பெண் இன்று

கேளாய் பெண்ணே: இப்படியும் குறைக்கலாமே தொப்பையை!

செய்திப்பிரிவு

எனக்கு 24 வயதாகிறது. எனக்கு அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலை. அடிக்கடி எழுந்து போக முடியாது. தினமும் அதிக நேரம் உட்கார்ந்தபடியே இருப்பதால், தொப்பையின் அளவு அதிகரித்தபடியே இருக்கிறது. காலையில் அலுவலகத்துக்குச் சீக்கிரம் செல்ல வேண்டியிருப்பதால், உடற்பயிற்சி செய்யவும் நேரமில்லை. எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

தொப்பை குறித்த பார்வதியின் கவலைக்கு ஆலோசனை வழங்குவதுடன் சில வழிமுறைகளையும் பரிந்துரைக்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் உமா ராகவன்.

தொப்பை ஏற்பட உட்கார்ந்திருப்பது மட்டுமே காரணமல்ல. உடலுக்குக் குறைவான வேலை கொடுக்கும்போது அது எல்லா உறுப்புகளையுமே பாதிக்கும். அதில் தொப்பை மட்டுமே நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது பரம்பரை பிரச்சினையாகவும் இருக்கலாம். சோடா, காபி, மைதா, பேக்கரி உணவு வகைகள் போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படும். தொப்பையைக் குறைக்க தனியாக எந்த மருந்தும் கிடையாது. உடல் பருமனால் (120 கிலோவுக்கு மேல்) அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் மருத்துவர் களின் ஆலோசனையுடன் அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம். மற்றவர்கள் அறுவை சிகிச்சை மூலமாகத் தொப்பையைக் குறைப்பது நல்லதல்ல. அதைவிட அன்றாட உணவிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் செய்தால் தொப்பையைக் குறைக்க முடியும்.

தினமும் உணவில் ஒரு கப் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோலுடன் சாப்பிடக்கூடிய பழங்களைத் தோலுடன் சாப்பிடுவது உகந்தது. பழங்களின் தோல், வயிற்றில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். ஆப்பிள் போன்ற பழங்கள் பளபளப்பாக இருப்பதற்காகத் தோலில் மெழுகுப் பூசப்படும். அதனால் அவற்றைச் சாப்பிடுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் (36 டிகிரி ஃபாரன்ஹீட்) இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி சாப்பிடலாம்.

தினமும் ஒருமுறை கிரீன் டீ குடிப்பது, போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிப்பது, பிராணாயாமம் செய்வதும் வயிற்றுக் கொழுப்பை நீக்க உதவும்.

சாதாரண நாற்காலியில் நேராக அமர்ந்து, கைப்பிடிகளைப் பிடித்தபடி, கால்களை ஒரு பத்துமுறை மேலே தூக்கி, கீழிறக்க வேண்டும். இந்தப் பயிற்சியும் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்.

ஒரு நாளில், குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது நடக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் நடப்பதைவிட ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் இடைவெளிவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம். அதுவே, இரவில் சாப்பிட்ட பிறகு, ஒன்றரை மணி நேரம் இடைவெளிவிட்டு நடக்கலாம். இப்படிச் செய்தால் வயிற்றில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கலாம்.

நான் இல்லத்தரசி. என் கணவரின் மாத வருமானம் 30 ஆயிரம் ரூபாய். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு வாடகை, மளிகை, குழந்தைகள் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு என ஒரு மாதத்தின் மொத்த வருமானமும் சேமிக்க முடியாமல் செலவாகிவிடுகிறது. இதனால் அவசர தேவைகளுக்குக் கடன் வாங்கும் நிலைமை உருவாகிறது. இதை எப்படிச் சமாளிப்பது?

சென்னை வாசகி பூரணியின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபார்ச்யூன் பிளானர்ஸ் நிதி ஆலோசகர் பி. பத்மநாபன்.

சென்னை போன்ற பெருநகரத்தில், முப்பதாயிரம் மாத வருமானத்தில் சேமிப்பு என்பது சவாலானது. அதுவும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் சேமிப்பின் சாத்தியம் மிகவும் குறைவு. நீங்கள் செய்யும் செலவுகளை ஒன்று விடாமல் காகிதத்தில் பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியலில், அநாவசியமான செலவுகளைக் கண்டுபிடித்து, அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். நீங்கள் கடுமையாக முயன்றால், உங்கள் மாதவருமானத்தில் இரண்டாயிரம்வரை மிச்சப்படுத்தலாம். அதற்குமேல் முடியாது. உங்கள் வருமானத்தை அதிகரிப்பதுதான் இதற்குத் தீர்வு. உங்கள் கணவர் வார இறுதியில் பகுதிநேரமாக ஏதாவது வேலை செய்யலாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதைப் பற்றித் திட்டமிடலாம். வருமானத்தை அதிகரித்த பிறகே உங்களால் சேமிப்பைப் பற்றி யோசிக்க முடியும்.

SCROLL FOR NEXT