பெண் இன்று

வாசிப்பை நேசிப்போம்: வந்தியத்தேவனுடன் கனவுப் பயணம்

செய்திப்பிரிவு

புத்தகத்தில் உலகத்தைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று சொல்வார்கள். பள்ளிக்குச் சென்று பெரிய படிப்புகளைப் படிக்காவிட்டாலும் என் அப்பா அதிக அனுபவ அறிவும் புத்தக அறிவும் கொண்டிருந்தார். கலைஞரின் தமிழும் கல்கியின் ‘பொன்னியின் செல்வனும்’ மற்ற வரலாற்று நாவல்களும் எனக்கு அப்பாவின் மூலமாகத்தான் அறிமுகமாயின.

உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என் அப்பா, புத்தகத்தை எடுத்து விட்டால் தண்ணீரையும் சாப்பாட்டையும்கூட மறந்துவிடுவார். நான் பத்து வயதில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.
வார இறுதி நாட்களிலும் அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களிலும் ‘பொன்னியின் செல்வனி’ன் வந்தியத்தேவனுடனும் ராஜராஜ சோழனுடனும் பயணித்த நாட்கள் இன்றுவரை என் நெஞ்சைவிட்டு அகலாதவை.

எழுத்தாளர் பாலகுமாரனின் நாவல்களில் உள்ள ஆன்மிகமும் ஆளுமையும், சிவசங்கரியின் நாவல்களில் உள்ள பெண்களின் துணிச்சலும், தி. ஜானகிராமனின் நாவல்களில் உள்ள யதார்த்தமும்  நம்மை உணரவும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ளவும் உதவின. நான் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருப்பதால் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் தெரிந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் நான் படித்த புத்தகங்களே உதவுகின்றன.

நம் முன்னோர்களின் தொலைநோக்குப் பார்வையையும் இலக்கிய அறிவையையும் உணர்வதற்கு வாசிப்புதான் வழிகாட்டுகிறது. நம் தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதிலும் புத்தகங்களுக்குப் பங்கு உண்டு. இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கிறார்களே ஒழிய வாசிப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவதில்லை. வாசிப்பின் வழியாக நாம் பெற்ற பேரனுபவத்தை  அடுத்த தலைமுறையும் உணரச் செய்வது நம் அனைவரின் கடமை.

- சி. ஜெகதா, திருச்சி.

SCROLL FOR NEXT