பெண் இன்று

காகிதக் கலைக்கு ஐநூறு வயது!

க்ருஷ்ணி

ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் போதும், ஒரே வருடத்தில் ஒரு கலையில் நிபுணத்துவம் பெற்றுவிடலாம் என்பதற்கு உதாரணம் கோயம்புத்தூரைச் சேர்ந்த கவிதாமணி. இவர் பள்ளி நாட்களிலேயே விதவிதமான பொம்மைகள் செய்து, தன் திறமைக்கு உருவம் கொடுத்தவர்.

மேற்படிப்பு, வேலை, திருமணம் என்று அடுத்தடுத்து தொடர்ந்த பயணத்தில் கலைப் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது. தன் கணவரின் பணி நிமித்தம் சென்னையில் குடியேறிய கவிதாமணி, அலுவலகத்துக்கான பயண நேரம் அதிகமாக இருந்ததால் வேலையைத் துறந்தார்.

வீடு, அலுவலகம் என்று எப்போதும் பரபரப்பாக இருந்தவர், வீட்டில் இருக்கும்போதும் பயனுள்ள வகையில் நேரத்தைத் திட்டமிட நினைத்தார். அப்போது அவருடைய தோழி ஒருவர், காகிதத்தில் கலையை வெளிப்படுத்தும் க்வில்லிங் பற்றி சொன்னார். கவிதாவும் உடனே இணையதளத்தில் க்வில்லிங் கலை பற்றித் தேடினார்.

தற்போது பல வண்ணக் காகிதச் சுருள்களை வைத்துச் செய்யப்படும் க்வில்லிங் கலை 500 ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் கவிதாவின் ஆர்வத்தைத் தூண்டியது. தகவல்களுடன் செய்முறையையும் இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்துகொண்டார். ஆரம்பத்தில் சிறு சிறு க்வில்லிங் கிராஃப்ட் செய்தவர், இன்று பலவித வடிவங்களைச் செய்து அசத்துகிறார்.

புராதன கலை

“இந்தக் கலையோட புராதனம்தான் அதன்மேல எனக்கு ஆர்வம் வர காரணமா இருந்தது. செய்முறையைத் தெரிந்துகொண்டேனே தவிர அதற்கான மூலப் பொருட்கள் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தெரியாது. என் கணவர்தான் பல இடங்களிலும் தேடியலைந்து பொருட்கள் வாங்கித் தந்தார்.

நான் செய்கிற வடிவங்களில் மாறுதல் சொல்வதுடன், புது வடிவங்களுக்கான ஆலோசனையும் சொல்வார்” என்று சொல்லும் கவிதாமணி, தான் செய்கிற க்வில்லிங் பொருட்களைத் தன் முகநூல் பக்கத்தில் உடனுக்குடன் பதிவிடுகிறார். அதைப் பார்த்துவிட்டு நண்பர்கள் சொல்கிற ஆலோசனைகளையும் சேர்த்துத் தன் கலைக்கு மெருகேற்றுகிறார்.

“இதுவரை கிராஃப்ட் வகுப்பு எடுத்ததில்லை. கோடை விடுமுறையின்போது பள்ளிக் குழந்தைகளுக்கு க்வில்லிங் வகுப்பு எடுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்று சொல்கிறார். வருமானத்துக்கான திறவுகோலாகத் தன் கலையை இதுவரை பயன்படுத்தியதில்லை என்று சொல்லும் கவிதா, தான் செய்யும் கைவினைப் பொருட்களை நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழ்வதாகச் சொல்கிறார்.

கேட்கிற நண்பர்களுக்கு அவர்கள் விரும்பும் வடிவங்களைச் செய்து தரும் கவிதா, க்வில்லிங்கில் அற்புதமான வடிவங்களைச் சாத்தியப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

படங்கள்: ஜெ. மனோகரன்

SCROLL FOR NEXT