பெண் இன்று

போகிற போக்கில்: முடிவில்லாத் தேடல்

செய்திப்பிரிவு

இ.மணிகண்டன்

மன இறுக்கம், மன அழுத்தம், வேலைப்பளு, தனிமை, முதுமை எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஓவியம் சிறந்த அமைதிநிவாரணி என்கிறார் விருதுநகரைச் சேர்ந்த இளவரசி சொக்கர். பத்து வயதில் பிடித்த தூரிகையை 62 வயதிலும் ஈடுபாட்டுடன் பற்றிக்கொண்டிருப்பதுடன் அதிலிருந்து விதவிதமான ஓவியங்களுக்கு உயிர்தருகிறார்.

விதவிதமான ஓவியங்களை வரைவதுடன் எம்ப்ராய்டரி, பொம்மை செய்தல் போன்றவற்றையும் செய்துவருகிறார். ஓவியம் வரைய வேண்டும் என்ற தனது சிறு வயது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உறுதுணையாக இருந்த பெற்றோரை நன்றியுடன் குறிப்பிடுகிறார். அவர்கள் ஊக்குவித்ததா பென்சில் ஓவியத்தில் தொடங்கி தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், எம்ப்ராய்டரி ஓவியம் எனப் பலவிதமான ஓவிய முறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இறுக்கம் போக்கும் மருந்து

பிறந்த வீட்டில் கிடைத்த ஊக்குவிப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் புகுந்தவீடும் இளவரசியின் திறமையை மெருகேற்ற பக்கபலமாக நின்றது. “என் கணவர் சொக்கர் கொடுத்த ஊக்கம், ஓவியம் வரைவதில் இருந்த என் தேடலை விரிவாக்கியது. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அதற்குப் பிறகும் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார். அந்த நாட்களை ஓவியப் பயிற்சிக்குப் பயன்படுத்திக்கொண்டேன். அவரது மறைவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்ன செய்வது எனத் தவித்து நின்ற என்னை ஓவியங்களே அரவணைத்துக்கொண்டன. ஆர்வத்துக்காக வரையத் தொடங்கிய நான், ஆறுதலுக்காக வரைந்தேன். மன இறுக்கம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப ஓவியங்களே உதவின” என்று சொல்லும் இளவரசி, அதன் பிறகு நவீன பாணியிலான ஓவிய முறைகளையும் கற்றுக்கொண்டார்.

“இதுவரை சுமார் ஐந்தாயிரம் ஓவியங்கள் வரைந்துள்ளேன். 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன்” என்கிறார். வயது முதிர்ந்தாலும் தனது ஓவியத் தேடலுக்கு ஓய்வில்லை என உற்சாகத்துடன் சொல்லும் இளவரசி, தற்போது இணையத்தின் உதவியோடு புதுப்புது ஓவிய முறைகளைக் கற்றுக்கொள்கிறார். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளது. “ஓவியம் வரையும்போது மனம் ஒருநிலைப்படும். சில நேரம் நம்மை ஆழ்நிலைத் தியானத்துக்குக் கொண்டுசெல்லும். மன இறுக்கம் தளரும். ஓவியம் வரைவதை மன இறுக்கத்தை நீக்குவதற்கான ஒரு சிகிச்சையாகவே அமெரிக்காவில் பரிந்துரைக்கிறார்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இருவர் சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் பயிற்சிக்காக வந்தனர். சில நாட்களிலேயே அவர்களிடம் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை உணர முடிந்தது” என்கிறார் இளவரசி.

SCROLL FOR NEXT