பெண் இன்று

நூலகம்: சட்டங்கள் பெண்ணுக்கு சாதகமானவையா?

பி.எஸ்.அஜிதா

சட்டங்கள் பெண்களை வன்முறைகளிலிருந்து பாதுகாக்கின்றனவா, அவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கின்றனவா என்றால் நூறு சதவீதம் ஆம் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றுக்கு சமரச மையத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது பல தரப்பினரிடையே பெரும் எதிர்ப்பையும் பெற்றது. இந்நிலையில், “பாலியல் வழக்குகளில் சமரசம் செய்துகொள்ளச் சொல்வது பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சமரசம் செய்துகொள்ளுமாறு தீர்ப்பு வழங்கிய மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றத்தின் செயல் கண்டனத்துக்குரியது என்றும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

கருவாக உருவாவதில் தொடங்கி கல்லறை சென்று சேரும்வரை பெண்ணுக்கு எல்லா நிலையிலும் அச்சுறுத்தலும் வேதனையும் தொடர்ந்தபடி இருக்கிறது. பாதிக்கப்படுகிற பெண்களுக்குச் சட்டங்கள்தான் துணைநிற்க வேண்டும். ஆனால் தங்களுக்கு சட்டத்தின் துணை தேவை என்ற விழிப்புணர்வுகூட இல்லாத நிலையில்தான் இன்று பெரும்பாலான பெண்கள் இருக்கின்றனர். அப்படியே நீதி கேட்டாலும் அது உரிய நேரத்தில் கிடைத்துவிடுமா என்ற சந்தேகமும் அவர்களைப் பின்னடையச் செய்கிறது.

அப்படிச் சோர்ந்துபோகிற பெண்களுக்குச் சட்டம் குறித்த தெளிவைத் தருகிறது, ‘பெண்கள்: சட்டங்களும், தீர்ப்புகளும்’ என்ற புத்தகம். இதன் ஆசிரியர் வெ. ஜீவகுமார், வழக்கறிஞர் என்பதால் சட்ட நுணுக்கங்களை விரிவாகவும் அனைவருக்கும் புரியும்படியும் விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சம்பவமாக விவரித்து, அதில் சாதகமாக அல்லது பாதகமாக அமைந்த தீர்ப்புகள் குறித்தும் விவாதிக்கிறார். ஆண், பெண் என்ற பேதமின்றி நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்திருக்கிறவர்களுக்குள் அனிச்சையாகக் குடியிருக்கும் ஆணாதிக்க மனோபாவம் எப்படியெல்லாம் தீர்ப்பில் வெளிப்படுகிறது என்பதையும் ஜீவகுமார் சுட்டிக்காட்டியிருக்கிறார். பெண்களுக்கான சட்டங்கள் குறித்த தெளிவையும் புரிதலையும் இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது.

பெண்கள்: சட்டங்களும், தீர்ப்புகளும்
வெ. ஜீவகுமார், பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018.
தொலைபேசி: 044-24332424/24332924.

SCROLL FOR NEXT