ச. கோபாலகிருஷ்ணன்
திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் ஆகஸ்ட் 9 அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த் திரைத் துறையினர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. மாநில மொழிப் பிரிவில் ‘பாரம்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்ட விருதைத் தவிர வேறெந்த விருதும் தமிழுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்த ஆற்றாமைக்குச் சிறு ஆறுதலாக அமைந்திருக்கிறது. ‘மகாநடி’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததற்காகத்தான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்றாலும், அவர் தமிழில் முன்னணி நாயகியாக இருப்பதும் அவரது தாய்மொழி தமிழ் என்பதும் தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன.
தடுமாற்றம் நிறைந்த தொடக்க ஆண்டுகள்
கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழரான அவருடைய தாய் மேனகா, எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தந்தை சுரேஷ், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர். குழந்தை நட்சத்திரமாகச் சில மலையாளப் படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், 2013-ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு வணிகரீதியாக வெற்றிபெறத் தவறியது.
அடுத்த ஆண்டு திலீப்பின் இணையாக நடித்த ‘ரிங் மாஸ்டர்’ வெற்றிபெற்றது. அதுவே அவரைத் தமிழுக்கு அழைத்துவந்தது. விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் அடியெடுத்து வைத்தார். அந்தப் படம் வந்த சுவடே தெரியாமல் போனது. அடுத்த சில மாதங்களில் வெளியான அவரது முதல் தெலுங்குப் படமான ‘நேனு சைலஜா’ பெரிய வெற்றிபெற்றது. அதையடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ இரண்டு படங்களும் 2016-ல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றன. இந்த வெற்றிகளின் மூலம் ராசியான கதாநாயகியாக நிலைபெற்றார். தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழில் தனுஷ் (தொடரி), சூர்யா (தானா சேர்ந்த கூட்டம்), விஜய் (பைரவா, சர்கார்), விக்ரம் (சாமி 2), விஷால் (சண்டக்கோழி 2) ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். இவற்றில் ‘சர்கார்’ மட்டுமே வணிக வெற்றியைப் பெற்றது. இந்தப் படங்களில் நாயகர்களைக் காதலிக்கும் அல்லது அவர்களால் காதலிக்கப்படும் அழகுப் பதுமை வேடங்களே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் துறுதுறுப்பும் சொந்தக் குரலில் சரியான உச்சரிப்புடன் தமிழ் வசனங்களைப் பேசுவதும் அவரைத் தமிழ் ரசிகர்களின் மனத்துக்கு நெருக்கமாக்கின. அவரது பெயர் எந்த சர்ச்சையிலும் கிசுகிசுக்களிலும் அடிபடவில்லை.
உருவக்கேலியை உதாசீனம் செய்தவர்
எதையும் மோசமாகவும் தரம் தாழ்ந்தும் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துவிட்ட சமூக ஊடக யுகத்தில் கீர்த்தி சுரேஷும் அதுபோன்ற விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. அவரது முக அமைப்பை வைத்து உருவக்கேலி செய்யும் ஒளிப்படங்களும் மீம்களும் சமூக ஊடகங்களில் பரவின. கீர்த்தி சுரேஷ் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன் வேலையைச் செய்துகொண்டிருந்தார். அவரது திறமைக்கும் தொழில் நேர்த்திக்கும் கிடைத்த பரிசாக கறுப்பு-வெள்ளை யுகத்தின் சூப்பர் ஸ்டார் சாவித்திரியின் வாழ்க்கைக் கதையில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.
2018 மே மாதம் வெளியான ‘மகாநடி’ தெலுங்குப் படம், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற்றது.
விமர்சகர்கள் கீர்த்தி சுரேஷின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினர். சாவித்திரியின் திரைவாழ்வும் தனிவாழ்வும் ஏற்ற இறக்கங்களால் நிறைந்தவை. இளமையில் அவருக்கு இருந்த அப்பாவித்தனமும் துடுக்குத்தனமும் கீர்த்தி சுரேஷிடமும் காணப்படுவதால் படத்தில் சாவித்திரியின் இளமைக் காலப் பகுதிகளுக்கு கீர்த்தி சுரேஷ் இயல்பான தேர்வாக அமைந்ததில் ஆச்சரியமில்லை. திரை வாழ்வில் உச்சத்தைத் தொட்டுப் பிறகு வீழ்ச்சியையும் தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்களையும் எதிர்கொண்டு துவண்டுபோன சாவித்திரியையும் இந்தக் கால ரசிகர்களின் கண்முன் நிறுத்தினார் கீர்த்தி சுரேஷ். அதுவே பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
இந்தப் படத்துக்காகத் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் சொந்தக் குரலில் பேசி நடித்தார் என்பது கூடுதல் சிறப்பு. சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ‘மிகச் சரியான தேர்வு’ என்று ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைத் துறைப் பிரபலங்களும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். அவரை உருவக்கேலி செய்தவர்கள் வாயடைத்துப்போயிருக்கிறார்கள்.
தாய் தவறவிட்டதைப் பிடித்த மகள்
இந்தத் தேசிய விருதைத் தன் அம்மாவுக்கு அர்ப்பணிப்பதாக கீர்த்தி சுரேஷ் சொல்லியிருப்பது சம்பிரதாயமான வார்த்தைகள் அல்ல. மேனகாவின் முதல் மலையாளப் படம் ‘ஒப்போல்’. அந்தப் படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனக்குத் தேசிய விருது கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால், அந்தப் படத்துக்குப் பல பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தாலும் மேனகாவுக்கு விருது கிடைக்கவில்லை. இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்திருந்த மேனகா தன் மகள் நிச்சயமாகத் தேசிய விருது வாங்குவார் என்று உளப்பூர்வமாக நம்பினார். தன் குடும்பத்தாரிடமும் உறவினர்களிடமும் எப்போதும் இதைச் சொல்லிவந்தார். இப்போது தாயின் நம்பிக்கையை மகள் நிறைவேற்றியிருக்கிறார். அதுவும் இளம் வயதில்.
வளமான வருங்காலம்
தேசிய விருது அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கவிருக்கும், நாயகியை மையப்படுத்திய புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. நாயகியை மையப்படுத்திய இரண்டு தெலுங்குப் படங்களில் அவர் நடித்துவருகிறார். மேலும், மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கிவரும் ‘மரக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்மம்’ என்ற வரலாற்றுப் புனைவுப் படத்தில் மோகன்லாலுடன் நடித்துவருகிறார். போனி கபூர் தயாரிக்கவிருக்கும் இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதிக்க விருக்கிறார்.
நாயகியை மையமாகக் கொண்ட படங்கள் அதிகரித்திருக்கும் தமிழ்த் திரையில் நயன்தாரா, த்ரிஷாவுக்கு இணையாக கீர்த்தி சுரேஷும் அதுபோன்ற நிறையப் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ‘மகாநடி’ என்ற மைல்கல்லுடன் அந்தக் கணக்கை அவர் தொடங்கியிருக்கிறார்.