பெண் இன்று

வானவில் பெண்கள்: திருக்குறளில் அசத்தும் அமெரிக்க மாணவி

செய்திப்பிரிவு

என்.சன்னாசி

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எனப் பறைசாற்றும் குடும்பப் பின்னணியில் வளரும் பிள்ளைகள்கூடத் தேர்வுக்காகவே குறளைப் படிக்கின்றனர். இன்னும் சிலரோ தாய்மொழியாம் தமிழின் பெருமையைப் பேசிக்கொண்டே தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கின்றனர். இரண்டாம் மொழியாக இந்தியைப் படிக்கும் குழந்தைகள் பலர் மூன்றாம் மொழியாகத்தான் தமிழைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

சிலரோ மூன்றாம் இடத்தில்கூடதத் தமிழை வைக்க விரும்பாமல் அயல்நாட்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கின்றனர். கேட்டால், பேசுவதற்கு மட்டும் தமிழ் தெரிந்தால் போதும் என்பதே பதிலாகக் கிடைக்கும். இப்படியொரு சூழலில், தமிழ் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறளைத் தலைகீழ் பாடமாகப் படித்து வியப்பூட்டுகிறார் மருத்துவ மாணவி சீதா ராமசாமி.

ஏழு வயதில் திருக்குறளைப் படிக்கத் தொடங்கியவர், பன்னிரண்டாம் வகுப்புக்குள் 1330 குறள்களையும் பொருளுடன் படித்துத் தேர்ந்தார். இவருடைய பெற்றோரின் பூர்விகம் காரைக்குடி. குறளையோ பொருளையோ எப்படிக் கேட்டாலும் பளிச்செனப் பதில் தருகிறார். அதுதான் அவருக்கு 20 வயதுக்குள் ‘குறளரசி’ விருதைப் பெற்றுத் தந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பிரீ மருத்துவம் எனப்படும் எட்டு ஆண்டுப் படிப்பைப் படித்துவரும் இவர், அந்நாட்டுத் தமிழ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று, திருக்குறளின் புகழைப் பரப்பிவருகிறார். சித்ராவின் திறமையைப் போற்றும் வகையில் மதுரை தியாகராசர் கல்லூரி அவருக்கு ‘குறள் அவதானி’ பட்டம் வழங்கியிருக்கிறது.

“நாங்கள் தமிழ்க் குடும்பம் என்றாலும், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில்தான். ஏழாம் வகுப்புப் பயிலும்போது, குறள் மீது ஆர்வம். திருக்குறளை முழுமையாகக் கற்றுத்தேற வேண்டும் என்பதற்காகவே ஞாயிறு தமிழ் வகுப்புகளுக்குச் செல்வேன். அனைத்துக் குறள்களையும் கற்றுக்கொள்ள முடியும் என நம்பினேன். அறம், பொருள், இன்பம் என ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் குறள்களில் புதைந்து கிடப்பதை உணர்ந்தேன். எழுதிவைத்தும் ஒலிப்பதிவு செய்தும் படித்தேன். குறள்கள் அனைத்தையும் படித்து முடித்தது மகிழ்ச்சியா இருக்கிறது. இளம் வயதிலேயே தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் பெருமை எனக்கல்ல; இது குறள் காட்டிய வழி. அமெரிக்காவில் வசித்தாலும் என்னுடைய வேர்களை இழப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குறள் என்னிடம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் படிப்பதுடன், ஆர்வமுள்ளவர்களுக்குத் தமிழைக் கற்றுத்தருகிறேன்” என்கிறார் சீதா.

SCROLL FOR NEXT