பெண் இன்று

அம்மா என்றால் நிகரற்றவள்!

செய்திப்பிரிவு

அம்மாவைப் பற்றி ஒரே வார்த்தையில் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்த கடிதங்களைப் பார்த்து மலைத்துவிட்டோம். பலரும் அம்மா என்றால் அன்பு, கருணை, தியாகம், அர்ப்பணிப்பு என்று தாய்மையின் குணங்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். சிலர் தாய்மைக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் உறுதி, விவேகம், வலிமை ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

பரிசுக்குரிய வார்த்தைகள்

சர்வம்

ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் தாய்மையின் பரிபூரணம் நிறைந்திருக்கிறது. அம்மா இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது அம்மாவின் அன்பு. இந்த உலகம் நிலைபெற்று இயங்க அம்மாவின் அன்பே ஆதாரச் சக்தி. நாம் சோர்ந்து போகிற போது சக்தி தருகிறவள் அவளே. தாயாக, தோழியாக, வழிகாட்டியாக அவளே சர்வமுமாக இருக்கிறாள்.

- தேவி ராமலிங்கம், நெய்வேலி.

அமுதசுரபி

அன்பை அள்ளி அள்ளி கொடுக்கும் வற்றாத அமுதசுரபி. வாழ்ந்த போதும் தாழ்ந்த போதும் அம்மாவின் அன்பில் மாற்று இல்லை. எத்தனை வயதானாலும் ஆயுள் முழுவதும் அம்மாவின் அன்பு மாறாது, குறையாது.

- என். சாந்தினி, மதுரை. - எம். ஷாஜிதாபேகம், திருச்சி.

சிற்பி

ஒரு சிற்பி இரவு, பகல் பாராமல் உணவின் ருசி அறியாமல் சிற்பத்தை வடிப்பதிலேயே கண்ணாக இருப்பார். அப்படி என்னைப் பத்து மாதங்களாகத் தன் கருவறையில் தாங்கி வடித்த சிற்பி என் தாய். உயிரணுவாக இருந்த ஒரு உயிருக்கு அவளே உருவம் கொடுக்கிறாள். அதற்காக அவள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். ஊன், உறக்கம் இன்றி, தன்னலம் கருதாமல் அன்பைப் பொழியும் அன்னை ஒரு சிற்பி!

- மு.முருகேஸ்வரி, ஸ்ரீவைகுண்டம்.

நிகரற்றவள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் மன்னரின் காலில் விழலாமா என்று கேட்டார். காலில் விழத் தகுதியானவர் தாய் ஒருவரே. ஆனால் அவர் காலிலும் விழக் கூடாது என்று நபிகள் நாயகம் சொன்னார். தாய்க்கு நிகரானவள் யாருமே இல்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது. அதே போல நபிகள் நாயகத்திடம் ஒருவர், ‘நம் மனத் துயரங்களை யாரிடம் சொல்ல வேண்டும்?’ என்று கேட்டார்.

‘உன் தாயிடம் சொல்’ என்றார் நபிகள். அந்த மனிதர் மீண்டும் அவரிடம் வந்து அதே கேள்வியைக் கேட்டார். இரண்டாவது முறையும் தாயிடம் சொல் என்ற பதிலையே நபிகள் சொன்னார். மூன்றாவது முறை கேட்டபோதும் தாயைத்தான் குறிப்பிட்டார். நான்காவது முறை கேட்டபோதுதான் ‘உன் தந்தையிடம் சொல்லலாம்’ என்றார். இதிலிருந் தும் தாய்க்கு நிகர் தாயே என்பது புரிகிறது.

- ஷா. சுலைமான், 7-ம் வகுப்பு, டி.ஆர். பட்டினம், காரைக்கால்.

பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் தலா ரூ.250 பரிசு பெறுகிறார்கள்.

SCROLL FOR NEXT