பெண் இன்று

வட்டத்துக்கு வெளியே: எனக்குத் தொழில் சமையல்

செய்திப்பிரிவு

க்ருஷ்ணி

யானைகள் உலாவரும் காட்டில் எறும்புகளுக்கும் ராஜ்ஜியம் உண்டு என்பதைத்தான் சரஸ்வதி அம்மாவின் சமையல் வீடியோக்கள் உணர்த்துகின்றன. ரம்மியமான இயற்கைச் சூழலில் வெளிப்புறப் படப்பிடிப்பு, கண்ணைக் கவரும் உள்ளரங்கப் படப்பிடிப்பு என விதவிதமாக எடுக்கப்படும் சமையல் வீடியோக்களுக்கு மத்தியில் நம் வீட்டுச் சமையலறை போன்றதொரு சாதாரண அறையில் எடுக்கப்பட்டுக் கவனம் ஈர்க்கின்றன அவரது சமையல் வீடியோக்கள். அவற்றில் சில லட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கின்றன!

கரூர் அருகேயுள்ள அரவக் குறிச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர் சரஸ்வதி. செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த அசோகனை மணந்ததன் மூலம், கரூரின் மருமகளானார். கணவன், மகள், குடும்பம், அன்றாட வேலைகள் என வாழ்க்கை அதன் போக்கில் சென்றுகொண்டிருக்க, சரஸ்வதிக்கு அவற்றின் மீது எந்தப் புகாரும் இல்லை. ஆனால், எதிர்பாராத தருணமொன்றில் நிகழும் சந்திப்பு சில நேரம் நம் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடக் கூடும். அப்படியொரு சந்திப்பு சரஸ்வதியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது.

நான்கு ஆண்டுகளுக்குமுன் நேச்சுரோபதி சிகிச்சைக்காக கோவைக்குச் சென்றிருந்தார் சரஸ்வதி. அப்போது அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த கணக்குத் தணிக்கையாளரான உத்ராலட்சுமி, சரஸ்வதியின் வாழ்க்கையில் அந்தச் சிறிய அகலை ஏற்றியிருக்கிறார். சரஸ்வதிக்குச் சமையலில் ஆர்வம் அதிகம். புதிதாகச் சந்திக்கிறவர்களிடம் சமையலில் இருந்தே பேச்சைத் தொடங்குவார். உத்ராவிட மும் அப்படித்தான் பேசியிருக் கிறார்.

“வாயைத் திறந்தாலே சமையல் குறிப்புகளை அள்ளித் தெளிக்கிறீங்களே. நீங்க சமையல் வீடியோ வெளியிடலாமேன்னு உத்ரா என்கிட்ட சொன்னா. எனக்கு அந்த மாதிரி வீடியோவைப் பத்தி ‘அ’னா ஆவன்னாகூடத் தெரியாது; நான் என்ன பண்ண முடியும்னு சொன்னப்ப, வீட்ல ரெண்டு இன்ஜினீயர்களை வச்சுக்கிட்டு இப்படிச் சொல்லலாமான்னு உத்ரா கேட்டா” என்று சிரிக்கிறார் சரஸ்வதி.

புதிய பாதை

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் கணவரிடமும் பி.டெக். முடித்திருந்த மகளிடமும் தன் ஆவலைச் சொல்ல, இருவரும் உற்சாகத்துடன் சரஸ்வதியை வழிநடத்தியிருக்கின்றனர். தொழில்முறை வீடியோகிராபரை அழைத்துத் தன் வீட்டுச் சமையலறையையே படப்பிடிப்புத் தளமாக்கினார். இனிப்புடன் தொடங்கலாமே என்று முதன்முதலில் ‘கேரட் கீர்’ செய்து, தன் யூடியூப் அலைவரிசையில் அதை வெளியிட்டார். பத்து நாட்களில் ஆயிரம் பேருக்கு மேல் அதைப் பார்க்க, சரஸ்வதிக்கு அது உந்துசக்தியாக அமைந்தது. அடுத்தடுத்து நிறைய சமையல் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். ஆனால், பார்வையாளர்களின்

எண்ணிக்கையைப் பார்ப்பது தவிர, யூடியூபில் வேறெதுவும் சரஸ்வதிக்குத் தெரிந்திருக்க வில்லை.
பன்னிரண்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்ததால், கணினியின் அடிப்படையைத் தெரிந்துகொள்ளப் பயிற்சிக்குச் செல்ல நினைத்தார். அதைக் கேட்ட சரஸ்வதியின் கணவரே பயிற்றுநராக மாறி வகுப்பெடுத்தார். “சமையல் தொடர்பா நிறையப் பேர் சந்தேகங்களைக் கேட்டிருந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் எப்படிப் பதில் அனுப்புறதுன்னுகூட அப்போ எனக்குத் தெரியாது. என் கணவர் சிலதைக் கற்றுக்கொடுத்தாரு. அப்புறம் நானே எல்லாத்தையும் சமாளிச்சேன்” என்று சொல்லும் சரஸ்வதியின் யூடியூப் சேனலில் இதுவரை 62 ஆயிரம் பேர் உறுப்பினராக இணைந்திருக்கிறார்கள்.

எதிர்பாராத இழப்பு

திருமணத்துக்கு முன்புவரை சமையலறை பக்கமே சென்றதில்லை எனச் சிரிக்கும் சரஸ்வதி, தற்போது வார இதழ்களிலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் சமையல் பகுதியில் பங்கேற்றுவருகிறார். சமையல் கலை நிபுணர்கள் சிலரது நட்பையும் சரஸ்வதி பெற்றிருக்கிறார். 270-க்கும் மேற்பட்ட சமையல் வீடியோக்களை வெளியிட்டிருக்கும் சரஸ்வதி, தன் ஆரம்ப கால வீடியோக்களைப் பார்க்கும்போது அவற்றை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்கிறார்.

