பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது. அதன் வெளிப்பாடாகப் பெண்களுக்கென்று ‘ஷீ பஸ்’ (She Bus) என்ற பிரத்யேகப் பேருந்துகளை இயக்கக் கேரள அரசு முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே அந்த மாநிலத்தில் ‘ஷீ டாக்ஸி’ எனப்படும் பெண்களுக்கான டாக்ஸி வசதி செயல்பட்டுவருகிறது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பு பெண்களும் பயன்பெறும் வகையில் தற்போது ‘ஷீ பஸ்’ (She Bus) அறிமுகமாகிறது.
தமிழகத்தில் ‘மகளிர் மட்டும்’ பேருந்துகள் இயங்கினாலும் அவற்றில் ஆண்களே ஓட்டுநர், நடத்துநர் பணியில் இருக்கின்றனர். ஆனால் கேரளத்தில் அறிமுகமாகவிருக்கிற ‘ஷீ பஸ்’ சேவையில் ஆண்களுக்கு சுத்தமாக இடமில்லை. பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்படும் இந்தப் பேருந்தில் பெண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் பயணிக்கலாம்.
பெண்களுக்கான சிறப்பு அம்சங்கள் நிறைந்த வகையில் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட இருக்கிறது. முழுக்கக் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்தத் தாழ்தள பேருந்தில், ஊனமுற்றவர்களுக்கான சாய்வு தளமும் உண்டு. கட்டணமும் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று அந்த மாநிலச் சமூக நீதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
பெண்கள் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆண்டிலேயே கிட்டத்தட்ட 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் கிடைத்திருக் கிறார்கள். பெண்கள் டாக்ஸியில் பணிபுரியும் பெண்கள், மாதம் 25 ஆயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப் படவிருக்கிற இந்தப் பேருந்துச் சேவையால் பல பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்பதால் இதற்கு ஏக வரவேற்பு! தமிழகத்திலும் இந்தச் சேவை அறிமுகமானால் பெண்களின் பயணம் இனிதாகும்.