சில மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடிகர் ஒருவரது பேட்டியைப் பார்த்தேன். குறிப்பிட்ட ஒரு தொடரில் நடிக்க நேர்ந்ததை ஏழரைச் சனியின் பிடியில் இருந்ததுபோல் உணர்ந்ததாக அவர் சொன்னார். தனக்குக் கொடுக்கப்பட்ட வசனங்கள், “நான் ஒரு பிச்சைக்காரன், மூடன், அறிவில்லாதவன்” என்ற ரீதியில் இருந்தது என்றும் அவர் வருத்தத்துடன் சொன்னார். அந்தத் தொடர் பிரபலமான தொலைக்காட்சியில் அறியப்பட்ட நடிகையின் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.
அந்த நடிகரின் ஆதங்கம் நியாயமானது. ஆண்களுக்கு இப்படியென்றால் நடிகைகளுக்கு இதைப் போன்ற கொடுமைகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. பழம்பெரும் நடிகை விஜயகுமாரியின் வசனங்கள் எனக்குச் சிறு வயதில் குழப்பத்தையே ஏற்படுத்தும். ஒரு திரைப்படத்தில் விஜயகுமாரி தன்னையும் அப்போதுதான் பிறந்த தன் குழந்தையையும் கணவனின் காலில் சேர்த்துவிடுங்கள் என்று கதறுவார். அவர் தவறேதும் செய்யாதபோதும் எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும்? இன்றைய திரைப்படங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். தங்களுடைய கதாபாத்திரம் குறித்தும் தங்களுக்குத் தரப்படும் வசனங்கள் குறித்தும் நடிகைகள் யோசிப்பதாகவே தெரியவில்லை.
தங்களைக் காட்சிப் பொருளாக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் படங்களில் நடிக்க நடிகைகள் ஒப்புக்கொள்ளக் கூடாது. பட வாய்ப்புகளை இரண்டாம்பட்சமாகக் கருத வேண்டும். ஏனெனில், இன்றைய
கீழ் நடுத்தர இளம் பெண்களுக்குக் கதாநாயகன் பின்னால் சுற்றும் கதாநாயகியே ரோல் மாடலாக இருக்கிறார்.
அதனால் நடிகைகளும் கொஞ்சம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான இயக்குநர்கள் ஆண்களாகவே இருப்பதால் அவர்களை எளிதில் திருத்த முடியாது. பள்ளிகளும் தெளிவான சிந்தனைகளைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்றுத்தர வேண்டும். பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் சுயமரியாதையை விட்டுத்தராத திடமனத்துடன் இருக்க வேண்டும்.
- கே. பிரேமாகுமாரி, சென்னை.