பெண் இன்று

அஞ்சலி: டோனி மாரிசன் - மரணமில்லா எழுத்து

செய்திப்பிரிவு

ஆர்.ஜெய்குமார்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் டோனி மாரிசன், ஆகஸ்ட் 5, 2019 அன்று காலமாகிவிட்டார். ஆப்பிரிக்க -அமெரிக்கரான டோனி தனது எழுத்துகளுக்காக நோபல், புலிட்சர் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
சொந்த நிலத்தில் வேரூன்றி நிற்பவை அவரது கதைகள்; மண்ணின், மனிதர்களின் வாழ்க்கைப்பாட்டை ஆதாரமாகக் கொண்டவை. அவருடைய பெற்றோர் அவருக்குச் சொன்ன கதைகளின்மூலம் எழுதுவதற்கான ஊக்கத்தை அவர் பெற்றார். இந்திய/தமிழ்ச் சமூகத்தையொத்த தொன்மக் கதைகளைக் கொண்டது ஆப்பிரிக்கச் சமூகம். கற்பனை வளம் மிக்க அதன் மந்திரக் கதைகள், பேய்க் கதைகள், துள்ளலான பாடல்கள் போன்றவை எல்லாம் சிறுவயதிலேயே டோனிக்குப் புகட்டப்பட்டன.

ஆதிச் சமூகங்களின் கொண்டாட்டத்துக்கான, தேம்பலுக்கான வடிவமாக இந்தக் கதைகள் இருப்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார். அதுதான் அவரது எழுத்துக்கான திறப்பாகவும் ஆகியிருக்கும். உதாரணமாக அவரது ‘சாலமனின் பாடல்கள்’ (Song of Solomon), ஆப்பிரிக்கத் தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டது. பால்காரனாக வரும் இந்த நாவலின் மையப் பாத்திரம் இறுதிக் காட்சியில் பறக்கத் தொடங்கும். ஆப்பிரிக்க அடிமைகளுக்குப் பறக்கும் தன்மை உண்டு என்ற தொன்மக் கதை இருக்கிறது.

துரத்தியஇன வேறுபாடு

இலக்கிய வடிவத்தை மட்டுமல்லாமல் இன வேற்றுமையால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களின் பாடுகளையும் அவருடைய பெற்றோர் வழியே டோனி அறிந்துகொண்டார். அமெரிக்காவில் காட்டர்ஸ்வில்லேயைச் சொந்த ஊராகக் கொண்டவர் டோனியின் தந்தை. அவரது பதின்ம வயதில் கறுப்பின மக்கள், வெள்ளை இனத்தவர் சிலரால் கூட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அந்தச் சம்பவத்துக்குப் பதின்ம வயதிலிருந்த டோனியின் தந்தை சாட்சியாக இருந்துள்ளார். இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அவர், லொரைன் நகருக்குப் புலம்பெயர்ந்தார்.

இரும்பு ஆலையை நம்பியிருந்த இந்தப் புதிய ஊரில் அவ்வளவு இன துவேஷம் இருக்கவில்லை. அந்த ஆலையில் அவருக்கு வேலையும் கிடைத்தது. இருந்தாலும், வெள்ளையர் அதிகம் வாழும் இந்தப் புதிய ஊரிலும் அவர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். இந்தக் கறுப்பு-வெள்ளை வேறுபாடு டோனியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.
டோனி ஆங்கில இலக்கியம் படித்தார்.

அந்த மொழியில் பண்டிதரானார். ஆங்கில வாசிப்பின் மூலம் அவர் வெளியிலும் சில கதைகளைப் படித்தார். மிகையுணர்வு அற்ற யதார்த்தவாதக் கதைகளை எழுதிய இங்கிலாந்து எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் கதைகள் டோனிக்குப் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. இங்கிலாந்துச் சமூகத்தில் பெண்கள் என்ன மாதிரியாக இருந்தார்கள் என்பதை, அந்தக் கதைகள் சமரசமற்ற யதார்த்தத்துடன் சித்தரித்தன. டோனி தனது பாணியை உருவாக்க ஜேனின் இந்தக் கதைகள் முன்மாதிரியாக இருந்திருக்கலாம். வாழ்க்கையின் விநோதமான சஞ்சாரங்களை எழுதிய லியோ டால்ஸ்டாயின் எழுத்துகளும் டோனியைக் கவர்ந்துள்ளன என்பது விசேஷசமானது.

