பெண் இன்று

அடையாளம் தந்த கைவினைக் கலை

செய்திப்பிரிவு

கலைகள் மீதான காதல், உமா சூரியநாராயணனை கிராஃப்ட் ஆசிரியராக உயர்த்தியிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த உமாவுக்குச் சிறு வயது முதலே ஓவியங்கள் வரைவதிலும் கலைப் பொருட்களைச் செய்வதிலும் ஆர்வம் அதிகம்.

தந்தையின் வேலை நிமித்தமாக அனைவரும் கொல்கத்தாவில் குடியேறினர். பள்ளி நாட்களில் வார இதழ்களைப் பார்த்துப் படங்கள் வரைவார் உமா. கம்பளி நூலில் ஸ்வெட்டர், சால்வை ஆகியவற்றையும் பின்னுவார்.

“நாங்க கொல்கத்தாவில் இருந்தபோது மாயா சித்ராலயாவில் அஞ்சல் வழியில் இரண்டு வருட ஓவியப் பயிற்சியை முடித்தேன்” என்று சொல்லும் உமா, கைவினைக் கலைகளை யாரிடமும் பயின்றதில்லை. தன் கற்பனையில் தோன்றுவதை எல்லாம் கலைப் பொருளாக வடித்தெடுக்கும் வல்லமை உமாவுக்கு உண்டு.

“நான் ஸ்கூல் படிக்கும்போது லீவு நாட்களை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியா செய் அப்படின்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. நான் கிராஃப்ட் கத்துக்க அம்மாவின் இந்த உந்துதலும் ஒரு காரணம்” என்கிற உமா, திருமணத்துக்குப் பிறகு சென்னைவாசியாகிவிட்டார். மகன் ஓரளவு வளர்ந்த பிறகு முழுமூச்சாகக் கைவினைக் கலையில் இறங்கிவிட்டார்.

பானைகளில் விதவிதமான ஓவியங்களை வரைவது, கண்ணாடியில் ஓவியம் தீட்டுவது, தேவையில்லை என்று தூக்கி ஏறியும் பொருட்களை வைத்துக் கலைப் பொருட்களை உருவாக்குவது என்று இவரது கலைப் பயணம் தொடர்ந்தது. கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னை மயிலாப்பூர் பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் கிராஃப்ட் ஆசியராகப் பணியாற்றிவருகிறார்.

“இதுவரை நான் செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்தததில்லை. தெரிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். என் கணவர், கலிபோர்னியாவில் வசிக்கும் என் மகன், மருமகள் என அனைவரும் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். என் மருமகள் நான் வரைந்த தஞ்சாவூர் ஓவியங்களை கலிபோர்னியாவில் விற்பனை செய்ததுடன் இன்னும் நிறைய வரைந்து அனுப்பச் சொல்லியிருக்கிறாள்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் உமா.

தற்போது வீட்டிலும் கைவினைக் கலை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கைவினைப் பொருட்களின் விற்பனையில் கவனம் செலுத்த இருப்பதாகச் சொல்கிறார் உமா.

SCROLL FOR NEXT