தொகுப்பு: முகமது ஹுசைன்
நாசாவுக்குச் செல்லும் தமிழக மாணவி
‘கோ4குரு' என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமையை அடிப்படையாக வைத்துப் பொது அறிவுப் போட்டி நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா, அபிஷேக் சர்மா ஆகிய மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற மாணவி தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலைச் சேர்ந்தவர். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஜே.தான்யா தஸ்னம் ஒரு வாரம் இருப்பார். விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சுற்றிப் பார்ப்பதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.
அச்சம் என்பது இல்லையே
கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசினார். அதில், “நாம் ஜனாதிபதி ஆட்சி முறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் படித்த வகுப்பினருக்கும் மாணவர்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இனி ஒரே தேர்தல், ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை வரும். அரசியல் கட்சிகளைக் குறிவைப்பதற்கு சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது அல்லது அவர்களைப் பணம் கொடுத்து வாங்குகிறது. மத்திய அரசின் எல்லா அமைப்புகளும் ஓய்வுபெற்றவர்களைத் தலைவர்களாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அவர்கள் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையசைத்து அந்த உத்தரவுகளைப் பின்பற்றி வருகிறார்கள். எந்த விசாரணை அமைப்புக்கும் நாங்கள் பயப்படவில்லை. இனவாத அரசியல் என்னும் அபினுக்கு இளைஞர்கள் இரையாகிவிடக் கூடாது” என்று பேசினார்.
இளவேனில் சுட்ட தங்கம்
பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்துவருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வாலறிவன். 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். தமிழகத்தில் பிறந்த இளவேனில் தற்போது குஜராத்தில் வசித்துவருகிறார். ஐந்து ஆண்டுகளாகத் துப்பாக்கிச் சுடுதலில் பங்கேற்றுவருகிறார். 2018-ல் நடந்த ஜுனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்ற இளவேனில், தங்கம் வென்றார். தற்போது சீனியர் பிரிவிலும் முதன்முறையாக உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உடல் வலுவிலும் ஆணுக்கு நிகரே
உடல் வலுவிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களே என்பதை நாகாலாந்து பெண்கள் படை நிரூபித்துள்ளது. வாய்க்கால் சேற்றில் சிக்கிக்கொண்ட காரை மீட்க ஆண்கள் உதவிக்கு வருவார்கள் என்று அந்தப் பெண்கள் காத்திருக்கவில்லை. சிலர் காரின் முன் பகுதிக்குச் சென்று காரை உயர்த்த, பின் பகுதியில் நின்ற பெண்கள் காரை வெளிப்புறமாக இழுத்தனர். கார் ஓட்டுநரால் எளிதாகச் சேற்றிலிருந்து காரை அப்புறப்படுத்த முடிந்தது. காரை மீட்ட மகிழ்ச்சியில் நாகாலாந்து படை பெண்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் சம்பவத்தை வீடியோவாகச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். மத்திய அமைச்சர் கிரண் ரிஜு இந்த வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்தியிருக்கிறார். பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் நாகாலாந்து பெண்கள் படை வெளியிட்ட அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பெண்ணுக்கு மரியாதை
திருமணப் பதிவில் பெண்கள் தங்களது கன்னித்தன்மை குறித்து இனியும் அறிவிக்க வேண்டியதில்லை என்று வங்கதேச உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கன்னித்தன்மை என்பதற்குப் பதில் திருமணமாகாதவர் என்று மாற்றும்படி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. திருமணப் பதிவில் இருக்கும் ‘விதவை’, ‘விவாகரத்தானவர்’ ஆகிய இரு பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கன்னித்தன்மை என்ற சொல் அவமானகரமானது என்று தொடர்ந்து கண்டனங்களைப் பதிவுசெய்துவந்த பெண்ணியவாதிகள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். மணமகன் தனது திருமண அந்தஸ்தைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014-ல் வழக்கறிஞர்கள் குழு ஒன்று தொடுத்த வழுக்கின் தீர்ப்பே தற்போது வெளியாகியுள்ளது.