அது ஒரு மாலை நேரம். தஞ்சை சங்கம் ஹோட்டலில் ‘பெய்ஜிங் மேஜிக்’ சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த உணவகத்துக்குள் நுழைந்த அடுத்த விநாடி சீனத் தேசத்துக்குள் இருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.
சைனீஸ் படங்களில் ஒலிப்பது போன்ற மூங்கில் இசைக் கருவிகளின் தீவிர இசை, மிரட்டும் டிராகன் உருவம், சீனப் பாணி கூரை, விளக்குகள், சாப் ஸ்டிக்ஸ் எனச் சகலமும் சீனா மயம். இந்தியாவின் துரித உணவகங்களில் பார்த்த உணவு வகைகளை அங்கே காண முடிந்தது. ஆனால் சுவையில் இவை அசத்தலாக இருந்தன.
நமது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட தலைமை செஃப் ஆரோக்கியராஜ், “நாங்கள் செய்வது ஒரிஜினல் சைனீஸ் உணவு. சீனாவின் முக்கிய மாகாணங்களான ஹூனான், ஷாங்காய், கான்டோன், சுச்சுவான், ஃப்யூகியான் பகுதிகளின் புகழ்பெற்ற உணவு வகைகளை அனுபவம் வாய்ந்த சைனீஸ் சமையல் கலைஞர்களைக் கொண்டு மணம், சுவை, தரம் மாறாமல் தயாரிக்கிறோம். இவற்றுக்கான மூலப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்களைச் சீனாவிலிருந்து வரவழைக்கிறோம்.
இங்குத் தயாரிக்கப்படும் ஹூனான் ரைஸ், ஷாங்காய் ரைஸ் நூடுல்ஸ், ஹாங்காங் எக் டார்ட், புக்கெட் ஃபிஷ், டிராகன் ரோல், சிக்கன் மமூஸ், மாஞ்சாவ் சூப் போன்றவற்றுக்கு நல்ல வரவேற்பு” என்றார்.
சைனீஸ் உணவு ஸ்பெஷலிஸ்ட் ஓம்பிரகாஷ், “இந்தியாவில் செய்யப்படும் சைனீஸ் வகைகள் ‘இந்தோ சைனீஸ்’ வகையைச் சேர்ந்தவை. பெரும்பாலும் இவை முறையாகச் செய்யப்படுவதில்லை. அது, உடலுக்கும் நல்லதல்ல. இங்கே நாங்கள் சீனாவில் இருந்து பெறப்படும் பொருட்களை வைத்துச் சமைப்பதால் அசல் சீன உணவின் ருசி கிடைக்கிறது” என்கிறார்.
“இந்த ‘பெய்ஜிங் மேஜிக்’ சைனீஸ் உணவுத் திருவிழாவைப் போன்றே, ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை வெவ்வேறு தலைப்புகளில் வேவ்வேறு பகுதிகளில் உணவுத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்” என்கிறார் உணவக மேலாளர்களில் ஒருவரான நவீன்.
எந்த உணவாக இருந்தாலும் அந்தந்தப் பகுதிக்கே உரிய பக்குவத்தோடு செய்யப்படும்போதுதான் முழுமையடைகிறது என்பதை இந்த உணவுத் திருவிழா உணர்த்தியது.
படங்கள்: சி. கதிரவன்