ஆர்.சி.ஜெயந்தன்
அன்பான குடும்பம், நேசித்துச் செய்யும் பேராசிரியர் பணி என அமைதியாகச் சென்று கொண்டிருந்தது உமா ஆதவனின் வாழ்க்கை. அழையா விருந்தாளியாகத் திடீரென நுழைந்த சிறுநீரகப் பிரச்சினை (chronic hypertensive kidney issues) அன்றாடத்தின் அமைதியைப் புரட்டிப்போட்டது. ஆனால், அப்போதும் அவர் உடைந்துபோய் உட்கார்ந்துவிடவில்லை. சூழ்ந்துகொண்ட பிரச்சினைக்கு மருத்துவத்தில் தீர்வு கண்டறியப்படவில்லை.
அதேநேரம் உடற்பயிற்சியின் மூலம் அதைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு கவலையின்றி இருக்கலாம் என்று தெரிந்தபோது அதை இறுகப் பற்றிக்கொண்டார். உடல் நோய்தீரத் தான் கையிலெடுத்த மிதிவண்டியே அவரை ‘சாதனை சைக்கிளிஸ்ட்’ ஆக்கியிருக்கிறது. உமா ஆதவன், மாநில அளவில் சாதித்திருக்கும் சைக்கிளிங் வீராங்கனைகளில் ஒருவர்.
ஆடக்ஸ் கிளப் பாரீஸியன் (Audax Club Parisien) என்பது சுதந்திர சைக்கிள் வீரர், வீராங்கனைகளுக்காக 1904-ல் பாரீஸில் தொடங்கப்பட்ட சர்வதேச விளையாட்டுச் சங்கம். 200, 300, 400, 600, 1200 கி.மீ. என இதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சைக்கிளிஸ்ட்கள் ஒவ்வொரு படியாக வெல்ல வேண்டும். ஒவ்வோர் இலக்குக்கும் ஒரு கால அளவு. அதற்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்து, பின் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டும்.
சைக்கிளிங் நன்கு பழகியபின்னும் ஒரு சீசன் எனப்படும் ஓராண்டுக்குள் முதல் மூன்று இலக்குகளை முடித்தால் மட்டுமே தேசிய அளவிலான பட்டத்தை வெல்லக்கூடிய பயணத்துக்குள் நுழைய முடியும். இந்தப் பயணம் சவால்கள் நிறைந்தது, சர்வதேச விதிகளை உள்ளடக்கியது. மிகக் கெடுபிடியான கட்டுப் பாடுகளைக் கடைப்பிடித்து 600 கி.மீ. தொலைவை நிர்ணயிக்கப்பட்ட 40 மணி நேரத்தில் கடந்து ‘சீனியர் ரேண்ட்னியூவர்’ பட்டத்தை வென்றிருக்கும் முதல் தமிழ்ப் பெண் உமா ஆதவன்.
கடுமையான கட்டுப்பாடுகள்
600 கி.மீ. பயணத்தில் ஒவ்வொரு மிதிவண்டியிலும் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஓர் அதிகாரப்பூர்வ ‘பிரிவெட் கார்டு’ தரப்படும். வழிமாறிச் செல்லாமல் இருக்க, சென்று திரும்ப வேண்டிய ‘ரூட் மேப்’ தரப்பட்டுவிடும். ஒரு குழுவாகக் புறப்பட்டுச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், ‘சப்போர்ட்டிங் வெகிக்கிள்’ எனப்படும் உதவும் வாகனம் பின் தொடர அனுமதி இல்லை. ஒவ்வொரு நொடியும் பங்கேற்பாளரைச் செயற்கைக்கோள் வழியாகக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணிப் பார்கள்.
50 கி.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு மையங்களில் இருக்கும் ஊழியரிடம் பிரிவெட் கார்டில் நேரத்தைக் குறிப்பிட்டுக் கையெழுத்து பெற்றுக் கொண்டு தொடரோட்டம்போல் செல்ல வேண்டும். நிர்ணயித்த நேரத்துக் குள்ளாகவே உணவுக்கும் ஓய்வுக்கும் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். புறப்பட்ட இடத்திலிருந்து இலக்கை அடைந்து பின் திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வந்து பயணத்தை முடித்தால் நாம் பி.ஆர்.எம் (BRM - Brevet des Randonneurs Mondiaux) ஆகிவிடலாம்.
அண்மையில் நடந்த 600 கி.மீ. பி.ஆர்.எம் (BRM - Brevet des Randonneurs Mondiaux) பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்கிய உமா, 40 மணி நேரத்துக்குள் ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடிக்குச் சென்று மீண்டும் திருச்சிக்குத் திரும்பி ‘சீனியர் ரேண்ட்னியூவர்’ டைட்டிலை வென்றிருக்கிறார். சென்னையில் வசிக்கும் உமாவின் சொந்த ஊர் கடலூர். பல் மருத்துவரான இவர், சென்னையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.
உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டிய கட்டாயம் உருவானதும் அவருடைய குடும்ப நண்பரும் பயிற்சியாளருமான அனில் சர்மாவின் வழிகாட்டுதலில் சைக்கிளிங் செய்யத் தொடங்கினார். கணவர், மாமியார், மகன் என அனைவரும் உற்சாகப்படுத்த, முழுமூச்சாக சைக்கிளிங்கில் இறங்கி விட்டார். “நோயை வெல்ல நான் முதன் முதலாக சைக்கிளைத் தொட்டபோது மனம் லேசானது. மிதிவண்டியை மிதிக்கத் தொடங்கியதும் கால்களுக்குக் கீழே வழுக்கிச் சென்ற பூமியைக் காணும் அதிசயம் என் பள்ளி நாட்களை நினைவூட்டியது. இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப்பின் ஒரே சீசனில் 400 கி.மீ. இலக்கைக் கடந்து ‘சீனியர் ரேண்ட்னியூவர்’ பயணத்துக்குத் தகுதிபெற்றேன்” என்கிறார் உமா.
வெல்லவைத்த முகங்கள்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சிறு நகரங்கள், கிராமத்துச் சாலைகள் எனப் பயண வழியை நிர்ணயிப்பது பங்கேற்பாளர் ஒவ்வொருவரும் தனது தேசத்தைக் குறுக்கும் நெடுக்குமாகக் காண வேண்டும்; புதிய மனிதர்களையும் மக்களையும் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக் குறிப்பிடுகிறார் உமா. “தனுஷ்கோடியை நோக்கிய பயணத்தில் எதிர்க்காற்றும் மேல்நோக்கி உயர்ந்து செல்லும் சாலைகளும் அதிகம்.
இவை எல்லாவற்றையும் கடந்து முன்னேற உத்வேகம் தந்தவை பயண வழியெங்கும் நான் சந்தித்த முகங்களே”எனும் உமாதேவி 200 உறுப்பினர்களைக் கொண்ட ‘வைபிரண்ட் வேளச்சேரி’ என்ற மிதிவண்டிக் குழுவிலிருந்து ‘சீனியர் ரேண்ட்னியூவர்’ நீண்டதூரப் பயணத்தில் கலந்துகொண்ட ஐவரில் இவர் ஒருவர் மட்டும்தான் பெண். நாடு முழுவதுமிருந்து கலந்துகொண்ட 86 பங்கேற்பாளர்களில் வெற்றிகரமாக டைட்டிலை வென்ற 24 பேரில் ஒரே பெண் உமா ஆதவன். நோயை மட்டுமல்ல; சாதனையை அடைவதற்கான தூரத்தையும் மிதித்தே சாதித்திருக்கிறார் இந்த முன்மாதிரிப் பெண்மணி.