பெண் இன்று

இனி எல்லாம் நலமே 15: திருமணத்துக்கு முன் இது அவசியம்

செய்திப்பிரிவு

அமுதா ஹரி

திருமணம் தொடர்பாக எத்தனையோ விஷயங்களை விசாரித்து அறிந்துகொள்ளும் பலரும் உடல்நலம் குறித்துப் போதிய அக்கறை காட்டுவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் திருமணத்துக்குமுன் தன் உடல் ஆரோக்கியம் குறித்த அனைத்தையும் தெளிவு படுத்திக்கொள்ளுவது அவசியம்.

ரத்த சோகை, தைராய்டு, குறைவான எடையுடன் இருத்தல், அதிக  எடையுடன் இருத்தல் போன்றவை பொதுவான பிரச்சினை கள். இவையெல்லாம் எந்த அளவில் இருக்கின்றன என்பது பற்றித் திருமணத்துக்கு முன்பே பார்த்துவிடுவது நல்லது.  
இந்தப் பரிசோதனைகளை ஏன் திருமணத்துக்கு முன் செய்ய வேண்டும் என்றால், திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்குப்  போனதுமே பரிசோதனைகளைச் செய்ய நேர்ந்தால் அது தேவையில்லாத தர்ம சங்கடத்தைக் கொடுக்கலாம். பலருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.  

தோழிகளால் வந்த வலி

சில நேரம் திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே சிலர் கருவுற்று விடுகிறார்கள். அவர்களுக்கு  இருக்கக்கூடிய உடல்நலப் பிரச்சினைகள் குழந்தைகளையும் பாதிக்கக்கூடும். எனவே, தொற்றுகள் இருந்தால் சரிசெய்துகொள்வது, சரிசெய்யக் கூடிய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளையும்  முன்பே  சரிசெய்து விடுவது  போன்றவை ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு வழிவகுக்கும்.

தற்போது இருக்கக்கூடிய வாழ்க்கை முறையில்  திருமணத்துக்கு முன்பே ஆண்களும் பெண்களும் பாலியல் உறவில் ஈடுபடுகிறார்கள். அதனால் பால்வினை நோய்கள்,  எச்ஐவி/எய்ட்ஸ் போன்றவை ஏற்படக்கூடும்.

திருமணம் செய்யவிருக்கும் பெரும்பாலானோர் பாலியல் உறவு பற்றிய அறிதலும் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள்.  குடும்ப அமைப்புகளில் இதைப் பற்றி நாம் வெளிப்படையாகப்  பேசுவது  கிடையாது.

மணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகியிருந்த கணவனும் மனைவியும் என்னைப் பார்க்க வந்தார்கள்.  இருவருக்குமே பாலியல் பற்றிய  பெரிய அறிவு இல்லை. குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. கணவன் நெருங்கும் போதெல்லாம் வலிக்கிறது என்று சொல்லி மறுத்திருக்கிறார். கணவனும் மனைவி மேல்  பாசத்துடன் இருந்ததால்  மனைவி மறுத்ததுமே விலகியிருக்கிறார். இரண்டு பேருக்குமே உடல்ரீதியான நெருக்கம் பற்றிய புரிதல் இல்லை. பாலுறவு குறித்துத் திருமணத்துக்கு முன்னதாகத் தோழிகள் சொல்லிப் பயமுறுத்தி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் அதே எண்ணத்தில் இருந்ததால் உண்மையாக வலியை  உணர்ந்ததைவிடக் கணவன் நெருங்கி னாலே வலி வலி என்று சொல்லி இருக்கிறாள். 

