திருநெல்வேலி அருகே உள்ள மேலகருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, இன்று பேர் சொல்லும் பியூட்டிஷியனாக உயர்ந்திருக்கிறார். ஹைதராபாத்தில் ஹைடெக் சலூன் நடத்தி வரும் இவர், பலருக்கு வழிகாட்டும் தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக ஒரு மாதம் மகளிருக்கான மேம்படுத்தப்பட்ட அழகுக் கலைப் பயிற்சியைப் பெற்றார் சந்தியா. அதுதான் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்.
சந்தியாவின் பியூட்டிஷியன் கனவுக்கு ஆரம்பத்தில் அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. பியூட்டிஷியன் பயிற்சி பெற்று, சென்னையில் இரண்டரை ஆண்டுகள் பியூட்டிஷியனாகச் சாதித்து காட்டும் வரை இவர் குடும்பத்தில் இருந்து யாரும் பேசவில்லை. பின்னர்தான் சந்தியாவின் தளராத முயற்சியையும் சாதிக்கும் திறமையையும் குடும்பத்தினர் கண்டுகொண்டனர். ஐந்து மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் ‘தி மேக் ஓவர் சலூன்’ என்ற அழகு நிலையத்தைத் தொடங்கியிருக்கிறார். இவரது நிர்வாகத்தின் கீழ் பலர் பணிபுரிகின்றனர்.
“கிராமத்தில் சாதாரண ஹோட்டல் நடத்துபவரின் மகள் நான். ஃபேஷன் டிசைனிங் முடித்திருந்தேன். 1995-ம் ஆண்டு புனேவில் தங்கியிருந்தபோது வெள்ளத்தில் எனது படிப்புச் சான்றிதழ்கள் எல்லாமே அடித்துச் செல்லப்பட்டன. வெறுங்கையுடன் ஊருக்கு வந்து சேர்ந்த எனக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை. பின்னர்தான் ஐ.ஓ.பி. பயிற்சி நிலையத்தில் ஒரு மாதம் பியூட்டிஷியன் பயிற்சி பெற்றேன்” என்று சொல்லும் சந்தியா, சான்றிதழ் பெறுவதற்காகவே பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறார். ஆனால் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்ற உத்வேகம் பயிற்சியின்போது வந்தது. தொடர்ந்து அங்கேயே பியூட்டிஷியன் பயிற்சியாளராகும் அளவுக்கு முன்னேறினார். சென்னையில் பணியாற்றியபோது திரைத்துரையைச் சேர்ந்தவர்களிடம் ஒப்பனை கலைஞராகப் பணியாற்றியிருக்கிறார்.
“மாதம் கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு என் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 10 கிளைகளைத் தொடங்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறேன்’’ என்கிறார் சந்தியா.