பெண் இன்று

என் பாதையில்: மாதவிடாய் விடுப்பு ஏன் தேவை?

செய்திப்பிரிவு

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தி ருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார். மாத விடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கிவைக்கும் சனாதனச் செயல்பாட்டின் இன்னொரு வடிவம்தான் மாதவிடாய் விடுப்பு என அந்தத் தீர்மானத்தை விமர்சித்திருக்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கிவைப்பது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த நாட்களில் பெண்கள் சிலருக்கு ஓய்வு தேவைப்படலாம். அனைவருக்கும் மாதவிடாய் நாட்களில் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு வயிற்றுவலியும் அதிகமான உதிரப்போக்கும் இருக்கலாம். சிலருக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் இயல்பாகவும் இருக்கலாம். அதனால், பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிப்பது என்பதைவிட, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களைப் பெண்களுக்கு அதிகரித்தால் தேவைப்படுவோர் தேவைப்படும் நாட்களில் எடுத்துக்கொள்ளலாம்.

மாதவிடாய் விடுப்பு குறித்து இப்போதுதான் பேசவே தொடங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் பெண்களின் மகப்பேறு விடுப்பு குறித்தும் யோசிக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் தவிர எத்தனை தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அளிக்கின்றன? பெரும்பாலான நிறுவனங்களில் மகப்பேற்றையொட்டி பெண்கள் பலர் வேலையை விட்டு விலகும் நிலையே நீடிக்கிறது. சிறு, குறு நிறுவனங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

மகப்பேறு, மாதவிடாய் போன்ற உடலியல் செயல்பாடுகளை யொட்டி பெண்களுக்கு வழங்கப்படும் விடுப்பு, அவர்களின் அடிப்படை உரிமை. ஆனால், அவற்றைப் பெண்களுக்கு அளிக்கப் படுகிற சலுகையாகவே பலர் நினைக்கிறார்கள்; குறிப்பாக, உடன் பணியாற்றும் ஆண்கள். ஏதோ வேலையிலிருந்து தப்பிப்பதற்காகவே பெண்கள் இதுபோன்ற விடுப்புகளை எடுப்பதாகவும் கற்பனை செய்துகொள்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாகத்தான் பல நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்த யோசிக்கின்றன. மகப்பேறு, மாதவிடாய் போன்றவை தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வுகள் என்பதை ஆண்களும் சட்டம் இயற்றுகிறவர்களும் உணர்ந்துகொண்டால் தேவையில்லாத கேலிகளும் கேள்விகளும் இருக்காது.

- பிரியா, சென்னை.

SCROLL FOR NEXT