பெண் இன்று

இளமை தரும் லெட்யூஸ்

ஷங்கர்

நம்மில் பெரும்பாலோர் எடை குறைப்பைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறோம். அந்த வகையில் லெட்யூஸ் பெரிதும் உதவும்.

ஒரு கப் வெட்டப்பட்ட லெட்யூஸைச் சாப்பிடும்போது 12 கலோரி மட்டுமே நம் உடலில் கூடும். அதனால் லெட்யூஸை சாப்பிட்டு எடையைக் குறைப் பதும் பராமரிப்பதும் எளிது.

லெட்யூஸ் நிறைய நார்ச்சத்தும், செல்லுலோஸும் கொண்டது. வயிற்றை நிரப்புவதுடன், நார்ச்சத்தும் அதிகம் கொண்ட உணவென்பதால் செரிமானத்தையும் நேர்செய்கிறது. லெட்யூஸில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள பித்த உப்பையும் அகற்றவல்லது. இதன் மூலம் உடலின் கொழுப்பும் அகலும்.

லெட்யூஸில் உள்ள வைட்டமின் சியூம் பீட்டா கரோட்டினும் இதயத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. லெட்யூஸ் இலைக்கோஸில் 20 சதவீதம் புரதச்சத்தும் உள்ளது.

லெட்யூஸ் இலைக்கோசை வெட்டும்போது வரும் வெள்ளைத் திரவம் லாக்டுகாரியம் என்றழைக்கப்படுகிறது. இந்தத் திரவம் உடலின் களைப்பைப் அகற்றி நிம்மதியாக உறங்கச்செய்யும் அம்சத்தைக் கொண்டுள்ளது. லெட்யூஸ் இலைக்கோசை வெறுமனே தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்றாலே உடலுக்கு நல்லதுதான்.

லெட்யூஸில் உள்ள தாதுச் சத்துகள் உடலில் உள்ள நஞ்சை நீக்கும் வல்லமை வாய்ந்தவை. உடலில் அமில - கார சமநிலையையும் இது பராமரிக்கும். இதன் மூலம் அதிக ஆற்றல், தெளிவான சிந்தனையோட்டம், ஆழமான உறக்கம், இளமையான தேகம் போன்றவை கிடைக்கும்.

மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், சர்க்கரைக் குறியீடும் குறைவு. நீரிழிவு நோயுள்ளவர்கள் இதைத் தேவையான அளவு பயமின்றிச் சாப்பிடலாம். லெட்யூஸில் பல வகைகள் உண்டு. ரோமெய்ன், கிறிஸ்ப்ஹெட், பட்டர்ஹெட், ரெட் அண்ட் கிரீன் லீஃப் ஆகியவை சில வகைகள். ரோமெய்ன் வகை பொதுவாக கிடைப்பது.

SCROLL FOR NEXT