“முதல்ல கொஞ்சம் தடுமாற்றமும் பதற்றமும் இருந்தது. ஆனா, இந்த நாலு வருஷ அனுபவம் எனக்கு நிறையக் கத்துக்கொடுத்திருக்கு. மூளையில் ஏற்பட்ட கட்டியால நாலு மாசத்துக்கு முன்னால என் பேத்தி ஆருத்ரா இறந்துட்டா. நாங்க எல்லாருமே உடைஞ்சு போயிட்டோம். என்னால அதுல இருந்து மீள முடியல. சமையலையும் ஓரங்கட்டிட்டேன்” என்று சொல்லும் சரஸ்வதி, சமையலைத் தொடரும் படி நண்பர்களும் தெரிந்தவர்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க, மீண்டும் சமையலில் இறங்கியுள்ளார். ஒன்றிலிருந்து விடுபடுவதற்கு இன்னொன்றை இறுகப் பற்றுவது இயல்புதானே. விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும் சரஸ்வதி, சமையல் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பெற்றோரே முன்மாதிரி

காலமாகிவிட்ட தன் தந்தை கந்தசாமியும் (63) தற்போது 80 வயதாகும் தாய் வள்ளியம்மாளும் தான் தன் முன்மாதிரிகள் என்கிறார் சரஸ்வதி. “அவங்களைப் போன்ற உழைப்பாளிகளைப் பார்க்கவே முடியாது. இப்போ வரைக்கும் அம்மா தன்னோட வேலைகளை அவங்களேதான் செய்துக்கறாங்க. அவங்களே அப்படி இருக்கும்போது நாம எப்படிச் சும்மா இருக்க முடியும்?” எனக் கேட்கும் சரஸ்வதி 200-வது எபிசோடில் தன் அம்மா வள்ளியம்மாளுடன் இணைந்து சமைத்திருக்கிறார்.

“கல்யாணத்தப்போ எனக்குப் பாசிப்பருப்பு கடையல், முட்டைக்கோஸ் பொரியல், செலவு ரசம் இந்த மூணு மட்டும்தான் சமைக்கத் தெரியும். அப்புறம் சுத்தியிருக்கவங்ககிட்ட கேட்டு நிறைய கத்துக்கிட்டேன். நவீன உணவைவிட நம் மண்ணுக்கேத்த பாரம்பரிய உணவுதான் நல்லது” எனச் சொல்லும் சரஸ்வதி, தன் வீடியோக்கள் வாயிலாக அதைச் செயல்படுத்தியும் வருகிறார். அதிரசம், மைசூர் பாகு, சிறுதானிய உணவு என இவர் சமைக்கும் ஒவ்வொன்றிலும் கைப்பக்குவத்துடன் ஆரோக்கியம் மீதான அக்கறையும் சேர்ந்தே மணக்கிறது.

ஆண்களும் சமைக்கணும்

பலரும் ஆடி அடங்கி உட்கார நினைக்கும் 50 வயதில் தனக்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சரஸ்வதி. தனது சமையல் வீடியோக்களைப் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டபோது, கணிசமான வருமானம் வந்தததாகவும் சொல்கிறார். இடையில் ஏற்பட்ட தொய்வால் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் தன் உழைப்புக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம் தன்னம்பிக்கையைத் தருவதாகச் சொல்கிறார். சமையல் என்றாலே அதைப் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்ற பிற்போக்குத்தனத்தைச் சாடும் சரஸ்வதி, ஆண்களும் சமைக்கலாம் என்கிறார்.

“பொம்பளைங்க செய்யறதாலேயே சமையல் வேலை கீழானது இல்லை. உண்மைய சொல்லணும்னா இந்த உலகத்துலேயே சிறந்த வேலை சமையல்தான். உயிர் தரும் உணவைச் சமைக்கறதுக்கு சந்தோஷப்படாம, எதுக்கு வெட்கப்படணும்? அதனால ஆணும் பெண்ணும் சேர்ந்தே சமைக்கலாம். அதைப் பெண்களோட வேலைன்னு ஒதுக்கறது தப்பு” எனச் சமைத்த உணவின் மீது உப்பு தூவுவதைப்போல அவரளவில் பெண்ணியமும் பேசுகிறார்.
தன் பெற்றோர், கணவர், மகள் எனக் குடும்ப உறுப்பினர்களில் தொடங்கி, வீட்டுப் பணிகளில் தனக்கு உதவும் பெண்கள்வரை அனைவரையும் மறக்காமல் குறிப்பிடுகிறார்.

“இவங்க எல்லாம் இல்லைன்னா இது சாத்தியமே இல்லை. என்னைச் சுத்தி இவ்ளோ நல்லவங்க இருக்காங்க. அதுதான் என்னை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்திக்கிட்டே இருக்கு” என்று சொல்லிவிட்டு அன்றைய படப்பிடிப்புக்காக ராகி சுரைக்காய் ரொட்டியையும் மிளகு-முடக்கத்தான் குழம்பையும் சமைக்கத் தொடங்குகிறார். நேர்த்தியாக அவர் சமைத்துக்கொண்டிருக்கும் காட்சியே ருசிமிக்க உணவொன்று தயாராவதை உணர்த்துகிறது.

சரஸ்வதியின் சமையல் வீடியோக்களைக் காண: சரசூஸ் சமையல் - https://bit.ly/31PDGxv

SCROLL FOR NEXT