* குளிர் பானங்கள் மூலமும் குளிர்ச்சி தரும் உணவு வகைகள் மூலமும் வெயிலில் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வித்தையைத் தெரிந்துகொண்டால் கோடை காலத்தைக் குதூகலத்துடன் கழிக்கலாம்.
* எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு மடங்கு சர்க்கரையைக் கலந்து ஐஸ் டிரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவையான போது ஒரு டம்ளர் நீரில் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கியூப்களைக் கலந்து பருகலாம்.
* குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் தரும்போது சிட்டிகை உப்பும் மிளகுத் தூளும் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது.
* தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமத்தைத் தாளித்துச் சேர்த்தால் வாசனையாகவும் இருக்கும். செரிமானத்தையும் அதிகரிக்கும்.
* இரண்டு டீஸ்பூன் ஜாம் எடுத்து மிக்ஸியில் எடுத்துச் சிறிதளவு பால் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு தேவையான பால் சேர்த்து நுரை வர அடித்து, சர்க்கரை சேர்த்தால் சுவையான மில் ஷேக் தயார். இதைக் குழந்தைகள் விரும்பி அருந்துவர்.
கரகர மொறுமொறு வடாம்
* வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.
* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.
* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.
* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
- என். நஜிமாபேகம், டி.ஆர். பட்டினம்