள்ளது. உங்கள் மகன் எங்கே?” என்றார். அவன் ஹைதராபாத்தில் இருப்பதாகச் சொன்னேன்.
அவரோ, “உங்கள் மகன் உங்களுடன்தான் இருக்க வேண்டும்” என்றார். உடனே நான் அவருடைய குழந்தை எங்கே என்றேன்.

அவன் வீட்டில் இருப்பதாக அவர் சொல்ல, “அப்படியென்றால் நீங்களும் வீட்டில்தானே இருக்க வேண்டும்” என்றேன். தாய்மை என்பது பெண்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டும். அதுவே அவர்கள் வாழ்க்கையல்ல என்பதைக் குடும்பத்தினரும் சமூகத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

- டெல்லியில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில்
‘பெண்களும் தலைமைப் பண்பும்’ எனும் விவாத நிகழ்ச்சியில்
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.

SCROLL FOR NEXT