சிவா
பொதுவாக, அழகு என்ற சொல்லைக் கேட்டதுமே அழகான பெண்களே பலரது நினைவில் தோன்றுவார்கள். அழகிய பெண்கள் என்பதற்கான வரையறை ஆளைப் பொறுத்து மாறுபடும். ஆனால், இன்றைய காலப் பொதுப் புத்தியில் அழகிய பெண் என்பதற்குச் சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. வெள்ளைத் தோல், ஒல்லியான உடல் வாகு எனத் தொடரும் அந்தப் பட்டியல். அழகு என வரையறுக்கப்படும் இந்த அம்சங்கள் வணிக, அரசியல் நோக்கங்களால் கட்டப்பட்டவை. உலகம் முழுவதும் நடத்தப்படும் அழகிப் போட்டிகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது இப்படிப்பட்ட வணிக நோக்கமே. ஆனால், அழகிப் போட்டிகளில் அத்தி பூத்தாற்போல் சில அதிசயங்களும் நிகழும்.
உடலா அழகு?
அழகு என்பது அறிவா அல்லது தோற்றமா என்ற வாதம் எப்போதும் எழும். தோற்றம்தான் எனப் பெரும்பாலோர் வாதிடுவார்கள். அழகிப் போட்டியில் உடல் பராமரிப்பு முதன்மையானது. போலியோவால் பாதிக்கப்பட்டு உடல் பருமனோடு இருக்கும் ஒருவர் அழகிப் போட்டியில் பங்கேற்பது கனவிலும் இயலாதது. ஆனால், அப்படியான கனவைத் தன் வெற்றியின் மூலம் நனவாக்கியிருக்கிறார் பாக்கியம். சமீபத்தில் சென்னையில் ‘சூப்பர் வுமன் இந்தியா’ எனும் அமைப்பு நடத்திய அழகிப் போட்டியில் இவர் பெற்றிருக்கும் வெற்றி, அழகிப் போட்டிக்கான வழக்கமான இலக்கணத்தை உடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பாக்கியம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்தப் போட்டி நடப்பதை முகநூல் மூலம் தெரிந்துகொண்ட அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அழகிப் போட்டியில் கலந்துகொள்ளத் தான் ஆர்வமாக இருப்பதையும் தனது நிலையையும் குறிப்பாக ராம்ப் வாக் செல்ல முடியாது என்பதையும் கூறியுள்ளார். அதற்குச் சிறிதும் தயங்காமல் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.
போலியோவால் பாதிக்கப்பட்டதைத் தகுதிக் குறைபாடாகக் கருதவில்லை பாக்கியம். அது தன் விருப்பங்களுக்குத் தடையாக இருக்காது எனவும் உறுதியாக நம்பினார். அந்தப் போட்டியில் ஆடை வடிவமைப்பு, ஆளுமைத் திறன் சுற்றுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வென்றுள்ளார். பாக்கியத்தின் இந்த வெற்றி பெண்களிடம் காணப்படும் அழகு தொடர்பான மாய பிம்பத்தை உடைக்கக் கூடியது.
அழகு என்பது தோற்றம் சார்ந்தது மட்டுமல்ல; தோற்றத்துக்கு அப்பால் உள்ள அறிவு சார்ந்ததும் என்பதை உணரச் செய்துள்ளார் பாக்கியம். இது போன்ற நிகழ்வுகள் அதற்குப் பலம் சேர்க்கின்றன. புறத்தோற்றத்தையோ உடல் குறைபாட்டையோ பிறர் கேலி செய்வதால் கூனிக் குறுகும் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்திட வேண்டும் என்பதே பாக்கியத்தின் வெற்றி சொல்லும் செய்தி.