பெண் இன்று

பெண்கள் 360: எழுத்தே வாழ்வு - பியூசி எமிசெடா

செய்திப்பிரிவு

“எனது வாழ்க்கையைப் போன்று எனது புத்தகங்களும் ‘வீழாது வாழ்வது’ எப்படி என்பதையே உணர்த்தும். விடாமல் முயலுங்கள்; வெறுமனே முயலுங்கள்; ஈடுபாடும் உறுதியும் உங்களிடம் இருக்குமானால் வெற்றி உங்களுக்கு நிச்சயம் கிட்டும்”.

- பியூசி எமிசெடா

லாகோஸ் புறநகர்ப் பகுதியில் 1944-ல் பியூசி எமிசெடா பிறந்தார். பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த அவர், பின்னாளில் நைஜீரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர் அளவுக்கு நைஜீரியாவில் வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துகளும் கொண்டாடப்பட்டதில்லை. பெண்ணிய எழுத்தாளர் என்று தான் கருதப்படுவதை அவர் விரும்பாதபோதிலும், பாலின பேதங்களையும் இன பேதங்களையும் அவை தொடர்பான பிரச்சினைகளையும் குறித்தே அவர் எழுதினார்.

16 வயதில் திருமணம் செய்துகொண்ட அவர், 1962-ல் தன்னுடைய கணவருடன் லண்டனில் குடியேறினார். நூலகத்தில் பணிபுரிந்து, தன்னுடைய ஐந்து குழந்தைகளை வளர்த்தபடி, சமூகவியல் பட்டப்படிப்பை முடித்தார். வேலை, குடும்பக் கடைமை, படிப்பு என வாழ்வில் ஓய்வற்றுச் சுழன்றபோதும் விடாமல் அவர் எழுதினார்.

அவரது எழுத்துகள் பெரும்பாலும் அவரது வீட்டின் சமையலறை மேஜையில் உருவானவையே. 16 நாவல்களை அவர் எழுதியுள்ளார். ‘தி டிட்ச்’, ‘செகண்ட் கிளாஸ் சிட்டிசன்’, ‘ஸ்லேவ் கேர்ள்’ போன்ற நாவல்கள் அவரைப் புகழின் உச்சியில் நிறுத்தின. 1986-ல் வெளிவந்த அவரது சுயசரிதையான ‘ஹெட் எபோவ் வாட்டர்’ அவரது எழுத்தின் உச்சம். எழுத்தையும் போராட்டத்தையும் வாழ்வாகக்கொண்டிருந்த அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கடந்த ஞாயிறு அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.


மனிதாபிமானமற்ற தாக்குதல்

விருத்தாசலத்தில் ஒரு பெண்ணை மின்விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பலரையும் உலுக்கியிருக்கிறது. விருத்தாசலத்தைச் சேர்ந்த கொழஞ்சி என்பவர், தன் மகளைக் காதலித்து மணந்தவரின் அம்மா செல்வியை இப்படிக் கொடுமைப்படுத்தியுள்ளார். “என் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு மகள்களையும் மில் வேலைக்கு அனுப்பிவிட்டேன்.

எனக்கு உதவ உள்ளூரில் யாரும் இல்லை. என் மகனும் கொழஞ்சியின் மகளும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இதில் நான் தலையிடவில்லை. தன் மகள் வீடு திரும்பவில்லை என்பதால், தொடர்ந்து எனக்குச் சிரமம் கொடுத்தார் கொழஞ்சி. கடந்த வாரம் ஊரில் எல்லோரும் பார்க்க என்னைக் கட்டிவைத்து அடித்து, என் புடவையைக் கிழித்து அவமானப்படுத்தினார். எனக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பதிலாக கொழஞ்சி வழக்கைச் சந்திக்க வேண்டும். என் மகனும் கொழஞ்சியின் மகளும் சுயமாக எடுத்த முடிவுக்காக என்னைக் கொடுமைப்படுத்தியதை ஏற்க முடியாது”' என அழுதுகொண்டே சொன்னார் செல்வி.


பெண்களே முடிவு செய்ய வேண்டும்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால்தான் பெண்களுக்கான சமநீதியைப் பெற முடியும். பெண்களுக்கு என்ன தேவை என்பதைப் பெண்களே முடிவுசெய்ய வேண்டும். பெண்களின் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். நம்முடைய கருத்துகள் அங்கே பதிவுசெய்யப்பட வேண்டும். இதற்குக் குறைந்தபட்சம் 30 சதவீத இட ஒதுக்கீடாவது நிச்சயம் தேவை. ஒரு சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால், எந்த ஒரு அங்கமாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினர், பெண்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 30 சதவீதம் இடமளிக்கப்பட வேண்டும். இதை அடிப்படையாக வைத்துத்தான் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திவருகிறேன். இது நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, சட்டமும் நிர்வாகமும் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆணுடைய சிந்தனை மட்டுமே வெளிப்படும்.

- கனிமொழி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்.


பெண் குழந்தைகளே பிறக்காத கிராமங்கள்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சுற்றியுள்ள சுமார் 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அவற்றில் ஒன்றுகூடப் பெண் குழந்தை இல்லை. இது பற்றிப் பேசியுள்ள சமூக சேவகி கல்பனா தாக்கூர், “இந்தக் கிராமங்களில் மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தைகூடப் பிறக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு இது வெறும் தற்செயலான விஷயம் என நினைக்கத் தோன்றவில்லை.

இந்தச் சம்பவம், பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சௌதான், உத்தரகாசியில் உள்ள கிராமங்களில் பணிபுரியும் சுகாதார ஆர்வலர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனைத்துக் கிராமங்களிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்துவரும் நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தைகூடப் பிறக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பைவ் ஸ்டார் ஹிமா தாஸ்

பி.டி. உஷாவுக்கு அடுத்து  ஓட்டப் பந்தயத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவருபவர் அசாமைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஹிமா தாஸ். பிராகில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். தபோர் போட்டியில் 200 மீ. பிரிவில் தங்கம் வென்றார். மேலும் கிளாட்னோ போட்டி, குண்ட்நோ தடகளப் போட்டி, போஸ்னன் தடகள கிராண்ட்ப்ரிக்ஸ் என சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் ஐந்து தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், ஹிமா தாஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், “சர்வதேசப் போட்டிகளில் ஐந்து தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் எனது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் தொடரில் சாதிப்பதுதான் எனது இலக்கு. அதற்காகத் தயாராகும் விதமாக இப்போட்டிகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். நான் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகளைப் படைக்க உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தேவை” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT