பத்தோடு பதினொன்றாக இருந்துவிடாமல் பத்தில் ஒன்றாக இருப்பதுதான் எழுபது வயது வசந்தி பாண்டுரங்கனின் அடையாளம். திருநெல்வேலி ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த இவர், தள்ளாத வயதிலும் தளராமல் ஓவியங்களை வரைகிறார். காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்களில் நவீன உத்திகளைப் புகுத்தி இவர் புதுமை படைத்துவருகிறார். சிறு வயது முதல் ஓவியங்கள் வரைந்துவரும் இவர், அதற்காக எங்கும் பயிற்சி பெற்றதில்லை என்பது ஆச்சரியம். காரணம் இவருடைய ஓவியங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் மிளிர்கின்றன.
ஆண் பாதி பெண் பாதி
கண்ணாடியில் வடிக்கப்பட்டுள்ள ஜெகன்மோகன நாராயணர் ஓவியம் இவருடைய சமீபத்திய சாதனை. வழக்கமான தஞ்சாவூர் ஓவியங்களைவிட வித்தியாசமாகவும், புதுமையாகவும், காண்போரைக் கவர்வதாகவும் இந்த ஓவியம் காட்சியளிக்கிறது. ஒருபுறம் ஆண் உருவம் மறுபுறம் பெண் உருவம் என்று தத்ரூபமாக இந்த ஓவியத்தை இவர் படைத்திருக்கிறார்.
அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்தனர். அப்போது அவர் மோகினி உருவில் அமிர்தம் வழங்கி தேவர்களைக் காப்பாற்றினார் என்பது ஐதீகம். அந்த மோகினி உருவத்தை மீண்டும் பார்க்க சிவன் ஆசைப்பட்டார். அதன்படி நாராயணரும் மோகினி அவதாரம் எடுத்தார். அந்த அழகில் மோகினியை சிவன் கொஞ்சிக்கொண்டிருந்தபோது, எதிரே பார்வதி வந்து கொண்டிருந்தார்.
அவரது கோபத்திலிருந்து தப்புவதற்காக மோகினி உருவத்திலிருந்து நாரயணர் மாறியபோது, முன்பக்கம் நாராயணராகவும், பின்பக்கம் மோகினியாகவும் இருக்கும் நிலையே ஜகன்மோகன நாராயணர் நிலை. தான் வரைந்த ஜெகன்மோகன நாரயணர் உருவத்தின் பின்னணி விவரங்களைத் தெளிவாக விளக்குகிறார் வசந்தி.
புதுமைப் பாணி
ஆந்திராவில் உள்ள ராலி என்ற இடத்திலுள்ள கோவிலில் இந்தச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிற்பத்தைக் காகிதத்தில் அவுட் லைனாக ஓவியர் கணபதி என்பவர் வரைந்து அளித்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தஞ்சாவூர் ஓவிய பாணியில் கண்ணாடியில் இந்த ஓவியத்தைத் தான் வடித்திருப்பதாகப் பெருமிதம் பொங்கக் கூறுகிறார் வசந்தி.
இந்த ஓவியம் தஞ்சாவூர் ஓவிய பாணியில், உடையாத கண்ணாடியில் தீட்டப்பட்டுள்ளது. சிற்பம் போன்று ஓவியம் அமைந்திருக்கிறது. நாராயணர் ஒரு கண்ணாடியிலும், மோகினி இன்னொரு கண்ணாடியிலும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணாகிய நாராயணருக்கும், பெண்ணாகிய மோகினிக்கும் ஒரே அவுட்லைன். இரண்டு தனிக் கண்ணாடிகளில் படம் வரையும்போது அவுட்லைனில் ஏற்படும் மயிரிழை மாற்றம்கூடத் தெளிவாக வெளிப்பட்டுவிடும். இடைவெளிகள் மிகவும் சரியாக இருக்க வேண்டும்.
உடையாத பைபர் கிளாஸ் எனப்படும் கண்ணாடியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. புடைப்பு வேலைகளுக்கு epoxy compound பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாகத் தஞ்சாவூர் ஓவியங்களில் புடைப்பு வேலைக்குப் பயன்படுத்தப்படும் கலவையை இவர் தவிர்த்துள்ளார். நாளாவட்டத்தில் இந்தக் கலவை தளர்ந்துவிடும் என்றும், அதனால் கற்கள் விழுவதோடு கீறல்களும் ஏற்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார். மாறாக epoxy compound நாளாக நாளாக இறுகுவதால் இக்குறைபாடுகள் நேர்வதில்லை.
விடா முயற்சி
கண்ணாடியில் தீட்டவென்றே சிறப்பு வண்ணங்கள் உள்ளன. இவை உலர்ந்த பின் தண்ணீர் பட்டாலும் அழிவதில்லை. அசல் 22 கேரட் தங்க ரேக்குகளையும், தஞ்சாவூர் ஓவியத்துக்கென்றே உரித்தான கற்களையும் பயன்படுத்தியுள்ளார். தீட்டப்பட்டுள்ள ஓவியங்களின் வரைபடங்களை முதலில் காகிதத்தில் வரைந்து பின்னர் கண்ணாடிக்கு அடியில் வைத்து அவுட்லைன் வரைந்துள்ளார். மேல்புறம் புடைப்பு வேலைப்பாடுகள் செய்து, அலங்கார வேலைப்பாடுகளில் நகைகள் பதித்தபின், அவை உலர்வதற்கு முன் நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்துள்ளார்.
உலர்ந்த பின் தங்க ரேக்குகளை ஒட்டி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மறுபடியும் பதிந்துள்ளார். அனைத்தும் முடிந்த பின் பின்பக்கம் பொருத்தமான வண்ணங்களைத் தீட்டி ஓவியத்தை முடித்துள்ளார். முதலில் காகிதத்தில் படத்தை வரைவதற்கு மட்டும் மூன்று வாரங்கள் ஆகியுள்ளன. பின்னர் மூன்று மாதங்களாக இரு புறங்களிலும் வண்ணம் பூசியுள்ளார்.
புது முயற்சியாகக் கண்ணாடியில் இரு பக்கங்களிலும் உள்ள ஜகன்மோகன நாராயணர் படம், வயது காரணமாகத் தனக்கு ஏற்பட்டுள்ள கண் குறைபாட்டையும் மீறி, மிகவும் நல்ல முறையில் அமைந்ததற்கு குருவருளும், திருவருளும் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என உணர்ச்சி மேலிடக் கூறுகிறார் வசந்தி.
“என்னுடைய மூணு பெண்களும் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்காங்க, பேரனும் பேத்தியும் இக்கலையைக் கத்துக்கிறாங்க. இதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தருகிறது” என்று புளகாங்கிதத்துடன் சொல்லி முடித்தார் வசந்தி. அவரை விட்டுக் கிளம்பிய பின்னர் மெல்ல மெல்ல அவரது உருவம் மறைந்து அவர் தீட்டிய ஜகன்மோகன நாராயணர் ஓவியம் மனதை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
படங்கள்: மு. லெட்சுமி அருண்