பெண் இன்று

வானவில் பெண்கள்: கால் மேல் பலன்!

செய்திப்பிரிவு

- எல். ரேணுகாதேவி

காலே நீ எனக்குத் தேவையில்லை
பறக்கத்தான் என்னிடம் சிறகு இருக்கிறதே

- உலகப் புகழ்பெற்ற பெண் ஓவியர் ஃப்ரீடா காலோவின் வரிகளை நினைவுபடுத்துகிறது மானசி ஜோஷியின் வெற்றி. மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றிருக்கும் மானசி ஜோஷிக்கு ஒரு கால் இல்லை. ஆனால், இந்த உலகையே வலம்வரும் அளவுக்கு மனதிடம் அவரிடம் இருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்தவர் மானசி ஜோஷி (30), மின்னணுப் பொறியியல் பட்டதாரி. சிறுவயதிலிருந்தே பாட்மிண்டன் விளையாடிவருபவர். அலுவலகப் பணியில் சேர்ந்த பின்பும் அதைத் தொடர்ந்தார். 2011-ல் மானசியின் அலுவலகத்தில் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் பாட்மிண்டன் போட்டியில் மானசி முதலிடம் பிடித்தார். ஆனால், அதே ஆண்டில்தான் எதிர்பாராத விபத்தில் தன் இடது காலை இழந்தார்.

எதிர்பாராத விபத்து

“விபத்து நடந்த அன்று இருசக்கர வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தேன். நிதானம் இழந்த லாரி என் மீது மோதியதில் என் இடதுகால் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. அங்கிருந்த பலர் உதவ முன்வந்தாலும் என்னை எப்படி வெளியே எடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பாவும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்.

விபத்து நடந்து மூன்று மணி நேரம் சாலையிலேயே இருந்தேன். பிறகு ஒருவழியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், அங்கே அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாததால் மற்றொரு மருத்துவமனையைத் தேடிச் செல்ல வேண்டியதாயிற்று. பத்து மணிநேரம் எந்தச் சிகிச்சையும் மேற்கொள்ளாததால் அடுத்த இரண்டு நாளில் என் கால் அழுகத் தொடங்கியது” என மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் மானசி தெரிவித்துள்ளார்.

செயற்கைக் கால் பொருத்தப்படுவதற்கு மனதளவில் திடப்படுத்திக்கொண்டார் மானசி. அதற்கு அவருக்கு இரண்டு நாட்களே தேவைப்பட்டன. விழுந்தாலும் சட்டென உதறி எழும் குதிரைபோல் நிமிர்ந்து நின்றார். “எனக்கு இப்படி நடந்துவிட்டதே எனப் புலம்பாமல் என் குறைபாட்டை ஏற்கத் தொடங்கினேன். அதுதான் என்னை எளிதாக மீண்டுவரச் செய்தது” என்கிறார் அவர்.

புதிய செயற்கைக் காலுடன் நடப்பதற்கு அவருக்கு எட்டு மாதங்கள் பிடித்தன. உடல்நிலை முன்னேறியவுடன் பழையபடி அலுவலகம் செல்லத் தொடங்கினார். ஆனால், சுற்றியிருந்த வர்கள் மானசியை இரக்கத்துடன் பார்த்தனர். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக மீண்டும் பாட்மிண்டனைக் கையில் எடுத்தார்.

மெருகேற்றிய தோல்வி

மாற்றுத்திறனாளி விளையாட்டுக் குழுவை அணுகி, செயற்கைக் காலுடன் பயிற்சியெடுத்தார். அலுவலக விளையாட்டுப் போட்டியில் வெல்வதை லட்சியமாகக் கொண்டு தினமும் மாலையில் பயிற்சி செய்தார்; போட்டியில் வென்றார். “நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே கால்களே என் பலம். திடீரென ஒரு காலை இழந்தது வேதனையாக இருந்தது. ஆனால், விபத்துக்குப் பிறகான வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு கால் இல்லை என்பதைக் குறையாகப் பார்க்காமல் என்னை நானே மதிக்கத் தொடங்கினேன். இப்போதெல்லாம் கனவில்கூட செயற்கைக் காலுடன்தான் நான் தோன்றுகிறேன். துயரத்திலிருந்து வெளிவர பாட்மிண்டனைக் கையிலெடுத்தேன். விளையாட்டு என்னைக் கைவிடவில்லை. என் உலகத்தை மாற்றியது” என்று சொல்லும் மானசி, அதன் பிறகு வேலையைத் துறந்துவிட்டு பாட்மிண்டன் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

மாற்றுத்திறனாளி பாட்மிண்டன் வீரர் நீரஜ் ஜார்ஜ் பேபியுடன் இணைந்து ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிச் சுற்றுக்குத் தேர்ச்சிபெற பயிற்சி எடுத்துக்கொண்டார். 2015-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுதான் அவரது முதல் சர்வதேசப் பதக்கம். அதைத் தொடர்ந்து 2016-ல் தென்கொரியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.

விளையாட்டு வீரர்களுக்கு வேகமும் விவேகமும் எந்த அளவுக்கு முக்கியமோ நிதானமும் சிறந்த வீரருக்கான இலக்கணம் என்பதைத் தொடர்ச்சியான வெற்றி மூலம் மானசி நிரூபித்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர், கடந்த இரண்டு சர்வதேசப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் பெறமுடியாமல் மானசி தோற்றபோதும் துவளவில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

கனவை நோக்கிய பயணம்

பிரபல பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் நடத்தும் அகாடமியில் கடந்த ஆண்டு இணைந்தார். அங்கு அவரது உடலுக்கு ஏற்றவாறு பயிற்சியளிக்கப்பட்டது. காலை நான்கு மணிக்குத் தொடங்கும் பயிற்சி இரவு எட்டு மணிவரை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது. மானசி முன்பு விளையாடிய போட்டிகளில் அதிக எடைகொண்ட செயற்கைக் காலுடன் விளையாடினார். இதனால், அவரால் நீண்ட நேரம் விளையாட முடியாமலும் அதிக வலியும் உண்டானது. அதனால், சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பாட்மிண்டன் போட்டியில் எடை குறைவான செயற்கைக் காலுடன் விளையாடினார்.

“இதுவும் என்னுடைய வெற்றிக்குக் காரணம். புதிய செயற்கைக் காலால் என்னால் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து விளையாட முடிந்தது. நம் நாட்டில் செயற்கை உடல் உபகரணங்களின் விலை குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களாலும் அதைப் பயன்படுத்த முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற அடிப்படைத் வசதிகள் செய்துதரப்பட வேண்டும்” என வலியுறுத்துகிறார் மானசி. தற்போது SL3 பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாக உள்ள மானசிக்கு ஜப்பானில் 2020-ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் கனவு. அந்தக் கனவை நோக்கிய பயணத்தில் இருக்கிறார் மானசி.

SCROLL FOR NEXT