நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். உங்களைப் பொறுத்தவரை நான் மாயாபஜார் இணைப்பிதழில் படம் வரைந்து அனுப்புகிறவளாகத் தோன்றலாம். ஆனால் நான் சிறுமி மட்டுமல்ல, நானும் ஒரு பெண். கடந்த ஏப்ரல் 26 அன்று வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘பேசக் கூடாத விஷயமா மாதவிடாய்?’ என்ற கட்டுரையைப் படித்தேன். ‘கம் அண்ட் சீ த பிளட் ஆன் மை ஸ்கர்ட்’ என்ற பேரணி உண்மையிலேயே நல்ல விஷயம். அந்தப் பேரணியில் பங்கேற்ற பெண்களில் பாதிப் பேராவது தங்களது மாதவிடாய் காலத்தைப் பற்றி வெளிப்படையாகச் சொல்வார்களா?
அந்தப் பேரணி குறித்து என் வகுப்புத் தோழிகளிடம் மறுநாள் சொன்னேன். சிலர் முகம் சுளித்தனர். சில பெண்கள் ஆச்சரியப்பட்டனர். ஒரு பெண்ணுக்குள் நடக்கும் மாற்றத்தைப் பற்றிப் பேசினால் பெண்களே முகம் சுளிக்கும்போது ஆண்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவர முடியும்?
தமிழக அரசு வழங்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை ஒரு பள்ளியில் புத்தகப் பையுடன் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆசிரியர்கள் வழங்குகிறார்கள். மற்றொரு பள்ளியில் அதற்கெனத் தனிக் கறுப்பு பிளாஸ்டிக் கவர் கொண்டு செல்ல வேண்டும்.
முதலில் பெண் குறித்த மரியாதையை உருவாக்க வேண்டும். இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், ‘நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்தணும்டீ, நீ ஜாகிங் போனா நாய் தொரத்தணும்டீ’ எனச் சர்வசாதாரணமாகப் பாடுகிறான். இதே பாடலை ஒரு பெண் தனது கைபேசி ரிங்டோனாக வைத்துக் கொள்கிறாள்.
மாற்றம் தொடங்க வேண்டியது பெண்களின் மனதில் இருந்துதான். அதன் பிறகுதான் மற்றதெல்லாம். இந்தக் கட்டுரையில் என் பெயரை வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
- மு. சத்யா,
அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி,
கங்கைகொண்டான், திருநெல்வேலி.