வேண்டாமே விபரீதக் கற்பனை

இவர்களைப் போலவே  மற்றுமோர் இளம் தம்பதியர் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் என்னிடம் வந்தார்கள். அவர்கள் இல்லற உறவில் சரியாகத்தான் இருக்கிறார்களா என்று அவர்களுக்குப் பெரிய சந்தேகம். அந்தப் பையனும் மிகுந்த  கூச்ச சுபாவத்துடனேயே இருந்தான். “ஏம்பா, எதாவது படங்கள் எல்லாம் பார்த்ததில்லையா?” என்று கேட்டதற்கு அந்தப் பெண் பதில் சொன்னாள்: “மேடம்  அவர்  என்னைத் தவிர  யாரையும் நிமிர்ந்துகூடப்  பார்க்க மாட்டார்”

இப்படி ஒரு ரகம் என்றால், கல்யாணத்துக்கு  முன்பே பல வீடியோக்களைப் பார்த்துவிட்டுத் தன் மனைவி தன்னுடன் அப்படியெல்லாம்  இருக்க வேண்டும் என்று  நினைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் மிரட்சி அடைகிறார்கள்.

இதனால்தான் இல்லற உறவு, குழந்தைப்பேறு போன்றவை குறித்துத் திருமணத்துக்கு முன்பே ஆண்-பெண் இருவருக்கும் ஆலோசனை அவசியமாகிறது. உடலுறவு என்பது இயல்பான மனித உணர்வு. நல்ல திருமண பந்தத்துக்கு ஆரோக்கியமான பாலுறவு அவசியம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் அசிங்கம் என்று நினைத்தாலோ அதீதமாகக் கற்பனை செய்துகொண்டாலோ  சிக்கலில்தான் போய் முடியும்.

திட்டமிடுவது அவசியம்

இதேபோன்று திருமண உறவுக்கு முன்னதாக, கருத்தடை முறைகள் பற்றிய அறிவும் வேண்டும். பலரும்  முதல் குழந்தை என்பது இப்போதுதான் வேண்டுமென்று விரும்பிப் பெற்றுக்கொள்வதில்லை. உறவு நிகழ்கிறது; அதன் விளைவாகக் குழந்தை  உருவாகிவிடுகிறது. திருமணமான  இரண்டே மாதங்களில் கர்ப்பமான ஒரு தம்பதி வந்தார்கள். “இப்போது இந்தக் குழந்தை வேண்டாம்;  இந்தக் குழந்தைக்கு நாங்கள் இப்போது தயாராக இல்லை. வேலை விஷயமாக ஆறு மாதம் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது” என்றார்கள்.

இதைப் பற்றி அவர்கள் எப்போது யோசித்திருக்க வேண்டும்? உறவுக்கு முன்னதாகத்தானே?

முதல் குழந்தையைக் கலைப்பது மிகவும் தவறு. சில நேரம் இது மலட்டுத்தன்மையைக்கூட உருவாக்கலாம். உடல்ரீதியான உபாதைகள், மன உளைச்சல், கணவன் மனைவிக்குள் சண்டை எனப் பல பிரச்சினைகள் வரலாம். குழந்தை எப்போது வேண்டும் என்று இருவரும் சேர்ந்து திட்டமிடவேண்டும். திட்டமிடாமல் குழந்தை உருவாகிவிட்டால் அதைக் கலைக்கக் கூடாது. ஆணோ பெண்ணோ திருமணம் செய்வதற்கு முன்னதாகவே உடல் அமைப்பு, பாலுறவு, கருத்தடை முறைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.  பிறகு சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், கருத்தடை இல்லாவிட்டால் பாதிக்கப்படப்போவது பெண்தான். அவர்களுக்குத்தான் வேண்டாத கர்ப்பமும் மன உளைச்சலும். திருமணம்,  பாலியல் உணர்வு,  உறவு இவையெல்லாம் தானாக நிகழ்ந்துவிடும் என்று நினைத்தால் அப்படித் தானாக நிகழ்வதன் பின்விளைவுகளையும் அவர்கள்தான் எதிர்கொள்ள வேண்டும்.

ஆகவே, திருமணத்துக்குத் தயாராகிவிட்ட நிலையில் இருக்கும் ஆண்கள் - பெண்கள் இருவரும் தகுந்த மருத்துவரிடம் இது பற்றி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். இப்படிச் செய்வதால் உடல்ரீதியான பிரச்சினைகளையும்  மனரீதியான சோர்வையும்  சமூகரீதியான எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ள முடியும்.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், 
மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

SCROLL FOR NEXT