வெளிநாட்டுப் பயணி களுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் அந்தக் கிராமத்துப் பெண்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நம் எண்ணத்தைப் புரிந்துகொண்டவர்கள் போல, “நாங்க கிராமத்துல பொறந்திருந்தாலும் நாங்க தயாரிக்கிற பொருட்கள் வெளிநாடுகளுக்குப் போவதால் ஆங்கிலத்தையும் கத்துக்கிட்டோம்” என்கிறார்கள்.
புதுச்சேரி அருகே உள்ளது சர்வதேச நகரம் ஆரோவில். காகிதத்திலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர் கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்த மதர், அரவிந்தர், ஜெயம், எஸ்தர் மகளிர் குழுவினர். வழக்கமான வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வதுடன் தங்களுக்கு ஏற்ற வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.
இவர்களின் விருப்ப மொழியே, ‘நேற்றைய நாளிதழ் இன்றைய கலைப் பொருள்’ என்பதுதான். நாளிதழ்களில் இருந்து வண்ண வண்ணக் கலைப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
குறைந்த முதலீடு அதிக லாபம்
நாளிதழ்களைக் கொண்டு வட்ட மற்றும் சதுர வடிவிலான கூடைகள், கிண்ணங்கள், காகித நகைகள் ஆகியவற்றைச் செய்கிறார்கள். பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைகள், மாங்கொட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், தேவையில்லாத சிடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பலவிதப் பொம்மைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் செய்கின்றனர்.
இவற்றின் மீது இயற்கை வண்ணங்களைப் பூசி அலங்கரிக் கின்றனர். இவர்கள் செய்யும் பொம்மைகள் பேசாவிட்டாலும், அதைப் பார்க்கிறவர்கள் மற்றவர்களிடம் அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை.
இப்படித் தயாராகும் காகிதக் கலைப் பொருட்கள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதே போல் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலச் சந்தைகளிலும் இவர்களின் கலைப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு. ஆர்வமுள்ள வர்களுக்கு இங்கே குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விரைவில் கையடக்கப் பைகள்
“கடந்த 2005-ம் ஆண்டு ஆரோவில்லுக்கு இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டேனி-ஓர்லி தம்பதியினர் வந்தனர். ஆரோவில் கிராமச் செயல்வழிக் குழுவில் இருந்த எங்களுக்குப் பழைய பேப்பர்களைக் கொண்டு கூடைகள் செய்ய நான்கு மாதம் பயிற்சியளித்தனர். நாங்கள் தயார் செய்யும் கலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ‘வெல் பேப்பர்’ என்ற நிறுவனத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் இன்றும் துணையாக இருக்கின்றனர்” என்கிறார்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடக்கத்தில் எட்டுப் பேராக இருந்த குழுவில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 25. குழுவுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
“நாங்கள் செய்யும் வேலைக்கு நாள் ஒன்றுக்குத் தலா ரூ. 180 ஒவ்வொருவருக்கும் தரப்படும். மீதமுள்ள தொகையை வங்கிக் கணக்கில் சேமிப்போம். எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் கிடையாது. அனைவரும் இங்கே சமம். ‘வெல் பேப்பர்’ நிறுவனம் சார்பில் எங்கள் தனித்திறமையை உயர்த்திக்கொள்ளும் வகையில் ஆங்கிலம் பேசவும், யோகா செய்யவும் பயிற்சி தருகின்றனர்” என்று சொல்லும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், பழைய சேலைகளைக் கொண்டு புதுமையான கையடக்கப் பைகளைத் தயார்செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். இதுவும் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்கின்றனர் உற்சாகமாக.
படங்கள்: எம். சாம்ராஜ்.