பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: மனதை நேர்ப்படுத்தும் புத்தகம்

செய்திப்பிரிவு

நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்திலேயே வாசிப்பு தொடங்கி விட்டது. இப்போது அறுபதைத் தாண்டிவிட்டேன். என் தனிமையை வாசிப்பின் துணையோடு இனிமையாகக் கழிக்கிறேன். நாங்கள் மதுராந்தகத்தில் குடியிருந்தபோது குடியிருப்பில் இருந்த அனைவரும் ஒவ்வொருவிதமான மாத, வார இதழ்களை வாங்குவோம். பள்ளிக் காலத்தில் நாளிதழின் தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான் பள்ளிக்குப் புறப்படுவேன்.

எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலை பலமுறை படித்திருக்றேன். பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமியும் சீதாபாட்டியும்’ புத்தகத்தைப் படித்தாலே கவலை மனதைவிட்டு அகன்றுவிடும். மணியனின் ‘இதய வீணை’ பயணக் கட்டுரைகள் நாம் பார்க்காத இடங்களை நேரில் பார்த்த அனுபவத்தைத் தரும்.

சமீபத்தில் என் மகள் கொடுத்த அனுராதா ரமணனின் ‘மீண்டும் மீண்டும் உற்சாகமாய் உயிர்த்தெழலாம்’ புத்தகத்தைப் படித்தேன். வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் உற்சாகமாக எப்படி இருக்கலாம் என்பதை அந்தப் புத்தகத்தின்மூலம் கற்றுக்கொண்டேன்.

திருக்குறள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும். நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள கரும்பலகையில் தினமும் ஒரு குறளை விளக்கத்துடன் எழுதுவோம். புத்தக வாசிப்பு, கோணலான மனதைக்கூட நேராக்கும் வல்லமை பெற்றது.

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக்கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்க்க முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்கள் ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

- ராகினி வாசுதேவன், கூடுவாஞ்சேரி.

SCROLL FOR NEXT