சிறுமிகளின் அற்புத உலகம்

டோனியின் முதல் நாவல், ‘நீலக் கண்கள்’ (The Bluest Eye) அவரது சொந்த ஊரான லொரைனைக் களமாகக் கொண்டது. பேகொலா என்னும் கறுப்பினச் சிறுமியை மையப் பாத்திரமாகக் கொண்டது. இந்தக் கதையை கிளாடியா என்னும் இன்னொரு கறுப்பினச் சிறுமி வழியாக டோனி நாவலில் சொல்லியிருப்பார். களங்கமற்ற இந்தச் சிறுமிகளின் உலகத்தில் குறுக்கிடும் வெளியுலகச் சித்தாந்தங்கள் என்ன மாதிரியான பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பதை டோனி இந்த நாவலில் இயல்பாகச் சித்தரித்திருப்பார்.

பேகொலாவுக்குத் தான் அசிங்கமாக இருப்பதாக எப்போதும் வருத்தம். அழகு என்றால் வெள்ளை நிறமும் நீலக் கண்களும் மட்டுமே என்பது அவள் எண்ணம். இது எப்படி அவளுக்குள் உருவானது என்பதையும் நாவல் சொல்கிறது. அவளது சுற்றத்தாரே இந்த எண்ணத்தை தோற்றுவிக்கின்றனர். அந்தத் தெருவிலுள்ள சிறுவனின் வளர்ப்புப் பூனை கொல்லப்பட்டுவிட்டது. கொன்றது பேகொலாதான் எனத் தவறாக நினைக்கும் சிறுவனின் தாய், ‘கறுப்புப் பெட்டை நாயே’ என அவளைத் திட்டிவிடுகிறார். தான் வெள்ளையாக நீலநிறக் கண்களுடன் இருந்திருந்தால் தனக்கு இந்த அவமானமெல்லாம் நடந்திருக்காது எனத் தன் நம்பிகையைத் திடமாக்குகிறாள் அவள்.

நீலநிறக் கண்கள் வேண்டும்

வெள்ளையினத்தவர் சிலரால் சிறுவயதில் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட்ட பேகொலாவின் தந்தை, அதனால் மனப் பிசகு உள்ளவராக இருக்கிறார். ஒருநாள் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த அவளை வல்லுறவு செய்துவிடுகிறார். மூச்சுப் பேச்சின்றித் தரையில் கிடக்கும் அவள் சொன்னதை நம்பாமல் தாய் அடிக்கிறாள். அவள் தேவாலயத்துக்கு ஓடுகிறாள். தனக்கு வெள்ளை நிறமும் நீலக் கண்களும் தர வேண்டுகிறாள்.

கதைசொல்லியான சிறுமியும் ஃப்ரீடா என்ற இன்னொரு சிறுமியும் பேகொலாவின் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டுகிறார்கள். சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில் செவ்வந்திப்பூ விதைகளை வாங்கித் தூவுகிறார்கள். இது முளைவிட்டால் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும் என எளிய நம்பிக்கை கொள்கிறார்கள். ஆனால், குழந்தை குறைப் பிரசவத்தில் இறக்கிறது. பேகொலா, தனக்கு நீலக் கண்கள் வந்துவிட்டதாகப் பைத்திய நிலைக்குச் செல்கிறாள். இன வேறுபாட்டால் கறுப்பின மக்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்திருக்கிறது என்பதை இந்தச் சிறுமிகள் வழி டோனி சொல்லியிருக்கிறார்.

அவரது புகழ்பெற்ற ‘Beloved’ நாவலும் பெண்களை மையமாகக் கொண்டதே. அடிமை வாழ்க்கையிலிருந்து தப்பித்த ஒரு தாயின் துயரக் கதை அது. அந்தக் கதையிலும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது. பின் அது நம் பாட்டிக் கதைகளில் வருவதைப் போல் ஆவியாக வருகிறது. கறுப்பின மக்களின் துயரத்தை வலுவாகச் சித்தரித்த இந்த நாவல், அதே பெயரில் படமாக வெளிவந்துள்ளது. டோனி தன் எழுத்துகள் மூலம் இன வேற்றுமையை, அதன் குரூரமான யதார்த்தத்தைச் சித்தரித்தார். ஒற்றைத் தாயாக வாழ்ந்த அவர், இவற்றையெல்லாம் பெண்களின் பக்கம் நின்று பார்த்தார் என்பது அவரது விசேஷமான அம்சம்.

SCROLL FOR NEXT