ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு ஓட்டப் பயிற்சி அளிப்பது இயல்பு. ஆனால் அந்தக் குழந்தையுடன் சேர்த்து குழந்தையின் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என குடும்பத்துக்கே பயிற்சியளிப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை கே.கே.நகர், பத்மாசேஷாத்ரி பள்ளி ஆசிரியை நந்தினி அசோக்குமார்தான் இப்படியொரு வித்தியாசமான பயிற்சியை அளித்துவருகிறார்.
“ஓட்டப் பயிற்சியை என்னோடதான் செய்யணும்னு குழந்தைங்ககிட்ட நான் சொல்லமாட்டேன். உங்க அப்பா, அம்மாவோட ஓடணும்னு சொல்வேன். இப்போல்லாம் சின்ன குழந்தைங்களுக்கே உடல் பருமன் பிரச்சினை வருது. காரணம் மாறிவரும் நம்மோட உணவுப் பழக்கம். அதனால ஓடினா உடம்பு வலிமையாகும்னு சொல்வேன். பாடம் நடத்தறப்பவே ஓட்டப் பயிற்சியால நம்மோட உடம்புக்கு கிடைக்கிற நல்ல விஷயங் களையும் சின்னச் சின்னதா எடுத்துச் சொல்வேன்” என்கிறார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நந்தினி.
‘டீச்சரும் நம்பளோட ஓடிவர்றாங்க’ என்னும் பெருமையே பல குழந்தைகள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்குக் காரணமாகியிருக்கிறது. நந்தினியின் கணவர் அசோக்குமார், மகள், மகன் என ஒரு குடும்பமாக ஓடுகின்றனர்.
சென்னை ரன்னர்ஸ் பில்லர் பேசர்ஸில் 2013-ல் இணைந்த நந்தினி, இதுவரை 10 அரை மராத்தான், 2 முழு மராத்தான் பந்தயங்களில் ஓடியிருக்கிறார். “அரை மராத்தான் என்பது 21.1 கி.மீ. தொலைவும் முழு மராத்தான் என்பது 42 கி.மீ. தொலைவும் கொண்டது. மராத்தான் போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை ஓடிமுடிப்பதே பெரிய சவால்தான்” என்னும் நந்தினி மும்பையிலும், பெங்களூருவிலும் நடந்த முழு மராத்தான் போட்டிகளில் வெற்றிகரமாக ஓடிமுடித்ததற்காகப் பதக்கங்களை வென்றிருக்கிறார். EQFI (Education Quality Foundation of India) வழங்கும் சிறந்த ஆசிரியைக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
“4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் திறனையறிந்து பயிற்சி தருவோம். இவர்களைவிட வயதில் பெரிய மாணவர்களுக்கு 2 முதல் 4 கி.மீ வரை அறிவுறுத்துவோம். பிரெட், பிஸ்கட் போன்றவற்றை உண்டபிறகே பயிற்சியில் ஈடுபடுத்துவோம். ஓட்டத்தைத் தொடங்குவதற்கு முன் சில மூச்சுப் பயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் செய்யச் சொல்வோம். பெரும்பாலும் சிறிய தொலைவுக்கு ஓடும் மாரத்தான் பந்தயங்களில் அவர்களோடு சேர்ந்து நானும் ஓடுவேன்” என்னும் நந்தினிக்கு சைக்கிள் ஓட்டுவதும் நடனமும் பிடித்த பொழுதுபோக்கு.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறும் டியூயத்லான் (5 கி.மீ. ஓட்டத்துக்குப்பின் 22 கி.மீ. சைக்கிள் ஓட்டியபின் 2.5 கி.மீ மீண்டும் ஓட வேண்டும்) என்னும் போட்டிக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். படிப்பு மட்டுமல்ல, ஆரோக்கியமும் வாழ்க்கைக்குத் தேவை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதில் மகிழ்ச்சி என்கிறார் நந்தினி.